அங்குசம் பார்வையில் ‘பேச்சி’ திரைப்படம் விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘பேச்சி’ திரைப்படம் விமர்சனம் ! தயாரிப்பு: ‘வெயிலோன் எண்டெர்டெய்ன்மெண்ட்’ கோகுல் பினோய் & வெரஸ் புரொடக்ஷன்ஸ்’ ஷேக் முஜிப், ராஜராஜன், சஞ்சய் சங்கர், தனிஸ்தான் ஃபெர்ணாண்டோ. டைரக்ஷன் : பி.ராமசந்திரன். நடிகர்—நடிகைகள் –காயத்ரி ஷங்கர், பாலசரவணன், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், மகேஷ்வரன், சீனியம்மாள், நட்டுராஜா, சாந்திமணி. தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: பார்த்திபன், இசை : ராஜேஷ் முருகேசன், எடிட்டிங் : இக்னேஷியஸ், ஆர்ட் டைரக்டர் : குமார் கங்கப்பன். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சுகு & தர்மா
சென்னையைச் சேர்ந்த காயத்ரி ஷங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன் உட்பட ஐந்து பேர் கொண்ட இளைஞர்கள் குழு மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர்கள். கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுவரை யாரும் போகாத வனப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பது இவர்களின் ஆசை.
இதற்காக அங்கே வசிக்கும் வனத்துறை ஊழியர் பாலசரவணன் உதவியுடன் அடர்ந்த வனப்ப்குதிக்குள் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதி வரை செல்லத் தான் முடியும். அதன் பின் இருக்கும் பகுதியெல்லாம் தடை செய்யப்பட்ட பகுதி.
ஆனால் இளைஞர்கள் குழுவோ தடை செய்யப்பட்ட பகுதிக்குள் தடையை மீறி நுழைய ஆசைப்படுகிறது. பாலசரவணனோ அந்தப் பகுதிக்குள் சென்றால் உயிருடன் திரும்ப முடியாது என எச்சரிக்கிறார்.
அதையும் மீறி அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே விபரீதங்கள் நடக்கின்றன. ஒரு அமானுஷ்ய சக்தி பயமுறுத்துகிறது. அலறியடித்து ஓடி வருபவர்களிடம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பேச்சி என்பவள் சூன்யக்காரியாக மாறி, அந்த ஊரின் பச்சிளங் குழந்தைகளை நரபலி கொடுத்த கதையைச் சொல்லி கதிகலங்க வைக்கிறார்.
மலை ஏறுவதற்காக சென்றவர்கள், உயிருடன் தரைக்குத் திரும்பினார்களா? என்பதை செமத்தியான த்ரில்லிங் ட்ரீட்டுடன் அசத்தியிருக்கிறாள் இந்த ‘பேச்சி’
பேச்சியின் ஃப்ளாஷ்பேக்குடன் நச்சுன்னு ஒரு கதை, அதை கச்சிதமாகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றிய திரைக்கதை, இந்த திரைக்கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக காட்சிப்படுத்திய திறன், பதினைந்து நிமிட காட்சிகளைத் தவிர, மற்ற காட்சிகளுக்கெல்லாம் மனித உழைப்பை, நடிகர்களின் நடிப்பை நம்பிய விதம் இவற்றிற்காக டைரக்டர் ராமச்சந்திரனுக்கு தாராளமாக “ஜே’” போடலாம்.
காயத்ரி ஷங்கரும் பால சரவணனும் தான் நமக்கு நன்கு தெரிந்த முகங்கள். மற்றவர்களெல்லாம் புதுமுகங்கள் தான். ஆனால் எல்லா காட்சிகளிலும் நிறைவான நடிப்பைத் தந்ததில் அனைவருமே நம் மனதை ஆக்கிரமிக்கிறார்கள். பலலட்சங்களை செலவழித்தாலும் இந்த மாதிரி லொக்கேஷன்களை நம்மால் பார்க்கவே முடியாது.
இதற்காக டைரக்டரும் கேமராமேன் பார்த்திபனும் கடின உழைப்பைத் தந்திருப்பதற்கு படத்தின் காட்சிகளே சாட்சி. அதே போல் பேச்சியின் பழைய வீடு, மந்திரிக்கப்பட்ட பொம்மை இதெல்லாமே பார்த்தவுடனேயே திகிலடிக்க வைக்கும் அளவுக்கு அசத்திவிட்டார் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன்.
அதே போல் படத்தின் த்ரில்லிங் எஃபெக்ட், ஆரம்பத்திலிருந்து கொஞ்சமும் குறையாமல் ரசிகனை வசீகரிக்கிறார் மியூசிக் டைரக்டர் ராஜேஷ் முருகன்.
50 கோடி, 100 கோடி பட்ஜெட்டில் கண்ட கண்ட பேயை எல்லாம் இம்போர்ட் பண்ணி, படம் முழுக்க சுத்தவிட்டு, படம் பார்க்கும் நம்மையும் சுத்தலில்விட்டு.. பேப்பாடு பெரும்பாடுபடுத்துபவர்களுக்கு மத்தியில் ….
இதான்யா அமானுஷ்யம், திகில், பேய்ப் படம் எல்லாம் என நச்சுன்னு பேச்சியை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர். க்ளைமாக்சில் காயத்ரி ஷங்கருக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தற்காக டைரக்டர் ராமச்சந்திரனுக்கு மீண்டும் ஒரு “ஜே” போடலாம். இன்னும் சொல்லப் போனால் 30—40 ஆண்டுகால தமிழ் சினிமாவில் இந்த ‘பேச்சி’ தான் பெஸ்ட் த்ரில்லர் மூவி.
-மதுரை மாறன்