தமிழகம் முழுவதும் முழங்கப்பட்ட குண்டுகள் : மலர் வளையம் வைத்து மரியாதை செய்த முதல்வர் ! எதற்காக தெரியுமா ?
மறைந்த காவலர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அக்-21 அன்று நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
1959-ம் ஆண்டு லடாக் பகுதியில், சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி “காவலர் வீர வணக்க நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர். இதே போல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காவலர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
சென்னையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள நீத்தார் நினைவு தின சிலை அருகில், பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேவேளையில் , தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பில் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சியில், ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஸ்தூபியில் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காவல்துறை மத்திய மண்டலத்தின் தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகர துணை ஆணையர்கள், மாவட்ட கூடுதல் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். மலர் வளையம் வைத்தும் குண்டுகள் முழங்கவும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில், பாச்சல் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பணியின் போது மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் முன்பு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, நடப்பாண்டில் மாவட்டத்தில் வீர மரணம் அடைந்த காவலர்களின் பெயர்களை வாசித்து அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார் .
தொடர்ந்து, மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 60 குண்டுகள் முழங்க ஆயுதப்படை போலீஸார் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதில், கூடுதல் எஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில், கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இந்த ஆண்டு பணியின்போது வீர மரணமடைந்த 191 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷ் தங்கையா, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கண்ணன், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வி.செல்வராஜ், கே.கே.செந்தில்குமார், அப்துல் கபூர், என்.முத்துக்குமார், ராஜேஷ், வெங்கடாச்சலம் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷ் தங்கையா கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு காவலர் தினம்
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில் “தமிழ்நாடு காவலர் தினம்” ஒவ்வொரு ஆண்டும் “செப்டம்பர் 6 “ அன்று கொண்டாடப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த காவல்நிலையத்தில் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.