ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் – பக்தர் பாதுகாப்பு காவல் உதவி மையம் தொடக்கம்
கரூர் மாவட்டம் குளித்தலை உட்கோட்டத்தில் அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், காவிரி தென்கரை சிவஸ்தலங்களில் முதன்மையான தலமாக விளங்குகிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது.
தற்போது தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜோஷ் தங்கையா அவர்களின் உத்தரவின் பேரில், குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் த. கருணாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் 20.02.2026 அன்று மாலை அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலய வளாகத்தில் காவல் உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.
பக்தர்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அய்யர்மலை பேருந்து நிலையம், கல்லூரி செல்லும் சாலை, கோவில் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 28 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கிரிவலம் பாதை மற்றும் கோவில் உள், புறப்பகுதிகளில் கூடுதலாக 10 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 38 சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுமையான கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காவல் உதவி மையத்திலிருந்து அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் தகவல் வழங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு அவசர அறிவிப்புகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜோஷ் தங்கையா, குளித்தலை உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் க. கி. செந்தில்குமார், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் த. கருணாகரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி வெளியிட்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.