பெண் ஊழியரை சீண்டிய காவலர் ! பணியிடை நீக்கம் செய்த அதிகாரி!
திருச்சி மாநகரம், உறையூர், தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்த யாமினி 25/25 த.பெ சரவணன் என்பவர் கடந்த 08.08.25 தேதியன்று காலை 09.00 மணியளவில் தான் பணிபுரியும் பொன்மலை அஞ்சல் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் பொன்மலை அம்பேத்கார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து, பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றுவிட்டதாக யாமினி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய குற்ற எண்.233/25 U/s 126(2), 75 BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி யாமினிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம், காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் கோபாலகிருஷ்ணன் 30/25 த.பெ நீலமேகம், மாரியம்மன் கோவில் தெரு. கீழ பஞ்சப்பூர் என்பது தெரிய வந்ததால் மேற்படி எதிரி கோபாலகிருஷ்ணனை 12.08.25 ம் தேதி திருச்சி மாநகர பொன்மலை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததால், அவரை கணம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் -5 முன் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மேற்படி காவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் காவலர் ஒழுங்கு விதிக்கு மாறாக செயல்பட்டதால் அவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரெத்தினம், இ.கா.ப, இன்று 13.08.2025 ம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.