மக்களவைக்கு நவம்பரில் திடீர்த் தேர்தல் – தயாராகும் அரசியல் கட்சிகள் !
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தப்படலாம் என்ற யூகங்கள் அவ்வப்போது ஊடகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிப்பது உண்டு. அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு (புதிய தலைமுறை டிஜிட்டல்) நேர்காணல் வழங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,“நாடாளுமன்ற மக்களவைக்கு முன்கூட்டியே நவம்பரில் தேர்தல் நடைபெறலாம் என்ற செய்தி தில்லியிலிருந்து எனக்குத் தகவல் வழங்கப்பட்டது என்பது உண்மைதான்” என்று கூறியுள்ளார். “அதன் அடிப்படையில் தேர்தலுக்கு நான் தயராகிவருகிறேன். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி இவற்றோடு நான் எப்போதும் கூட்டணி வைக்காமல் தனித்தே களம் காணுவேன்” என்றும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பத்திரிக்கையாளர் மணி பேசும்போது,“நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. காரணம், பாஜக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி இழந்துள்ளது. பாஜகவை எதிர்த்துக் களம் காண எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பீகாரை அடுத்துப் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியுள்ளனர். அடுத்த கூட்டம் ஆக.31-செப்.1ஆகிய நாள்களில் மும்பையில் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டது, அவர்கள் மீது பாலியல் வல்லுறவு நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் பாஜக அரசுமீது கடும் கண்டத்தைத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், டிசம்பர் மாதத்தில் இராஜஸ்தான், தெலுங்கனா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்குப் பெரும்பின்னடைவு ஏற்படும் என்பது பெரும்பாலும் உறுதி. சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்படும் பின்னடைவுகளைத் தோளில் சுமந்துகொண்டு, பாஜக 2024ஆம் ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தலைச் சந்திக்காது என்பதும் உண்மையே. அதனால் சட்டமன்றத் தேர்தல்களோடு, மக்களவைத் தேர்தலையும் சேர்த்து நடத்திவிட்டால், கிடைத்தால் வெற்றி. இல்லையென்றால் தோல்வியைச் சந்தித்துவிட்டுப் பாஜக சென்றுவிடும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே அவர்களிடம் செய்தியாளர்கள் பேசும்போது,“நாடாளுமன்றத்திற்கு நவம்பரில் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள்” குறித்துக் கேட்டபோது,“நாடாளுமன்ற மக்களவைக்கு எப்போது தேர்தல் நடத்தினாலும் அதனைச் சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். இந்தியா கூட்டணி தற்போது வலுவுடனும், வலிமை பெற்றுக்கொண்டும் வருகின்றது. பாஜகவைத் தேர்தல் களத்தில் வீழ்த்தக் காங்கிரஸ் இணைந்துள்ள இந்தியா கூட்டணி தயாராகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.
சீமானுக்குத் தலைநகர் தில்லியில் கிடைத்த தகவலும், பத்திரிக்கையாளர் மணி அவர்கள் சொல்லும் காரணங்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவின் கருத்துகள் இவற்றை வைத்துப் பார்க்கும்போது மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு 2024 மே மாதத்தில் தேர்தல் நடத்தும் ரிஸ்க்-கை எடுக்காது என்றே நம்பவேண்டியுள்ளது. 2023 நவம்பரில் மக்களவைக்குத் தேர்தல் வருவதற்காக வாய்ப்புகள் கூடிக்கொண்டே வருகின்றது என்றே எண்ணத்தோன்றுகிறது. நவம்பர்-டிசம்பரில் குளிர்சூழ்ந்திருக்கும் வேளையில் அரசியல் கட்சியின் பிரச்சாரங்களால் நவம்பர்-டிசம்பர் மாதங்கள் சூடாகவே இருக்கும் என்று நம்பலாம்.
-ஆதவன்