சமையல் குறிப்பு – உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி !
வணக்கம், சமையலறை தோழிகளே! இன்றைக்கு நான் சொல்லப் போற ரெசிபி உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி தாங்க, நம்ம வழக்கமா செய்யுற சப்பாத்தி செய்யாமல் நான் சொல்வது போல் வித்தியாசமாக செய்து பாருங்களேன், சாப்பிட சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு- 1 கப், பாசிப்பருப்பு ஒரு கப், பெரிய உருளைக்கிழங்கு 2, வெந்தயக்கீரை பொடியாக நறுக்கியது ஒரு கப், கொத்தமல்லி தேவையான அளவு, பூண்டு பல் 5, இஞ்சி 1 துண்டு, சோம்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை
முதலில் குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு, தோல் நீக்கி கட் செய்த இரண்டு உருளைக்கிழங்கு சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு எடுக்கவும். (வெந்ததும் கெட்டியாக இருக்க வேண்டும் தண்ணீர் இல்லாமல்) மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பருப்பு உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை மாவு மிக்ஸியில் அரைத்த பவுடர் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் இவற்றை ஒன்றாக சேர்த்து பூரி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கோதுமை மாவில் பிரட்டி சப்பாத்தி தேய்ப்பது போல் இரண்டு, மூன்று முறை மடித்து எண்ணெய் ஊற்றி தேய்த்து சப்பாத்தி கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். இப்போது, சுவையான உருளைக்கிழங்கு பருப்பு சப்பாத்தி தயார். இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு வித்தியாசமான சுவையை கொடுக்கும். எப்பொழுதும் போல் வெறும் கோதுமை மாவில் மட்டும் சாப்பிடும் சுவை அல்லாமல் இதன் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.