எடப்பாடிக்குத்தான் சிறுமை எனக்கு பெருமை ஏன் தெரியுமா ?
காவல் துறையில் நான் சேர்ந்தப்பின் மனவலிகள் என்னை மாற்றியதுண்டு. நான் நிலாவை நாடி ஊர்ந்துச் சென்று வெளிச்சம் காண்பவள் அல்ல, அதேப்போல சூரியனை நாடி ஊர்ந்துச் சென்று குளிர்காய விரும்பியவளும் அல்ல.
நான் நானாகவே இருப்பவள்.
நிலா இறங்கி வந்து நீராடிக் கொண்டிருந்தது என்று அறிவியலை மனிதயியலாய் மாற்றி எழுதும் மாண்பும் என்னிடம் எப்போதும் இல்லை. நான் நானாக இருப்பவள்.
சிலம்பம் சுற்றிய கையில், ஆடுமாடு மேய்க்க தார் குச்சியும் அலக்கும் பிடித்தக்கையில், மடை திறந்து மூட மண்வெட்டிப் பிடித்தக் கையில், வயலோர மரக்கிளைகளை கழித்து விட அருவா பிடித்தக் கையில் திடீரென துப்பாக்கியை கொடுத்தால்!
கையில் முதன் முதலாய் துப்பாக்கியை தொட்டு தூக்கிய போது கைகள் தானாக நடுங்க ஆரம்பித்து விட்டது. நான் மலைகளின் மீது ஏறி பயமில்லாமல் மூலை முடுக்குகளில் நடந்திருக்கிறேன் உண்மைதான் அதற்காக !
திரைப்படத்தில் மட்டுமே பார்த்து பழகிய துப்பாக்கியை திடீரென கையால் தொட்டு தூக்கும் போது தொடை நடுங்கும்தானே? என்னோடு இருந்த காவலர்கள் சிலர் நான் துப்பாக்கியை தொட வெட்கப்படுகிறேன், கௌரவம் பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள் ஏன் தெரியுமா? நான் பயப்பட மாட்டேன் என்பது அவர்கள் நம்பிக்கை.
அவர்கள் நம்பிக்கை ஒரு விதத்தில் உண்மை தான். உழைக்காமல் கூலி வாங்க நான் கௌரவம் பார்த்திருக்கிறேன் . என் மீது பாவப்பட்டு என்னை உணவருந்த அழைக்கும் போது வெட்கப்பட்டிருக்கிறேன் ஆனால் துப்பாக்கியை கையில் எடுக்க நான் பயப்பட்டேன் என்பது தான் உண்மை.
என் துப்பாக்கி எண் 154, என் போலீஸ் எண் 215 . துப்பாக்கியை ஆயுதகிடங்கில் என்னிடம் கொடுத்தார்கள். கையில் வாங்கியதும் மனசெல்லாம் படபடத்தாலும் நம்ம கையிலயும் துப்பாக்கி இருக்குடா என்ற அந்த ஆனந்த மகிழ்வில் சிரித்துக் கொண்டே மைதானத்திற்கு எடுத்து சென்றேன்.
புதுமணப் பெண்ணை ஊரே கூடி நின்று சுத்தி சுத்தி பார்ப்பதைப்போல நானும் துப்பாக்கியை சுத்தி சுத்தி பார்த்தேன். தோட்டாகள் உள்ளே இல்லை என்று நன்றாக தெரிந்தாலும் அய்யோ! துப்பாக்கி வெடிச்சிடுமோ! என்ற பயம் என்னை கொலை நடுங்கச் செய்தது நிசம்.
என் துப்பாக்கியிலிருந்து புறப்படும் குண்டுகள் என் நெஞ்சையே தேடி வந்து சுட்டால் என்ன செய்வது! என்றெல்லாம் யோசித்து பயந்திருக்கிறேன். உறுதியாக இருக்கும் மரத்தின் விதை தான் நான் என்றாலும் எல்லா கண்களிலும் கண்ணீர் இருப்பது இயல்பு தானே?
மைதானத்தில் துப்பாக்கியுடன் நிற்பதென்பது எல்லோருக்கும் வாய்க்காது. அதற்கு விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், உழைப்பும், உறுதியும் வேண்டும். அது என்னிடம் பிறர் கடன் பெறுமளவுக்கு அதிகமாகவே இருந்தது.
துப்பாக்கியும் குழந்தையும் ஒன்று. பாதுகாப்பாக வைக்காவிடில் வாழ்க்கையே சுழியமாகிவிடும். மைதானத்தில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தயார் நிலையில் நின்றோம். எங்க ஆசிரியர் வந்தார். துப்பாக்கியை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் அதெல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது ஆனால்…
அந்த துப்பாக்கியின் பாகங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். எல்லாமே ஆங்கில வார்த்தைகள். நூற்றுக்கணக்கான பெயர்கள். முதல் நாள் தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது ஏன் தெரியுமா? நான் தமிழ் வழி கல்விக் கற்றவள். ஆங்கிலதை the தி என்று தமிழில் எழுதி வைத்து படித்து ஏதோ தத்திக்குத்தி வேலைக்கு வந்தா இங்க ஆங்கில சோதனை எனக்கு மிகப்பெரிய ரோதனையாக இருந்தது.
காவலர் பயிற்சியை ஆறு மாதங்கள் முடிப்போம் என்ற நம்பிக்கை முழுவதுமாய் இழந்து விட்டேன். ஆசிரியர் சொல்லும் ஆங்கில வார்த்தைகள் எனக்கு அயல் மொழியாக தெரிந்தது. ஆசிரியர் தொண்டைத் தண்ணி போக கத்தி கத்தி பாடம் நடத்தினார், நானோ இந்தப் பெயரையெல்லாம் எப்படி மண்டையில் ஏத்துவது என்ற கலக்கத்தில் நின்றேன்.
சேகர் சார் Rifle பற்றிய பாடத்தை முடித்து விட்டு என் நம்பரைச் சொல்லி 215 ஏதாவது புரிந்ததா? என்றார் . அடக்கொடுமையே! 24 பேர்ல என் நம்பரை கூப்பிட்டு கேட்பது என்பது விதியா? சதியா?
இரண்டும் இல்லை. ஏனென்றால் அவருக்கு தெரியும் எனக்கு எதுவுமே புரிய வில்லை என்று.
நான் என் நம்பரைச் சொல்லி அழைத்தவுடன் திடுக்கிட்டு சார்.. புரியுதுங்க சார் ஆனா English ல சொன்னீங்க எனக்கு எதுவும் புரியிலங்க சார் என்றேன். உன்னால் முடியும் என்றார். எப்படி சார் முடியும்? எனக்கு ஆங்கில அறிவு கம்மி சார் என்றேன்.
அடுத்த நாள் மைதானத்தில் துப்பாக்கியை என் கையில் கொடுத்து, தனியாக நிற்க வைத்து ஒவ்வொரு பெயரையும் நூறு முறை ரோட்டை பார்த்து கத்தி கத்தி சொல்ல வேண்டும் கத்திச்சொல் என்றார். கத்த ஆரம்பித்தேன் அதன் பயனாகத்தான்…
அதே மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நான் ஆசிரியரானேன். ஆங்கிலம் சரளமாக பேசும் ஒரு ஆணழகனைத் திருமணம் செய்தேன்.
வாழ்க்கையில் வெற்றியடைய சில அவமானங்களே காரணம்.
கலைஞரை இழந்த இதே நாளில் தான் நான் என் வேலையை இழந்தேன் என்பது வரலாறு.
இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் நான் உடுத்திய காக்கி உடையை தான் கையாலாகத எடப்பாடி அரசால் கழட்டும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அதனால் எடப்பாடிக்குத்தான் சிறுமை எனக்கு பெருமை.
வாழ்க கலைஞரின் புகழ்!
— கவி செல்வா திருச்சி.
யார் இந்த கவி செல்வா ?
திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவில் காவலராக பணியாற்றியவர் செல்வராணி. கவி செல்வா என்கிற பெயரில் கவிதை, தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். கலைஞர் மறைந்தபோது, அவரது மறைவுக்காக தன்னுடைய முகநூல் பக்கத்தில் கவிதை வாசித்து பதிவேற்றம் செய்ததற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உரிய விளக்கம் கேட்காமலேயே, தானாக விளக்கம் அளிக்க முன்வந்தும் அதற்கும் வாய்ப்பு வழங்காத நிலையில், இது பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்த நிலையில் தனது பணியை துறந்தவர் செல்வராணி. கலைஞருக்கு மட்டுமல்ல, இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைவிற்கும் இதே போல் கவிதை பதிவிட்டிருந்தார் என்பதுதான் இதில் டிவிஸ்ட்.