தமிழக இளைஞர்களை குறி வைத்து மறைமுக ‘அட்டாக்’ வேடிக்கை பார்க்கும் கட்சித்தலைவர்கள்
- சாவித்திரி கண்ணன்
ஔவையார் என்ன சொன்னார்னா….?
வரப்பு உயர நீர் உயரும்.. நீர் உயர…
பாரதியார் என்ன சொன்னார்னா….?
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்..ஆலைகள் வைப்போம்,
நல்ல கல்வி சாலைகள் வைப்போம்..
தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்துக் கொண்டு,
பொருளாதாரத்தை முடக்கிவிட்டு,
தமிழ் பற்றி பல இடங்களில் மோடி பேசுவது ஏற்புடையதாக இருக்காது!
பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு துறைகளில் கடை நிலை ஊழியர் பணியிடங்களுக்கு கூட வட மாநிலத்தவர்களே சுமார் 90 சதவிகித இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்! அதுவும், அஞ்சல்துறையில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மிக அதிகம்! இது இப்போதும் தடையின்றி தொடர்வது எப்படி? தற்போது கூட அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணியில் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதற்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மண் சார்ந்த மக்களுக்குத் தான் இதுவரை கடை நிலை ஊழியர் பணியிடங்கள் வழங்கப்பட்டு வந்தன! அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்! ஆனால் அது தற்போது தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது! தமிழக அரசின் தலைமை செயலகத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியரே கூட வட இந்தியராக உள்ளனர். தமிழில் முகவரி எழுதி தந்தால் இங்கிலிஸில் எழுதி தரக் கேட்கிறார். தமிழகத்தின் பல போஸ்டல் அலுவலகங்களிலும் இது தான் நிலைமை!
இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையில் தமிழ் நாட்டில் தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022 வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை இது. மத்திய பணியாளர் தேர்வு (Staff Selection Commission) 2018 அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள். பெயர்களை வாசித்தால் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா இப்படியே நூற்றுக்கணக்கில் உள்ளது. கண்ணை விரித்து விரித்து தேடினால் எங்காவது முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என்ற ஒரு சில தமிழ்ப் பெயர்கள் மட்டுமே உள்ளன. இவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ள 57 அஞ்சல் கோட்டங்களில் சிற்றூர்களில் உள்ள தபால்களை பிரித்துத்தரப் போகிறார்கள். முகவரிகளையாவது வாசிக்க முடியுமா இவர்களால். நாம் இந்தியர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால் மக்கள் சேவை எனும் போது மாநில மொழி தேர்ச்சி அவசியம் அல்லவா? வேலைவாய்ப்பு எனும் போது எல்லாவற்றையும் இந்தி பேசும் மாநிலங்களே தட்டிச் செல்கிற வகையில் தேர்வு முறைமை இருப்பது நியாயமா? எனக் கேட்டுள்ளார்.
இதை ஏதோ ஒரு படை எடுப்பை போல பாஜக அரசு திட்டமிட்டு வடஇந்தியர்களை தமிழகத்தில் நாள்தோறும் தமிழகத்திற்குள் திணித்து வருகிறது. ரயில்வே பணி இடங்களிலும் இந்த நிலைமை தான் உள்ளது. அதுவும் குறிப்பாக அஞ்சல்துறையில் முகவரிகளை வாசிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் தேர்வு வைக்கப்படுகிறது. அந்த தேர்வில் தமிழில் அ,ஆ கூட தெரியாத வடஇந்தியர்கள் முதலிடம் பெற்று வரும் சூழ்ச்சியும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
2017 மார்ச் மாதம் இது போல அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வு முடிவு வெளியானது. அதில் அஞ்சல் துறைப் பணியாளர்களுக்கான தமிழ்த்தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தபால்துறையில் போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியாளர்களுக்கான முடிவுகளில், தமிழ்ப் பாடத்தில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் தினேஷ் 25க்கு 24 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ராகுல் என்ற ஹரியானாவைச் சேர்ந்தவர் 22 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியானபின், தமிழ் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்தனர். தமிழ்ப் பிரிவில் எழுவாய்த் தொடர், வினைத் தொடர், கலவை, கூட்டு வாக்கியங்கள், வாக்கிய மாற்றங்கள், அணிகள், பழமொழிகள், வட்டார வழக்கில் உள்ள சொற்றொடர்கள் என கேள்விகள் இடம்பெற்று இருந்தது. இது தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்களையே திணறடித்த நிலையில் வடஇந்திய மாணவர்கள் எப்படி வெற்றி பெற்று இருக்க முடியும் என அறிய விரும்பி நமது மாணவர்கள் அந்த மாணவர்களின் செல்பேசி எண்ணை கண்டடைந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேசினால், அவர்களால் ஓரிரு வார்த்தை கூட தமிழ் தெரியவில்லை என தெரிய வந்தது.
ஆக, திட்டமிட்டே இப்படியான சதி செயல்கள் நடைபெறுகின்றன என்பது அப்போதே தெரிய வந்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அப்போது அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்ததால் அன்றைய அதிமுக அரசு இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. ஆனால், அவை இப்போதும் தொடர்வது தான் வேதனையளிக்கிறது. இதே போல அஞ்சல்துறையில் இருந்தே ஒட்டுமொத்தாக தமிழை அகற்றும் முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
அஞ்சல் துறையில் பணவிடை தமிழில் அச்சடிக் கப்பட்டு வந்தது. ஆனால் மின்னμ படிவங்கள் வந்தவுடன் பணவிடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்து தல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. ஆனால், திடீரென்று அதை நீக்கினார்கள். அப்போதும் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
வணிக நோக்கங்களுக்காக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தமிழில் உரையாட, தமிழில் செய்தி பரிமாற தொழில்நுட்ப ஏற்பாடுகளை தருகிறார்கள். ஆனால் ஒரு அரசுத்துறை, சாதாரண மக்களின் இதயநாளமாக விளங்க வேண்டிய துறை மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை, லாப நோக்கிலும் கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா? பாரபட்சம் என்பதா? திணிப்பு என்பதா? முதலாவதாக, நமது தேசம் மொழிப் பன்மைத்துவம் வாய்ந்தது. அரசு அலுவலகங்கள் இந்த பேருண்மையை உள்வாங்கி தங்களை அμகும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து படிவங்களை மீண்டும் தமிழில் தந்தனர். இது போன்ற கேள்விகளை சு.வெங்கடேசன் மட்டும் கேட்டால் போதாது! தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் – பாஜக உட்பட கேட்க வேண்டும். தமிழகம் இந்தியாவிற்குள் தானே உள்ளது. தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டு, பொருளாதாரத்தை முடக்கிவிட்டு, தமிழ்ப் பற்றி பல இடங்களில் மோடி பேசுவது ஏற்புடையதாக இருக்காது!