சிறைக்காவலர் தற்கொலை : என்னதான் நடக்கிறது சிறைத்துறையில் ?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த 2006 பேட்ச் சிறைக்காவலர் பிரபுவின் தற்கொலை, தமிழகம் முழுவதிலுமுள்ள சிறைக்காவலர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழக சிறைத்துறையில் என்னதான் நடக்கிறது? என்ற விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மன்னார்குடி கிளைச்சிறையில் பணியாற்றி வந்த பிரபு சமீபத்தில் சென்னை மத்திய சிறை-2 க்கு இடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். இடமாற்றலில் போன இடத்தில் குடித்துவிட்டு பணிக்கு வந்திருப்பதாகக்கூறி சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மன்னார்குடியிலிருந்து பேருந்தில் கிளம்பும்போது, மது அருந்தியதாகவும் பணியின்போது தான் மது அருந்தவில்லை என்று அவர் கெஞ்சிக் கூத்தாடியும் எந்த பலனும் இல்லாமல் போனது. அவருக்கு எதிரான சஸ்பெண்ட் நடவடிக்கை, நிரந்தர டிஸ்மிஸ் ஆக மாறிப்போனது.
அவர் நேசித்த காக்கி உடை அவர் கைகளிலிருந்து பறிக்கப்பட்ட அந்த நிமிடமே அவர் முழுவதுமாய் உடைந்து போயிருக்கிறார். அவசர கோலத்தில் அந்த முடிவையும் எடுக்கத் துணிந்து விட்டார் பிரபு. வீட்டின் முன்பாக கிடத்தப்பட்டிருக்கிறது பிரபுவின் சடலம். நடுத்தெருவில் கைவிடப்பட்ட நிலையில் பரிதவித்து நிற்கிறார்கள் பிரபுவின் குடும்பத்தினர்.
பிரபுவை போலவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்கள். துறைரீதியான விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள். கட்டுப்பாடான காவல் துறையில் ஒழுங்கு நடவடிக்கை அவசியமானதுதான். மறுப்பதற்கில்லை.

சிறைக்குள் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா, செல்போன்கள். சிறப்பு வசதிகளை அனுபவித்து வரும் ரவுடிகள் செல்வாக்கு மிகுந்த கைதிகள். சிறைக் கைதிகளுக்கான உணவு வழங்குவதில் ஊழல். காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியதில் ஊழல். பணியிட மாறுதல் வழங்குவதில் கைமாறும் கரண்சிகள். சிறை வளாகத்தையே மாட்டு கொட்டகை போலவும், சிறைக்காவலர்களை பண்ணையாட்களைப் போலவும் மாற்றிய உயர் அதிகாரி. உயர் அதிகாரி ஒருவரின் முகாம் அலுவலகத்திற்குள்ளேயே சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட சிறை சமையலர் … என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கிறது சிறைத்துறை. இத்தகைய சர்ச்சைகளில் சிக்கிய எத்தனை உயர் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்? ஏட்டையாவை மட்டும் கட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்?
காவல்துறையின் மாண்பும் இதுகாறும் கட்டிக்காத்துவரும் ஒழுங்கும் சீர்கெட்டுவிடக் கூடாதென்பதிலிருந்தே, தண்டனைக்குள்ளான சிறைக்காவலர்கள் பொறுத்துப் போகிறார்கள். நிரந்தரமாக தூக்கி கடாசும்போது மனது உடைந்து போகிறார்கள்.
மற்ற துறைகளுக்கு இருப்பது போல, அவர்களுக்கும் ஒரு சங்கம், ஒருங்கிணைப்பு, கூட்டமைப்பு இருக்குமேயானால் உத்தம வேடம் தரித்திருக்கும் உயர் அதிகாரிகளின் யோக்கியதைகள் இந்நேரம் சந்தி சிரித்திருகும்.
பெற்றத் தாயையும் பெண் பிஞ்சொன்றையும் ஈவிரக்கமின்றி கொன்றொழித்தவன் கூட, சட்டத்தின் துணை நின்று தூக்குத்தண்டனையிலிருந்து தப்புவிக்கப்படும் நிலையில், பயணித்தின்போது அருந்திய மதுவின் வாடை மறுநாள் வீசியது என்பதற்காக சிறைக்காவலனுக்கு நிரந்தர பணிநீக்கமும் மரணமும்தான் தண்டனையா? என்னதான், நடக்கிறது சிறைத்துறையில்? விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமா, தமிழக அரசு?
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.