தயவு செய்து பிஎப் ( PF ) பணத்தை எடுத்துடாதீங்க – ஏன் தெரியுமா ?
வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுவேலைக்குச்செல்பவர்கள் தயவு செய்து பிஎப் பணத்தை எடுத்துடாதீங்க – ஏன் தெரியுமா ? நேற்று அலுவலக நண்பர் ஒருத்தர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போனார். பிஎப் பணத்தை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டேன். அதை எடுத்து புது SUV கார் ஒன்று வாங்கப்போவதாக சொன்னார்.
புது நிறுவனத்தில் உயர்பதவி.SUV காரில் போனால்தான் மதிப்பாங்க என்றார். இதுவரை தான் வேலைப்பார்த்த எல்லா நிறுவனத்திலும் வேலையை விட்டவுடன் அங்கிருக்கும் பிஎப் பணத்தை துடைத்து எடுத்துவிடுவதாக சொன்னார்.
எனது அக்காவும் இப்போது அறுபது வயதில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதுவரை நான்கு நிறுவனங்களில் வேலைப்பார்த்தும் பிஎப் பணம் எதுவும் பெரிதாக இல்லை. PF-ல் என்ன பெரிதாக வந்துடப்போகிறது என்று அடிக்கடி சொல்வார். தவிர அறுபது வயதில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதால் பிஎப் எல்லாம் பிடிக்க மாட்டார்கள். அண்மையில் CAGR-ன் பவர் அதன் மகிமைப்பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.
வீடியோ லிங்
இருபது வருடங்களுக்கு மாதம் வெறும் நான்காயிரம் கட்டி வருகிறேன். இப்போது பதினைந்து வருடங்கள் முடிந்துள்ளன. ஏழெட்டு லட்சம் கட்டியிருப்பேன். ஆனால் என்னிடம் இருபது லட்சம் சேர்ந்துள்ளது. இருபது வருடங்கள் முடியும் போது கையில் நாற்பது லட்சம் சேர்ந்திருக்கும். இது வெறும் 12% கூட்டு வட்டியில் சாத்தியம். பலர் அந்தப்பதிவை பகிர்ந்திருந்தார்கள்.
இந்த முதலீடு ,சேமிப்பு, உடற்பயிற்சி எல்லாம் ஒழுக்கம் தொடர்புடையது. பலர் ஜிம்மில் ஜனவரி மாதம் சேர்வார்கள். பிறகு மார்ச் மாதத்திலிருந்து போகமாட்டார்கள். அதுபோல இரண்டு மாதங்களில் எனது பணம் இரண்டு மடங்காக வேண்டுமென்று டிரேடிங் செய்து பணத்தை இழப்பார்கள். பலமுறை சொன்னதுதான்.
ஒரு பாடலில் பணக்காரனாக முடியாது. குறைந்தது பத்துமுதல் இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுவேலைக்குச்செல்லும் பலரிடம் நான் சொல்வது. தயவு செய்து பிஎப் பணத்தை எடுத்துடாதீங்க.
அங்க வெறும் 8.5% தானே வட்டி தர்றாங்க. அந்தப்பணத்தை எடுத்து நான் சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் நிறைய வட்டி வருமே என்று கேட்கலாம். ஆனால் இது கேட்க நன்றாக இருக்கும். அப்படி சாத்தியப்படுத்துபவர்கள் கோடியில் ஒருவர்தான்.
பிஎப் பணத்தை எல்லாம் மறந்துடணும். அந்தகாலத்தில் நமது அப்பா, தாத்தா எல்லாம் இந்த பிஎப் பணத்தை ஓய்வுகாலத்தில்தான் எடுப்பார்கள். அதில் லோன் எடுப்பார்கள். அது வேறு விஷயம். ஆனால் பிஎப் பணத்தை வழித்து எடுக்கமாட்டார்கள்.
காரணம் அந்தக்காலத்தில் அவர்கள் வாழ்க்கை முழுக்க ஒரே அரசு நிறுவனத்தில் வேலைப்பார்த்திருப்பார்கள். பிஎப் பணத்தை எடுக்க சாத்தியம் இருந்திருக்காது. இப்போது நாற்பது வயதுக்குள் நாம் ஏழெட்டு நிறுவனங்கள் மாறிவிடுவதால் வெளியே வரும்போது பிஎப் பணத்தை எடுத்து செலவு செய்துவிடுகிறோம்.
நான் இப்போது வேலைப்பார்ப்பது வாழ்க்கையில் ஏழாவது நிறுவனம். இதில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பிஎப் பிடித்துள்ளார்கள். அதற்கு முன்பு நான் பெரும்பாலும் கன்சல்டன்டாக பணிபுரிந்ததால் அங்கெல்லாம் பிஎப் பிடித்ததில்லை. சத்யம் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்யும்போது என்கைவசம் வெறும் 45,741 ரூபாய்தான் பிஎப் இருந்தது. அதை எடுக்கவில்லை.
ஒருவருடம் போராடி (காரணம் அது அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்தது) அதை தமிழ்நாட்டு கிளைக்கு மாற்றி புது பிஎப் அக்கவுண்டுக்கு மாற்றினேன். இப்போது அந்தச்சிக்கல்கள் எல்லாம் இல்லை. UAN கொண்டுவந்துவிட்டார்கள். வட்டியும் கொடுத்தார்கள்.
பிறகு கடந்த பதினேழு வருடங்களில் சம்பளம் உயரும்போதெல்லாம் பிஎப்பும் உயர்ந்தது. கோவிட்டின்போது இரண்டரை வருடங்கள் லாஃடவுன். சினிமா போகவில்லை. ஷாப்பிங் போகவில்லை. சுற்றுலா செல்லவில்லை. அலுவலகத்துக்கு செல்ல பெட்ரோல்,டீசல் செலவு மிச்சம். அப்போது சந்தையும் அதலபாதாளத்தில் விழுந்துகிடந்தது. மிச்சம் பிடித்த பணத்தை எல்லாம் சந்தையில் போட்டுவிட்டு பிஎப்பில் பணியாளர் பங்களிப்பை அதிகரித்தேன்.
என்னைப்போன்றோருக்கு ஆப்படிக்க நிர்மலா சீதாராமன் ஒரு புது விதியை அமுல்படுத்தினார். 2021 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து யாரெல்லாம் ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கு மேல் பிஎப்பில் சேமிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் வட்டியில் வரி கழித்துக்கொள்வோம் என்றார்.
அதாவது ஆண்டுக்கு மூன்று லட்சம் பிஎப்பில் போட்டால் மிச்சமிருக்கும் ஐம்பதாயிரத்துக்கு வரி என்றார். மீண்டும் சந்தைப்பக்கம் திரும்ப வேண்டியிருந்தது. இருந்தாலும் பிஎப்பில் இப்போது கணிசமான தொகை சேர்ந்துள்ளது. பதினெட்டரை ஆண்டுகள் பிஎப் கட்டியுள்ளேன். இதில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது சில மாதங்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். அப்போது பிஎப் பிடித்ததில்லை.
வெளிநாட்டு PayRoll-ல் அந்த நாட்டு டாலர்களில் சம்பளம் வாங்கி அங்கு வரி கட்டுவேன். எனவே பதினைந்து ஆண்டுகள் என்று கணக்குப்போட்டாலும் மொத்தம் கட்டிய பிஎப் தொகை 18,43,008. எனது நிறுவனம் கட்டிய தொகை 8,98,047. வட்டி மட்டும் 14,02,176 ரூபாய். ஆண்டுக்கு எனது வெறும் 5% வருமானம் உயர்கிறது என்று வைத்துக்கொள்வோம். பணவீக்கத்தைவிட இது குறைவுதான்.
அடுத்த எட்டாண்டுகளில் நான் ஓய்வுபெறுகிறேன் என்றால்கூட வெறும் 8.5% கூட்டுவட்டியில் எனக்கு ஒரு கோடியே ஐந்துலட்சம் ரூபாய் வரும். இதான் நான் அடிக்கடி சொல்லும் CAGR மகிமை. முதலீடு ,சேமிப்பு இதன் பலன் எல்லாம் ஒருநாளில் வருவதில்லை. தொடர்ந்து திட்டமிட்ட சீரான வளர்ச்சியோடு பொறுமையான காத்திருத்தல் அவசியம்.
–