போஸ்டர் அக்கப்போர்-மத சின்னத்தை வைத்து மோதும் கட்சியினர்
தமிழர் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது வழக்கம். தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு இந்த பொங்கலுக்கான பரிசு தொகுப்பை மட்டும் வழங்கி இருக்கிறது, பரிசுத் தொகையை வழங்கவில்லை. மேலும் இதற்கு காரணமாக தமிழ்நாடு நிதி நிலையைச் சுட்டிக்காட்டி உள்ளது தமிழ்நாடு அரசு.
இதை கடுமையாக விமர்சித்து இருக்கக்கூடிய எதிர்க்கட்சியான அதிமுக, திமுக அரசு சொன்ன வாக்குறுதியையும் நிறை வேற்றவில்லை. பொங்கல் பரிசுத் தொகையையும் இந்தாண்டு வழங்கவில்லை, விடியல் அரசு என்று மக்கள் வாக்களிக்க, இது விடியாத அரசாக இருக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த விமர்சனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போஸ்டர்கள் அடித்து தமிழகம் முழுவதும் வீதி வீதியாக ஓட்டத் தொடங்கினார். இப்படி திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் திமுக அரசு காவல் துறையினர் மூலமாக போஸ்டர்கள் அடிப்பதை தடுக்க போஸ்டர் அடிக்கும் லித்தோஸ் நிறுவனங்களில் தமிழக அரசை விமர்சித்து போஸ்டர்களை அடிக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை வாளிணிமொழியாக பிறப்பித்தது.மேலும் சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் காவல்துறையினர் கிழிக்க தொடங்கினார். இதைத்தொடர்ந்து அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரான ப.குமார் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். போஸ்டரை ஒவ்வொரு கிளை செயலாளர்களும், பகுதி செயலாளர்களும், நிர்வாகிகளும் நேரடியாக சென்று அவரவர் பகுதிகளில் ஒட்டவேண்டும் என்று உத்தர விட்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து அதிமுகவினர் போஸ்டர்களை வீதி வீதியாக ஓட்ட தொடங் கினார். மேலும் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலரும குடமுருட்டி சேகர் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நாமத்தை விமர்சன பொருளாக ஆக்கி அதிமுகவினர் போஸ்டர் அடித்து இருக்கின்றனர். இப்படி மத சின்னத்தை அவமானப்படுத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இழிவுபடுத்தியும் இருக்கின்றனர்.
இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.