தொடரும் பதவி நீக்கம்! அதிரும் அரசியல் முடிவுகள்!
சேலத்தில் (29.12.2025) பாமக பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. இராமதாசு கூட்டும் பொதுக்குழுக் கூட்டம் செல்லத்தக்கது அல்ல என்று அன்புமணி பாமக பிரிவின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி அன்புமணி தலைவராகவும். வடிவேல் இராவணன் பொதுச்செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் உள்ளனர். இந்நிலையில் நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் இல்லாமல் கூட்டும் கூட்டம் என்பது செல்லதக்கதாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினார்.
பொதுக்குழுவைக் கூட்ட நிறுவனத் தலைவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்ற அடிப்படையிலும், தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில், “பாமக என்னும் தமிழ்நாட்டின் மாநில கட்சி தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. இதன் அடிப்படையில் கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், இராமதாசு, அன்புமணியிடையே கட்சிக்கு உரிமைக் கோரினால் அவர்கள் இருவரும் சிவில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து உரிமைக் கோரிக்கொள்ளவேண்டும்” என்று கருத்து தெரிவித்தது. இதன் அடிப்படையில் பாமகவின் இரு பிரிவினரும் நீதிமன்ற தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கி பேசி வருகின்றனர் என்பதே உண்மை.

சேலத்தில் பாமக நிறுவனர் இராமதாசு கூட்டிய பொதுக்குழுவில் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேரும் கலந்து கொண்டனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில்,“நிறுவனத் தலைவரால் பாமகவிற்குத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட அன்புமணியின் பதவிக் காலம் நேற்றுடன் (மே 28) முடிந்து விட்டது என்றும் பாமகவிற்கு அன்புமணி தலைவர் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் தலைவராக ராமதாஸ், கௌரவ தலைவராக ஜி.கே. மணியும், செயல் தலைவராக ஸ்ரீ காந்திமதி மற்றும் பொதுச்செயலாளராக முரளிசங்கர் ஆகியோர் அங்கீகரித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த சௌமியா அன்புமணியை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஜிகே.மணியை அன்புமணி கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களிடமே பேசவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் மருத்துவர் இராமதாசு கண்ணீர் மல்க உரையாற்றினார். “இந்தக் கட்சியை நான் உருவாக்கினேன். நான் வளர்த்தேன். அன்புமணியை தலைவராக்கினேன். நாடாளுமன்ற மக்களவையில், மாநிலங்களவையில் உறுப்பினராக ஆக்கினோம். மத்திய மந்திரியாகவும் அழகு பார்த்தோம். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து எனக்கு நினைவு தப்பிவிட்டது. நான் பேசுவது சரியில்லை என்று கட்சியை உடைத்து செயல்படுகிறார். அவரோடு சேர்ந்துள்ள பலர் என்னை நாள்தோறும் அவதூறு செய்கிறார்கள். கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார்கள். இந்தக் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஜி.கே.மணியை நீக்குகிறார்கள். அன்புமணியின் தலைவர் பதவி நேற்றோடு (டிசம்பர் 28) முடிந்துவிட்டது. இனி அவர் கட்சிக்குத் தலைவர் இல்லை. நான்தான் தலைவர். பொதுச்செயலாளரும் அறிவிக்கப்பட்டுவிட்டார். செயல் தலைவரும் அறிவிக்கப்பட்டு விட்டார். இனி பாமக என்னும் கட்சி என்னுடைய தலைமையில்தான் இயங்கும் என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீ காந்திமதியின் மூத்தமகன், செயற்குழு உறுப்பினர் சுகுந்தன் பேசும்போது,
“என்னுடைய தம்பி முகுந்தனை எங்களின் தாத்தா என்பதைவிட எங்களின் வழிகாட்டி மருத்துவர் ஐயா இளைஞர் அணி செயலாளராக அறிவித்தபோது, என் தம்பிக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என்றும் கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் மேடையிலே எதிர்ப்பு தெரிவித்து மைக்கை மேடையில் வீசினார். என்னுடைய மாமா அன்புமணிக்கு ஒரு கேள்வி கேட்கிறேன்……. நீங்கள் கட்சியில் சேர்ந்தது 2004 ஆம் ஆண்டு. அதே ஆண்டில் இளைஞரணி தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் ராஜ்யசபாவில் எம்.பி. யாவும் தேர்வு செய்யப்படுகிறீர்கள்.
மேலும் அது 2004 ஆம் ஆண்டில் மத்திய மந்திரி ஆகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். நீங்கள் கட்சியில் சேர்ந்து ஒரே வருடத்தில் மத்திய மந்திரியாகலாம். என்னுடைய தம்பி ஒரு இளைஞர் அணி தலைவராக தேர்வு செய்ய தகுதி இல்லை என்று கூறுகிறீர்கள். பெற்ற தந்தைகூட எதிரியாகத்தான் பார்க்கிறார். எங்களின் பாமக நிறுவனர் ராமதாஸ் பதவி ஆசை இல்லை. அவர் எனக்கு தாத்தா மட்டும் இல்லை எனக்கு ஹீரோ என்று கூறினார்.” பொதுக்குழுவில் சுகுந்தன் ஆற்றிய உரைக்குப் பலத்த கைத்தட்டலும் கிடைத்து என்பது உண்மைதான்.
பாமக என்னும் கட்சிக்கு அன்புமணியும் இராமதாசும் உரிமைக் கொண்டாடும் நிலையில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி பேசப்போகிறார்கள்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டு எந்த அணி அதிக இடங்களில் வெற்றிப் பெறுகின்றதோ அதுதான் உண்மையாக பாமகவாக இருக்கும். இல்லையென்றால் சிவில் கோர்ட் பாமக யாருக்கும் சொந்தம் என்பதை தீர்ப்பாக வழங்க வேண்டும். அதுவரையில் அரசியல் களத்தில் பாமகவின் சிக்கல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.