”இந்தப் பேய் ரத்தம் கக்காத பேய்” – பேய் கதை சொன்ன டைரக்டர் !
’ஜெர்ரி’ஸ் ஜார்னி புரொடக்ஷன் ஹவுஸ்’ பேனரில் தயாராகி, இந்த ஆகஸ்ட்.29-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘பேய் கதை’. ஜீன் மோசஸ் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஹீரோவாக வினோத் அறிமுகமாகிறார். நடிகைகள் ஆர்யலட்சுமி, ஜி.வி.மகா, ஆஷ் மெலோ, ஜீவிதா ஆகிய அனைவரும் புதுமுகங்களே. இவர்களுடன் சீனியர் நடிகை எலிசபெத் மற்றும் ஆஷிக் பீட்டர், ருச்சி பிங்க்ளே, ரோடஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு :எஸ்.ஜி.பிரவீன், இசை : போபோ சசி, பாடல்கள் : யூகி பிரவீன், வசனம் : நவீன், தமிழ்நாடு ரிலீஸ் : தேனாண்டாள் சுரேஷ், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
29—ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, ஆகஸ்ட்.05—ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர்கள் சபேஷ் & முரளி கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
ஆஷிக் மெலா,
“கன்னட சினிமாவிலிருந்து இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறேன். அங்கே துனியா விஜய்யுடன் நடித்திருக்கிறேன். என்னை தமிழில் அறிமுகம் செய்யும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் யூகி பிரவீன்,
“இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். இதற்கு போபோ சசிக்கும் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. எங்கள் கூட்டணி தொடரும் என நம்புகிறேன்”.
வசனகர்த்தா நவீன்,
“ரசிகர்களின் கோணத்திலிருந்து வசனம் எழுதுன்னு டைரக்டர் சொன்னார். அவர் சொன்னபடி எழுதினேன். சினிமாவில் எனக்கு இது முதல் படம்”.
இசையமைப்பாளர் போபோ சசி,
“இந்த பேய் கதையை தனித்துவமாக எழுதியுள்ளார் டைரக்டர். பாடல்களும் நன்றாக வந்துள்ளன. படமும் சிறப்பாக வந்திருக்கு”.
நடிகை ஜி.வி.மெகா,
“டைரக்டர் ஜீன் மோசஸ் எனக்கு நெருங்கிய நண்பர் என்றாலும் ஆடிஷன் வைத்து செலக்ட் பண்ணித் தான் இந்தப் படத்தில் என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். புதுமையாகவும் ஃபேமிலி எண்டெர்டெய்னராகவும் இந்தப் பேய் இருக்கும்”.
சபேஷ், “டிரெய்லரைப் பார்க்கும் போது, டைரக்டர் ஏதோ டிஃபெரெண்டா பண்ணிருக்காருன்னு தோணுது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இசையமைப்பாளர் போபோ சசி. பாட்டெல்லாமே சிறப்பா இருக்கு. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”.
முரளி, ‘டைரக்டர் ஜீன் மோசஸை சின்ன வயதிலிருந்தே எனக்குத் தெரியும். அவர் வீட்டில் இருந்ததைவிட எங்கள் வீட்டில் தான் அதிக நேரம் இருப்பார். போபோ சசியும் அவரும் இருபத்தைந்து வருட நண்பர்கள்”.
ஹீரோ வினோத்,
“டைரக்டரும் நானும் பிஸ்னெஸ் பார்ட்னர்கள். இப்போது சினிமா வரை வந்துள்ளோம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெர்ரி மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.
டைரக்டர் ஜீன் மோசஸ்,
“எல்லா பேய்ப்படங்களிலும் ரத்தம், வன்முறை, பயங்கரம் இருக்கும். ஆனால் இந்த ‘பேய் கதை’யில் அது எதுவுமே இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் பேயை ரசிக்கலாம், கொண்டாடலாம், குதூகலிக்கலாம். தொழில்நுட்பத்திலும் திரைக்கதையிலும் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளோம். அதாவது இதுவரை யாரும் பயன்படுத்தாத வி.ஆர்.மோஷன் பிக்சர்ஸ் டெக்னாலனியை படத்தில் எட்டு நிமிடங்கள் பயன்படுத்திருக்கோம். படம் முழுவதும் எதிர்பாராத,சுவாரஸ்யமான திருப்பங்கள் இருக்கின்றன. சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நல்ல முயற்சி. எங்களின் இந்த முயற்சிக்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்”.
— மதுரை மாறன்