இயற்கை பிரசவம், தடுப்பூசி எதிர்ப்பு கோஷ்டிகளும் … நடைமுறை யதார்த்தமும் !
டிசம்பர் 14, 2018 இல் எழுதிய பதிவு இது. ஆனாலும், இன்றைய சூழலில் அவசியமான பதிவு.
திருமணம் முடித்து, கார் ஏறியவுடன் தவறிய அழைப்புகளை பார்த்து திரும்ப அழைத்தேன். ஒரு தெரியாத எண்.
“சிவசங்கர் பேசறேன். யார் கூப்பிட்டு இருந்தீங்க?”
“கோமான்ல இருந்து பேசறேன். இதுவரைக்கும் உங்கக் கிட்ட பேசினதில்ல. ஒரு உதவி”
“சொல்லுங்க”
“அரியலூர் ஜி.எச்சில் மருமக அட்மிட் ஆயிருக்கு, பிரசவத்திற்கு. குழந்தை பிரளலன்னு சொல்லி போன் வந்துது. ராத்திரி கூட இருந்துட்டு மகன் காலையில தான் வீட்டுக்கு வந்தான். போன் வந்த உடன கிளம்பிட்டான். நீங்க கொஞ்சம் டாக்டர் கிட்ட சொல்லுங்களேன்”, என்றார்.
” சொல்றண்ணே. மருமகப் பேர் என்னா?”
மருமகள் பெயரை சொல்லி விட்டு தயங்கினார்.
“என்னா சொல்லுங்க”, என்றேன்.
” டாக்டர் கிட்ட சொல்லி, சுகப்பிரசவம் ஆகற மாதிரி பார்த்துக்க சொல்லுங்க”, என்றார்.
எனக்கு சுர்’ரென்று கோபம் ஏறியது. கட்டுப்படுத்திக் கொண்டேன்.
“உங்க மருமகளும், குழந்தையும் முக்கியமா? சுகப்பிரசவம் முக்கியமா?”, என்றுக் கேட்டேன்.
” மருமவளும், குழந்தையும் தான்”
“ஜி.எச் அரசாங்க ஆஸ்பத்திரிதான. அங்க பிரசவம் சிக்கலானா தானே ஆப்பரேஷன் பண்ணுவாங்க. தனியார் ஆஸ்பத்திரினாலும், பில்லு போட செய்யறாங்கன்னு சந்தேகப்படலாம். அடுத்தது குழந்தை பிரளலன்னு சொல்றாங்கன்னா, ஜாக்கிரதையா இருக்கணும்”
“அதுக்கில்ல பையன் சுகப்பிரசவம் தான் ஆகனும்ணு சொல்றான். ஆஸ்பத்திரியில சேர்க்கவே யோசிச்சான். நான் தான் சேர்க்க சொன்னன். அதனால தான்…”, என்று இழுத்தார்.
“என் வீட்டுக்காரம்மா டாக்டர். அதுவும் எம்.டி மகப்பேறு படிச்சவங்க. பிரசவம்ல்லாம் பார்த்தவங்க. எங்க ரெண்டு பசங்களும் ஆப்பரேஷன்ல பொறந்தவங்க தான். டாக்டரே ஆப்பரேஷன் பண்ணிக்கிட்டாங்க. அதனால பயப்படாதீங்க”, என்றேன். அவர் பதில் சொல்லவில்லை.
” நான் முதல்ல டாக்டர்கிட்ட பேசிட்டு கூப்பிடறன் இருங்க”, என்று இணைப்பை துண்டித்தேன். கார் ஓட்டிக் கொண்டே இதை கவனித்த செந்துறை காளமேகம், டாக்டர் அறிவுச்செல்வன் எண்ணை அளித்தார்.
“டாக்டர், கோமான் கிராமத்திலிருந்து பிரசவத்திற்கு வந்த பொண்ணு, குழந்தை பிரளலன்னு சொல்றாங்களாம்”, என்றேன்.
” பார்த்துட்டு உடனே கூப்பிடறேன்”, என்றார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அழைத்தார்.
“குழந்தை பிறந்துடுச்சி. ஆண் குழந்தை”, என்று மகிழ்ச்சியாக சொன்னார்.
” மகிழ்ச்சி டாக்டர். ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா? பிரசவம் நார்மலா ?”, என்றுக் கேட்டேன்.
“குழந்தையும், தாயும் நல்லா இருக்காங்க. சிசேரியன் தான். மூச்சுத் திணறி சிரமமானதால தான் சிசேரியன்”, என்று விளக்கம் அளித்தார்.
நான் கோமான்காரருக்காக கேட்டதை டாக்டர் எப்படி எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
” பிரச்சினையாகாம காப்பாத்த தான் சிசேரியன் பண்ணாங்க. நான் தியேட்டர்ல தான் இருக்கேன்”, என்றார் டாக்டர்.
“ரெண்டு பேரையும் காப்பாற்றியது தான் முக்கியம். சிசேரியன் பரவாயில்லை. ரொம்ப நன்றி டாக்டர்”
கோமான்காரரை அழைத்து சொன்னேன், “குழந்தை பொறந்துடுச்சி. ஆண் கொழந்த”.
” அதுக்குள்ள பிரசவம் ஆயிடிச்சா. சந்தோசம். பிரசவம் எப்படி ஆச்சாம்?”, என்றுக் கேட்டார்.
“ஆப்பரேஷன் தான். பண்ணலன்னா உயிருக்கு ஆபத்தா ஆயிருக்குமாம். மூச்சுத் திணறலாயிடிச்சாம்”, என்றேன்.
” சரி. நல்ல படியா ஆனா சரி தான். ரொம்ப நன்றிங்க. அரியலூர் வரும் போது பார்க்கிறேன்”, என்றார் .
நான் வழக்கமான தினப்படி பணிகளில் மூழ்கிப் போனேன்.
அடுத்த நாள் மீண்டும் கோமான்காரர் அழைத்தார்.
“ஒரு உதவி”, என்றார்.
” சொல்லுங்க”, என்றேன்
“குழந்தைக்கு தடுப்பூசி போடாம இருக்க சொல்லணும் ஆஸ்பத்திரியில”, என்றார். அப்போது தான் முகநூலில் அரக்கர்கள் “இயற்கை பிரசவம், தடுப்பூசி எதிர்ப்பு கோஷ்டிகளை” எதிர்த்து அதிரடி கிளப்புவதன் அவசியம் புரிந்தது.
“கோச்சிக்காதீங்கண்ணே. தடுப்பூசி போட்டு தான் ஆகணும். இத மாதிரி செய்யறதால தான், சமீபத்தில் அம்மை நோய் சில இடங்களில் மீண்டும் தலை எடுத்திருக்குன்னு சொல்றாங்க. அதனால் நான் தடுப்பூசி போடனும்னு தான் சொல்லுவேன்”, என்றேன்.
என் பேச்சின் கடுமையை உணர்ந்த அவர், ” என் பையன் தான் அப்படி சொல்றான்”, என்றார். “விஞ்ஞானம் முன்னேறிகிட்டு இருக்கு. இப்ப செல் போன்ல பேசுறீங்க. அரியலூருக்கு பஸ்ல வர்றீங்க. அதலாம் செய்யலாம். தடுப்பூசி மட்டும் போடாம இயற்கையா இருக்கனும்னா கொழந்தைக்கு நோய் தான் வரும்”, என்றேன்.
” அதுக்கில்ல…”, என்று இழுத்தார்
“இப்ப எனக்கே கால் முறிஞ்சிடிச்சி. பழைய காலம் மாதிரி, கட்டுப் போட்டுகிட்டு ஆறுமாசம் படுத்திருக்கணுமா, இல்ல ஆப்பரேஷன் செஞ்சி நெட்டு, போல்ட்டு போட்டுகிட்டு நாலு நாள்ல நடக்கலாமான்னு கேட்டா எனக்கு என்னா அறிவுரை சொல்வீங்க?”, என்று காட்டமாகவே கேட்டேன்.
” ஆப்பரேஷன் தான் சரி”, என்றார்.
“அது போல தான் குழந்த பிறக்க ஆப்பரேஷன் பண்றதும், நோய் தாக்காம இருக்க தடுப்பூசி போடறதும்”, என்றேன்.
” சரிங்க. பையன் தான் சொன்னான். நான் அவன் கிட்ட சொல்லிடறேன்”, என்று இறங்கி வந்தார்.
“இவ்வளவு நேரம் நான் உங்கக்கிட்ட விளக்கனும்னு அவசியம் இருக்கா? இல்ல இதுல எனக்கு ஏதாவது லாபம் இருக்கா? இதையும் உங்க பையன் கிட்ட சொல்லுங்க”, என்றேன்.
” எனக்கு புரியுது. நான் சொல்லிடுறேன்”, என்றார். நேற்று அலுவலகம் வந்திருக்கிறார், மகனுடன். நான் ஒரு துக்கத்திற்கு போயிருந்த நேரம். அங்கிருந்த நண்பரிடம் கேட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று நண்பருக்கு மகன் போன் செய்திருக்கிறார். “சார் கிட்ட பேசணும். அப்பாவும் தடுப்பூசி போட்டாகணும்கிறார். சார் சொன்னா தான் அப்பா ஒத்துப்பாரு”, என்றிருக்கிறார்.
” தடுப்பூசி போடக்கூடாதுன்னு உனக்கு யார் சொன்னது?”, நண்பர் கேட்டிருக்கிறார். “நானே தெரிஞ்சிக்கிட்டேன். இயற்கைப்படி தான் வாழணும்”, என்றிருக்கிறார் மகன்.
மகனை சந்திக்க இன்னும் நேரம் அமையவில்லை. அப்பா புரிந்து கொண்டார், மகன் எப்போது ?
இதை ஏன் முகநூலில் எழுத வேண்டும், அந்தப் பையன் கிட்ட நேரில் சொல்ல வேண்டியது தானே என்ற கேள்வி எழும்…
வாட்சாப் படித்து தான் அந்த தம்பிக்கு இந்த ” இயற்கை” அறிவு வளர்ந்திருக்கு. அதனால் முகநூல், வாட்சாப் மூலமே இது போன்ற இயற்கை ஆர்வலத் தம்பிகளுக்கு புரிய வைப்போம் என்று தான் இந்த முயற்சி.
அந்தத் தம்பியை நேரில் சந்திக்கும் போதும் சொல்வேன். அரசே இதற்கு ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்…
மருத்துவத்தின் மகத்துவம் உணர்ந்திடு, விழித்திடு வாட்சாப் தமிழா !
— சா.சி.சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சர்.