பிரேமலதாவின் அவமரியாதைக் கலாச்சாரம்! திமுகவுக்கு இது தேவையா?
2024 டிசம்பர்-28—ஆம் தேதி, தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்தின் முதலமாண்டு நினைவு தினம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அக்கட்சியின் தொண்டர்கள், சென்னைக்கு வந்து கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
2024 டிச.23—ஆம் தேதி, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பிரேமலதாவின் தம்பி சுதீஷ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகிய மூவரும் அண்ணா அறிவாலயம் சென்று, திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்தனர். முதல்வரை அவர்கள் சந்தித்த புகைப்படமும் டிச.24—ஆம் தேதி, கட்சியின் பத்திரிகையான ‘முரசொலி’யில் வெளியானது.
இதே போல் தமிழ்நாடு அரசியலின் புதிய தலைவர் & நடிகர் விஜய் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்புவிடுத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜயபிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி
“மாசற்ற மனசுக்குச் சொந்தக்காரர், எனது நண்பர் கேப்டன் விஜயகாந்தை இந்த நாளில் நினவு கூர்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் டிச.28—ஆம் தேதி பதிவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
டிச.28—ஆம் தேதி காலை திமுகவின் சார்ர்பில் அமைச்சர் சேகர்பாபு, விஜயகாந்தின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அதே சமயம், தேமுகதிகவின் தொண்டர்கள், கோயம்பேடு 100 அடி சாலையில் பிரேமலதா தலைமையில் பேரணியாகச் செல்ல திடீரென முடிவெடுத்து, சாலையில் இறங்கிய போது, போக்குவரத்து நெருக்கடி அதிகமாகும் என்ற காரணத்தால், பேரணிக்கு அனுமதி மறுத்து, சாலையில் தடுப்புகளையும் வைத்தது காவல்துறை.
இதனால் பிரேமலதா ஆவேசமானதும் தொண்டர்களும் ஆக்ரோஷமாகி, போலீசுடன் மல்லுக்கட்டி, தள்ளுமுள்ளானது. அதிமுகவின் ஜெயக்குமார், பா.ஜ.கவின் ‘சாட்டையடி ஸ்பெஷலிஸ்ட்’ அண்ணாமலை, நா.த.கவின் சீமான் ஆகியோர் திமுகவையும் தமிழ்நாடு காவல்துறையையும் வசைபாடினார்கள். கடைசியாக பிரேமலதாவும் திமுகவுக்கு எதிராக பொங்கித் தீர்த்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2023 டிச.28-ஆம் தேதி, விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டதும், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சாலிகிராமம் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், கோயம்பேடு 100 அடி சாலையில் இருக்கும் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் உடலை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் கவனிக்குமாறு சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கேயும் இடநெருக்கடி ஏற்பட்டதால், சென்னை தீவுத்திடலில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி, அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள, தேமுதிகவின் தலைமை அலுவலத்திற்கு விஜயகாந்தின் உடலை ஊர்வலமாகக் கொண்டு வந்து, அரசு மரியாதையுடன் இறுதி தகனம் செய்வதற்கும் உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இறுதிக்காரியங்கள் முடிந்த அரை மணி நேரத்தில், தமிழ்நாடு முதல்வருக்கும் சென்னை காவல்துறைக்கும் நன்றி சொன்னார் பிரேமலதா. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே திமுக மீது சரமாரியாக வசைச் சொற்களை வீசினார்.
அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தின் மீதுள்ள மரியாதையால் தனது அமைச்சர் சேகர்பாபுவை இப்போது அனுப்பி வைத்தார் . ஆனால் பிரேமலதாவோ, இப்போதும் முதலாமாண்டு நினைவு நாளில் இரண்டாவது முறையாக திமுகவை அவமாரியதை செய்துள்ளார்.
திமுகவின் சார்ர்பில் அமைச்சர் சேகர்பாபு, விஜயகாந்தின் நினைவிடம் சென்று அஞ்சலி
பிரேமலாதவின் போக்கைப் பார்த்தால் பொதுமக்களிடம் விஜயகாந்த் மீதிருக்கும் மரியாதைக்கும் இறுதி அஞ்சலி செலுத்திவிடுவார் போல.
பிரேமலதாவைப் பொறுத்த வரை தேமுக என்பது ஒரு ‘பிஸ்னஸ் பிராண்ட்’ டாகிவிட்டது. அந்தக் கட்சியை அவர் எப்படி வேண்டுமானாலும் வழிநடத்தட்டும், கொண்டு போகட்டும். அது அவர்பாடு, அக்கட்சியின் தொண்டர்கள்பாடு. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லக்கூடாது, சொல்வதற்கில்லை.
ஆனால் ”திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது தேவையா?” இதைக் கேட்பதில் நமக்கொன்றும் தயக்கமில்லை.
–மதுரை மாறன்.