ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான் !
தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து விட்டதை பற்றி தி டிபேட் ஊடகத்தில் பேட்டி அளித்துள்ள தமிழ்நாடு திட்ட கமிஷன் துணைத் தலைவர் திரு ஜெயரஞ்சன் அவர்கள், “தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் உங்களுக்கு என்ன? உங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? ” என்று நெறியாளரை பார்த்து கேள்வி கேட்கிறார்.
அதற்கு நெறியாளர் உகந்த பதில் அளித்ததாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேட்டி எடுக்கும் அந்தப் பெண்ணே கூறுகிறார்.
கடந்த 2021 பிப்ரவரி 25ஆம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவர் ஆன மு க ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அது பற்றி அனைத்து ஊடகங்களிலும் அப்போது செய்திகள் வந்தன.
அதில் மு க ஸ்டாலின், அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசை அதிக கடன் வாங்கும் அரசு என குற்றம் சாட்டியிருந்தார்.
“2011 திமுக ஆட்சி வரை மொத்தக் கடன் 1 லட்சம் கோடி ரூபாய். இப்போது அதிமுக ஆட்சியில், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளனர்.

கடன், நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, இதுதான் அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை. கடன் 500 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிமிடம் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனைச் சுமத்தியுள்ளது அதிமுக அரசு” என்று அதிமுக அரசை கடுமையாக சாடினார் மு க ஸ்டாலின்.
அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும்.
திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்றால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் நிதிச் சுமையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடனால் அரசின் திட்ட செலவுகள் குறையவில்லையா? அதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லையா? கடனுக்கு செலுத்தும் வட்டியே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் என்னும் போது, அந்த கடன் இல்லை என்றால் அந்த வட்டி தொகை மூலம் மேலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாதா?
அரசு வாங்கிய கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை என்றால், 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் அதிமுக அரசின் கடன் சுமை, ஒவ்வொருவர் தலையிலும் விழுகிறது என மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது தவறா அல்லது பொய்யா?
இதுபோன்ற பதிலை ஜெயரஞ்சன் அவர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.
தங்களது துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் கூட, ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான்!
— ஆரா, மூத்த பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.