நூலகத்துறையில் நடக்கும் அரசியல் – விவரிக்கும் BAPASI – பபாசி தலைவர் !

த்ரில்லர் சினிமா காட்சிகளைப்போல, அடுத்தடுத்து திருப்பங்களை தந்துக்கொண்டிருந்த விவகாரத்தில், ஒருவழியாக அகல்விளக்கு பதிப்பகத்தின் பதிப்பாளரை கண்டுபிடித்து விட்டார்கள் பத்திரிகையாளர்கள். மருந்துக்குக்கூட பெயர்ப்பலகை இல்லை. வீடுதான் பதிப்பகம். பதிப்பகம்தான் வீடு. அவ்வளவு எளிமையான பதிப்பகத்தின் சார்பில், வெளியான புத்தகம் மட்டும் ரொம்பவே காஸ்ட்லி. சர்ச்சைக்குரிய நூலின் உள்ளடக்கம் போலவே, பட்டும்படாமல் பேசுகிறார் பதிப்பாளர் மோகன்.
ஏதோ, நாலா பக்கமும் அச்சு சரியாக பதிவாகவில்லை என்பது போல பிரிண்டிங் மிஸ்டேக் என்கிறார். அரசு சொன்னால் சரிசெய்து தந்தவிடுகிறோம் என்கிறார். ஏதோ, பாலம் கட்டியதில் கட்டுமான குறைபாடு. கண்டறிந்து சொன்னார்கள். சரிசெய்து தந்துவிடுகிறோம் என்று காண்ட்ராக்ட்காரர்கள் சொல்வதைப்போல. இந்த விவகாரத்தில் இன்னும் முழுமையாக சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பலரும் எழுப்பியுள்ள நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைத்தபாடில்லை.
இந்நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (The Booksellers and Publishers Association of South India – BAPASI / பபாசி)த்தின் தலைவரும், ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தின் உரிமையாளருமான ஆர்.எஸ்.சண்முகத்திடம் அங்குசம் சார்பில் பேசினோம்.

“இவங்க முதல்ல பதிப்பகமான்னே தெரியலையே? எங்கேயோ தப்பு நடந்துருக்கு எங்கே? என்னனு தெரியல.” என்பதாக மெல்லிய புன்னகையோடு பேச்சை தொடங்கியவர், அரை நூற்றாண்டு கால பதிப்புத்துறை வரலாற்றை விவரிக்கத் தொடங்கினார்.

Bpasi Leader R.S. Shanmugam
Bpasi Leader R.S. Shanmugam

“ஒரு காலத்தில் ஒரு புத்தகத்தை தயார் செய்வது பெரிய கஷ்டமான காரியம். டிடில் மிஷின்ல 300 பக்க புத்தகத்தை தயார் செய்ய எப்படியும் ஒரு மாசம் ஆகும். டி.டி.பி. வசதி வந்ததும் கொஞ்சம் எளிதானது. இப்போது ஒரே நாளில் 20 புத்தகங்களை தயார் செய்யும் சூழ்நிலை வந்திருச்சு. முன்னெல்லாம் புத்தகம் போட்டா விற்கும் விற்காதான்னு பெரிய போராட்டமா இருக்கும். ஒருமுறை ராஜாஜிகிட்ட ஒருத்தர் என்ன பன்றனு கேட்டாராம். அதுக்கு நான் பதிப்பாளரா இருக்கேனு சொன்னாராம். அப்போ, சாப்பாட்டுக்கு என்ன பன்றனு பதிலுக்கு கேட்டாராம். அதுதான் அப்போதைய பதிப்பாளர்களின் நிலைமை. அன்றைக்கு இருந்த நிலைமை இன்றைக்கு இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு வந்திருக்கு. வாசகர்கள் விரிவடைந்திருக்காங்க. ஆனாலும், பெரிய இலாபம்னுலா சொல்லிட முடியாது. ஏதோ போகுது அதுதான். மற்ற மாநிலங்களோட ஒப்பிடும்போது, தமிழகத்துலதான் நூலகத்துறைனு ஒன்ன வச்சிகிட்டு, புத்தகம் வாங்குறது எல்லாம். தொடக்கத்துல 200 பிரதிகள் 300 பிரதிகள்தான் வாங்கிட்டு இருந்தாங்க. எங்களுடைய கோரிக்கையை ஏற்று அதை 1000 பிரதிகள்னு மாற்றத்தை கொண்டுவந்தவரு கலைஞர். 200, 300 பிரதிகள்னு வாங்கிட்டிருந்த வரைக்கும் பதிப்புத்துறைங்கிறது சேவைத் துறையா இருந்தது. எப்போது 1000 பிரதிகள் வாங்குறதுனு மாறியதோ, அன்றிலிருந்து இதுவும் ஒரு தொழிலா மாறிடுச்சு. 1000 புக் அடிச்சா கவருமெண்டே கோடி கணக்குல புத்தகங்களை வாங்கிக்கும்னு ஒரு நிலைமை வரும்போது, சிறுதொழில் மாதிரி இதுவும் ஒரு தொழில்னு நிறைய பேரு உள்ளே வந்துட்டாங்க.

முன்னெல்லாம், எழுத்தாளர்கள் பதிப்பகங்களைத் தேடி அலைந்தார்கள். பதிப்பகத்தார்களும் எழுதுனத வாங்கிப் படிச்சி பார்த்துட்டு இது விற்குமா? விற்காதானு யோசிச்சு முடிவெடுப்பாங்க. முடியாதுனு ஒரு பதிப்பகம் சொல்லிட்டா, அடுத்த பதிப்பகத்தை தேடி ஓடுவாங்க. ஆனால், இன்றைக்கு நான் புத்தகம் எழுதுறேன். நானே போட்டுடறேன். அரசாங்கம் 1000 பிரதிகள் வாங்கிடும்னு இறங்கிட்டாங்க. அப்போதே, தவறு தொடங்க ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் பல பதிப்பகங்கள். புதுப்புது பெயர்களில் வெளிவந்தது. தமிழகத்தை பொறுத்தமட்டில், ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கிறதுக்கு உங்க கையில ஒரு புத்தகம் போடுற அளவுக்கு காசு இருந்தா போதும். எந்த அரசாங்க அனுமதியும் தேவையில்லை. எந்த தணிக்கையும் கிடையாது. உங்க கையில பத்தாயிரம் ரூபா இருந்தா, நீங்களும் பதிப்பாளர்னு சொல்லிக்கலாம். இந்த சூழ்நிலைதான் தப்பு செய்ய தூண்டுது.

இப்போது தமிழ்நாட்டுல நூல்கள் கொள்முதல் செய்வதற்கு வைத்திருக்கும் சிஸ்டம் நல்ல சிஸ்டம். வெளிப்படைத்தன்மையோடுதான் வாங்குகிறார்கள். ஒரு புத்தகத்துக்கு 450 ரூபாய் பணம் கட்டனும். 5 புத்தகங்கள் கொடுக்கனும். தேசிய நூலகத்துக்கு புத்தகம் அனுப்பனும். 20-25 பக்கங்கள் அந்த புத்தகத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யனும். கமிட்டி அமைப்பார்கள். அவர்கள்தான் தேர்வு செய்வார்கள்.

இதுல இருக்கிற சிக்கல் என்னன்னா? பத்தாயிரம் புத்தகங்கள் விண்ணப்பிக்கிறாங்கன்னா, தேர்வு கமிட்டி அத்தனை ஆயிரம் பக்கங்களையும் படிச்சுதான் முடிவு பன்றாங்களான்னு தெரியல. அடுத்து, எந்தெந்த பதிப்பகம் எந்தெந்த தலைப்புகள்ல விண்ணப்பித்திருக்காங்கன்னு தெரியாது. எந்த பதிப்பகத்திலிருந்து எந்த தலைப்பிலான நூல்கள் தேர்வாகியிருக்குனு தெரியாது. எல்லாமே மின்னஞ்சல் வழியாகத்தான் தகவல் சொல்லுவாங்க. இது வழக்கமா நடக்கிறது.

அண்ணா நூலகம்
அண்ணா நூலகம்

சென்னையில் அண்ணா நூலகம்; மதுரை கலைஞர் நூலகம் தொடங்கப்பட்டபோது, ஏற்கெனவே பதிவு செய்திருந்த நூல்களிலிருந்து 2,3 பிரதிகள் வாங்கினார்கள். கோவை பெரியார் அறிவுலகத்தை பொறுத்தவரையில் ஒரு தலைப்புக்கு ஒரு புத்தகம்தான் வாங்கினார்கள். 200-க்கும் மேற்பட்ட தலைப்புகள் பதிவு செய்தவர்களுக்கு, 40 முதல் 80 தலைப்புகள்தான் தேர்வாகியிருக்கிறது. எனக்கு தெரிந்து எங்களைப் போன்ற ஒவ்வொரு பதிப்பகத்திடமிருந்தும் ரூ.20,000/-த்துக்குள்தான் வாங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு விசயம். முன்பிருந்த நூலக சட்டத்தின்படி தமிழ் நூல்கள் 85% வாங்கனும். மிச்சம் இருக்கிற 15% தான் ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்கள் வாங்கனும்னு இருந்துச்சு. இன்னைக்கு அந்த நிலைமை அப்படியே தலைகீழா மாறிடுச்சு.” என்றவரிடம், இதற்கு தீர்வுதான் என்ன என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“வெளிப்படைத்தன்மைனு சொல்றாங்க. ஆனாலும், எந்த நூல் எவ்வளவுக்கு வாங்குறாங்க? யார்கிட்டேயிருந்து வாங்குறாங்கனு தெரியல. மேலிடத்துல யாரையாவது புடுச்சு புத்தகத்தை உள்ளே தள்ளிடலாம்ங்கிற நிலைமை வந்துடுச்சு. இத மாத்தனும். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கு. குறைந்தபட்சம் எந்த பதிப்பகத்திலிருந்து எந்தெந்த தலைப்பில் நூல்களை வாங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளிப்படையாக வெளியிட்டால்கூட, எங்களைப் போன்ற பதிப்பகத்தார்கள் அதனை சரிபார்க்கும் வாய்ப்பு இருக்கும். அல்லது, பபாசி போன்ற நிலையான அமைப்பில் பதிவு செய்து அவர்களின் அனுமதியை வாங்க வேண்டும் என்ற நிலை கொண்டு வர வேண்டும். அதுவும் இல்லையென்றால், பொதுநூலகத்துறையிலே கூட, பதிப்பகத்தின் பின்னணியை சரிபார்த்து பதிவுசெய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.” என்கிறார், பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம்.

– வே.தினகரன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.