அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ! படம்பிடித்த போட்டோகிராபர்கள் மீது தாக்குதல் !
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ! படம்பிடித்த போட்டோகிராபர்கள் மீது தாக்குதல் ! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கடத்தூர் MCS நாயுடு திருமண மண்டபத்தில் அக்டோபர் 18 அன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான் கே.பி. அன்பழகன் தலைமை வகித்தார்.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.. சிங்காரம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மற்றும் தொகுதியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக நிர்வாகிகளிடையே கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது. இதனை படம் பிடித்த தினகரன் நாளிதழ், மற்றும் வெளிச்சம் டிவி கேமரா மேன்களின் கேமராக்கள் மற்றும் செல்போன்களை, மடதஹள்ளி அதிமுக கிளைக் செயலாளர் தர்மா அவரின் நண்பர் தீனா ஆகியோர் பறித்துக்கொண்டு கேமரா மேன்களான உதயகுமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சட்டையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சியினரின் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் ஆதரவளார்களும், தற்போதைய எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனை படம்பிடித்த ஊடகத்தினரை கடத்தூர் பேரூர் கழகசெயலாளர் சந்தோஷ் மற்றும் முன்னாள் நகர செயலாளர் சசிகுமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் , தர்மன் மற்றும் தீனா ஆகியோர் தாக்கினர். அங்கிருந்து மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் அதனை கண்டுக்கவே இல்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணியில் வெற்றிபெற்ற அனைவரும் வன்னியர் சமூகத்தினர்தான். வேளாளர்களான முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் மற்றும் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் ஆகியோரை ஓரங்கட்டி வைத்துள்ளார். காரணம், மாவட்டத்தின் சமூகத்தை சேர்ந்த தற்போதைய எம்எல்ஏ கோவிந்தசாமி , வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தனக்கே சீட் கிடைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் சமூகத்தினரை சமாதானம் செய்ய , அவரை பாலக்கோடு தொகுதி ஆலோசனை கூட்டத்தில் முன்னிலைப்படுத்தி வருகிறார். அப்படினா அங்குள்ள கொங்கு வேளாளர் ஓட்டுகள் மட்டும் வேண்டும். அவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிட கூடாது என நினைக்கிறார். சாதி அரசியல்தான் தர்மபுரி மாவட்டத்தில் மேலோங்கி நிற்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வன்னியர்களும் தலித்களும் நிறைந்த தொகுதி. வேளாளர்களும் கணிசமாக உள்ளனர். ஆனால், வன்னியர் சமுதாயத்தினரை தவிர்த்து மற்ற அனைத்து சமூகத்தினருக்கு எந்த இடத்திலும் அதிகாரம் வழங்கப்படவில்லை” என்கிறார்கள்.
“ எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே சிங்காரம் கட்சியின் மூத்த நிர்வாகி. அம்மா ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தவர். கேபி அன்பழகன் அதிகாரத்திற்கு வந்தது முதல் வன்னியர் சமுதாயத்தை தவிர்த்து மற்ற சமூகத்தின் நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டார். இந்த நிலையே தொடர்ந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி நிச்சயம் அதிமுக தோற்கும் தலைமை தலையீடு செய்து சரி செய்ய வேண்டும் “ என்கிறார்கள்.
இதனிடையே நிருபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய அதிமுகவினரை கண்டித்து , கடத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சார்பில் நேற்றிரவு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த கடத்தூர் போலீஸார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் , நிருபர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்த கையோடு தாக்கிய இருவரை தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இதுசம்பந்தமாக தர்மபுரி மாவட்ட ஊடகவியலாளர்களும் , பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி விசிகவினரும் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமியை கண்டித்து அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
– மணிகண்டன்
மிகச்சரியான தரமான செய்தி நன்றியும் வாழ்த்துக்களும் 👏🏽👌🏾💐