அரசு அதிகாரிகள் உத்தரவுகளை குப்பையில் வீசி, குடிநீர் இணைப்பு தர மறுக்கும் ஊராட்சி தலைவர் !
அரசு உத்தரவுகளை குப்பையில் வீசி, ரியல் எஸ்டேட் அதிபருக்கு விசுவாசம் காட்டும் திருச்சி ஊராட்சி தலைவர் கணேசன் !
சமீபத்தில், விருதுநகர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் குழுமியிருந்த கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயி ஒருவரை மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலரின் அடாவடியை கண்டு அதிர்ந்து போனோம்.
பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது நேரடியாக மக்களுக்கு நன்மை பயக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திலானது. பிரிட்டிஷ்காரன் காலத்து பாளையக்காரர்களைப் போல, இன்றும் பல ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ”வீராப்பு” காட்டிவருகிறார்கள் என்பதுதான் யதார்த்தமான ஒன்று.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா, உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்முச்சந்தி கிராமத்தை சேர்ந்த முருகதாஸூக்கு நேர்ந்த கொடுமை தனிரகம். பொன்முச்சந்தி கிராமம் சர்வே எண்:39/2, பட்டா எண்:282 இன்படி பூர்வீக பாத்தியப்பட்ட 10 சென்ட் இடத்தில் கடைகளுடன்கூடிய வீட்டை கட்டி குடியிருந்து வருகிறார். 3/644 என்ற எண்ணில் வீட்டு வரி ரசீதும் முறையாக வைத்திருக்கிறார். கடைகளுக்கும் 3/639, 640, 641, 642, மற்றும் 646 ஆகிய எண்களில் வணிக பயன்பாட்டுக்கான வரியும் கட்டி வருகிறார். 20 குடும்பங்கள், 30 கடைகளும் கொண்ட பொன்முச்சந்தி கிராமத்தில் முருகதாஸ் வீட்டுக்கு மட்டும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவே இல்லை.
4 பெண் குழந்தைகளையும் ஒரு பையனையும் கொண்ட முருகதாஸ் குடும்பத்தின் நீர்த்தேவைக்கு அன்றாடம் அக்கம் பக்கம் அலைந்துகொண்டிருக்கிறார். பக்கத்து வீடு வரைக்கும் இணைப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தன்னை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் வேண்டுமென்றே இணைப்பு வழங்காமல் முட்டுக்கட்டைகளை போட்டுவருகிறார் எனக் குற்றஞ்சாட்டுகிறார் முருகதாஸ்.
பழிவாங்கும் அளவுக்கு உங்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் அப்படி என்ன முன்விரோதம்? என்ற கேள்வியை முருகதாஸிடம் எழுப்பினோம்.
“தற்போது குடியிருக்கும் இடம் தொடர்பான பிரச்சினைதான். பொன்முச்சந்தி என்ற ஊரின் பெயருக்கு ஏற்றார் போலவே மூன்று சாலைகளும் ஒன்று சேரும் இடத்தில் கார்னர் இடமாக எங்களது இடம் அமைந்துள்ளது. எங்களது இடத்திற்கு அப்படியே பின்பக்கம் உள்ள 5 ஏக்கர் அளவில் காலி மணை இருக்கிறது. அந்த இடத்திற்கு இடைஞ்சலாக எங்களுடைய 10 சென்ட் இடம் அமைந்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த 10 சென்ட் இடத்தையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டால், அவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்க முடியும். பெரிய அளவிலான வணிக வளாகங்களை கட்டி காசு பார்க்க முடியும் என கணக்குபோடுகிறார்கள். இதற்காகத்தான், அந்த இடத்திலிருந்து எங்களை வெளியேற்ற பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். முதலில் விலை பேசினார்கள். பின்னர், கொலை மிரட்டல் விட்டார்கள். உள்ளூர் ஆட்களை வைத்து பிரச்சினையும் செய்தார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு இந்த 10 சென்ட் இடத்தை விற்றுவிட்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்துதான் எல்லாமே செய்து வருகிறார்கள். 5 ஏக்கர் இடம் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நபர்களுக்கு ஆதரவாகத்தான் ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுகிறார். அதுதான் பிரச்சினையே.” என்கிறார் முருகதாஸ்.
இதில் கொடுமையான விசயம் என்னவெனில், இவ்விவகாரம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அடுத்தடுத்து பல்வேறு புகார்களை முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். அப்புகார்களின் மீது உரிய விசாரணைகளை நடத்தி அதிகாரிகளும் உரிய உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டார்கள்.
அடிமனை சிக்கல் தொடர்பான வழக்கில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் .எம்.செல்வராஜ் 25.01.2023 தேதியிட்ட ஓ.மு.அ5/5068/2019 இன்படி “தானசெட்டில்மெண்ட் பத்திரம் 5167/2016ன்படி ஏக்கர் 0 சென்ட் 10 அளவுள்ள இடம் சொந்தமாக உள்ளதாலும் முருகதாஸ் மனைவி கவிதா பெயர் கிராம பதிவில் உள்ளதை உறுதி செய்து அதே நிலையிலேயே கிராம மற்றும் வட்ட கணக்குகளை பராமரிக்க மணப்பாறை வட்டாட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது.” என உறுதிப்படுத்தியிருக்கிறார்.
“ஊராட்சி மன்றத்தலைவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும், 2019-20 ஆம் ஆண்டிலிருந்து வீட்டுவரி, கடைவரி ரசீது வழங்கிட மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…. மனுதாரருக்கு குடிநீர் இணைப்பு வழங்கிட உடன் நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை இவ்வலுவலுகத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி-ஊ)-க்கு தெரிவிக்கப்படுகிறது.” என சௌ.கங்காதாரிணி, (உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருச்சிராப்பள்ளி) அவர்களின் 08.08.2023 தேதியிட்ட ந.க.அ.9/0475/2023 கடிதமும் ஆதாரங்களாக இருக்கின்றன. ஆனாலும், இன்றுவரையில் முருகதாஸ் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஊராட்சியின் ரசீதுகளும் வழங்கப்படவில்லை.
மேலதிகாரி உத்தரவிட்டும் ஊராட்சி மன்றத்தலைவர் குடிநீர் இணைப்பு தர மறுக்கிறாரே, என வட்டார வளர்ச்சி அலுவலரை கேட்டதற்கு, “நான் சொல்லதான்யா முடியும். அவர் செய்யலைன்னா, என்னை வந்து பைப் போட்டு தர சொல்றியா”னு கேட்டிருக்கிறார் அவர்.
என்னதான் சார் பிரச்சினை? உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனிடம் பேசினோம். ”அவர்கள் முறையாக அணுகவில்லை. தலைவருக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை. தண்ணீர் இணைப்பு தரவில்லை என என்னை பற்றி எல்லா இடத்திலும் புகார் சொல்லி வருகிறார். அவருடைய இடமே, சர்ச்சைக்குரியது. அந்த இடம் ஜெயராமனுக்கு சொந்தமானது. அவரிடமிருந்து இன்னொருவர் வாங்கியது போலவும், அவர்களிடமிருந்து முருகதாஸ் மனைவிக்கு தான செட்டில்மெண்ட் போட்டது போலவும் ஆவணங்களை வைத்திருக்கிறார்கள். உள்ளூரில் சிலர் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னர் இருந்த பி.டி.ஓ. குடிநீர் இணைப்பு கொடுக்கக்கூடாது என சொல்லியிருக்கிறார்.” என பழைய பல்லவியை பாடியவரிடம், ஊராட்சிகள் – உதவி இயக்குநரின் கடிதம் குறித்து கேட்டதற்கு, “அவர் வீடு உள்ளிட்டு இன்னும் 4 வீடு பாக்கி இருக்கிறது. திட்ட மதிப்பீடு கொடுத்திருக்கிறோம்.” என்றார். ”சரி, வீட்டு வரி ரசீதாவது கொடுத்துவிட்டீர்களா?” என்ற கேள்விக்கு, “அது என் வேலை இல்லை. ஊராட்சி செயலரை கேட்டுக்கொள்ளுங்கள்” என கைகாட்டுகிறார். ஊராட்சி செயலரை கேட்டால், “தலைவர் சொன்னால், நான் போட்டுத்தர போகிறேன். தலைவரை அணுகுங்கள்.” என நழுவுகிறார்.
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் எம்.செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என சௌ.கங்காதாரிணி ஆகியோரின் உத்தரவுகளை குப்பையில் போட்டுவிட்டு, ஜெயராமன் என்பவர் தனக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த ஆட்சேபனைக் கடிதத்தின்படி சர்ச்சைக்குரிய இடம் என்று சொல்லி ஊராட்சி மன்றத் தலைவர் முட்டுக்கட்டை போடுவதற்கு பஞ்சாயத்துராஜ் சட்டம் இடம் கொடுக்கிறதா? என்ற கேள்வியோடு, மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் அவர்களை தொடர்புகொண்டோம். “நானும் பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் குடிநீர் இணைப்பு கொடுத்துவிடுவோம். வீட்டுவரி ரசீதுகளும் கொடுக்க சொல்லியிருக்கிறோம். இரண்டு நாளில் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்.” என்றார் பொறுப்பாக.
ஊராட்சிக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியிலோ, அரசு புறம்போக்கு இடத்திலோ ஆக்கிரமிப்பு செய்திருந்தால், குடிநீர் இணைப்பும் ரசீதும் வழங்க மாட்டேன் என மறுப்பதில் நியாயம் இருக்கிறது. முழுக்க முழுக்க உரிமையியல் சார்ந்த பிரச்சினை. இன்னும் சொல்லப்போனால், இருதரப்பும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முன்பாக முடித்துக்கொண்ட பிரச்சினை. ஆனாலும், அப்பட்டமாக ஒருதலைபட்சமாகவே பேசுகிறார், ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன். தனது உயர் அதிகாரிகளின் உத்தரவையும் மதிக்காமல், இன்னும் வீட்டு வரி ரசீது கொடுக்காமல் உதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ”அது என் வேலையில்லை. ஊராட்சி செயலரை கேட்டுக்கொள்” என நம்மிடமே திமிராகவும் பதிலளிக்கிறார்.
விருதுநகரில் விவசாயியை ஏறி மிதித்தார்கள். உசிலம்பட்டி ஊராட்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமைச்செயலகத்தின் தனி அலுலவர் கையொப்பம் தாங்கிய உத்தரவுகள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனின் காலுக்குக்கீழே கசங்கிக் கிடக்கின்றன.
ஆதிரன்.
Oru Nala thalaivarai thorkadithu vitargal intha oor makkal indru avathipadukirargal.