தன் வாழிட எல்லையை வரையறுத்து வாழும் எழுத்தாணிக்குருவி ! பறவைகள் பலவிதம் – தொடர் : 20
சில பகுதிகளில் மட்டுமல்ல பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் கூட இதை “மரங்கொத்தி”-என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது மரங்கொத்தி இல்லை. அவர்கள் மரங்கொத்தியை இதுவரை கவனிக்காமல் இருந்தது கூட இதற்கு மரங்கொத்தி எனப்பெயரிட்டு அழைப்பது காரணமாக இருக்கலாம்.
வேண்டுமன்றால் மண்கொத்தி எனலாம். காரணம் இது மரங்கொத்திபோல் டொக் டொக் என மரத்தைக் கொத்தாமல், தரையில் மண்ணைக்கொத்தி கிளரி புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும். ஒருவேளை இதன் நீண்ட வளைந்த அலகைப்பார்த்து மரங்கொத்தி என எண்ணியிருக்கலாம்.
சேவலைப்போன்ற கொண்டயின் காரணமாக இதை சாவல் குருவி எனவும் கொண்டயே இதன்முக்கிய அடையாளமானதால் கொண்டலாத்தி எனப் பெயரும் நீண்ட எழுத்தாணி (எழுத்தாணி தெரியுமல்லவா திருவள்ளுவர் கையில் இருப்பது) போன்ற அலகினால் எழுத்தாணிக்குருவி என வழங்குவது கூட மிகப் பொருத்தமான பெயர்கள்.
இதன் வாழிட எல்லைக்காகவும் இணையை அழைக்கவும் இது, ஹூப்பாப்பாப்… ஹூப்பாப்பாப்… எனச் சத்தமிடும். இந்த ஒலியுன் காரணமாக ஆங்கிலத்தில் இதற்கு ஹூப்போ எனப் பெயர் வந்திருக்கலாம்.
உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.
எமது சிறிய வயதில் எங்க கிராமத்தில் ஓட்டுவீட்டின் சுவற்றிற்கும் ஓட்டிற்கும் இடையில் பலவீடுகளில் கூட்டை அமைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். சிறிய துவாரத்தில்கூட நுழைந்துவிடும். ஓட்டைப்பிரித்து கூட்டைப் பார்க்கப் போன நான் நாற்றம் தாங்காமல், அப்படியே அதேபோல கூட்டை மூடிவிட்டு வந்த அனுபவமும் உண்டு. கூடு பழையதுணி, புல், இறகுகளுடன் விரும்பத்தகாத நாற்றத்துடன் இருக்கும். நாற்றத்துற்கு காரணம் உள்ளே இருக்கும் பொருட்களும் பாதுகாப்பிற்காக பெண்குருவியின் கழுத்துப்பகுதியில் சுரக்கும் வஸ்துவும்தான் காரணம்.
ஓட்டுவீடு குறைந்த இந்நாளில் வேறு வாழிடங்களைத் தேடிக்கொள்கிறது. ஆனால், மரங்கொத்திகள் (woodpecker) பொதுவாக மனிதக்குடியிருப்புகளின் அருகில் மனிதர்களை நெருங்கிவாழும் தன்மையுடையதல்ல.
தமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொள்ளும் இந்தக் கொண்டலாத்தி, மற்ற எதிரி பறவைகள் கூடு இருக்கும் பகுதிக்கு வந்தால் கூச்சலிட்டு தமதுகூரிய அலகால் கோபமாக கொத்திவிரட்டும்.
சமீபத்தில் ஒருநாள் அழகாக புழுதி மண்ணில் ஒரு இணை குளியல் நடத்திக் கொண்டிருந்தைப் பார்த்தேன். அடிக்கடி புழுதி மண்ணில் மண் குளியல் நடத்தும். தரையில் அது அசைந்து நடப்பது ரசிக்கக் கூடிய அழகு.
பாலைவனப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை அரபு நாடுகளில் கதைகளில் இவற்றிற்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. இஸ்ரேல் நாட்டின் தேசியப்பறவைகூட இந்தக் கொண்டலாத்திதான்.தமிழ் இலக்கியங்களில்கூட இதுபற்றி பதிவு செய்திருக்கிறார்கள்.
அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.
தொடரும் …
ஆற்றல் பிரவீன்குமார்








Comments are closed, but trackbacks and pingbacks are open.