சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி
சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி
டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்…
‘மாண்புமிகு. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணிவேராக சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கழகத்தை வலிமையோடு முன்னெடுக்கும் பணியில் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரன் செயலாற்றிவருகிறார். அவருக்கு பக்கத் துணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, நான் உட்பட 18 + 3 சட்டமன்ற உறுப்பினர்களும், எண்ணிலடங்கா கழகத் தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.
ஆனால், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.
கடந்த ஆண்டு மறைந்த மகாதேவன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்குத் தெரியும். தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிகடாவாக்க முனையாதிர்கள் … நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களைக் குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்.
எடப்பாடி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் திவாகரன் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய் பரப்புரையைச் செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள் தலைமை சின்னம்மாவும், அண்ணன் டிடிவி. தினகரனும்தான். இதுதான் பதிவு.
இலைமறைகாயாக பேசப்பட்டுவந்த விஷயங்கள் எல்லாம் வெடித்து வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ‘கடந்த சனிக்கிழமை இரவு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கத்தில் இருக்கும் ஒருவரை ஜெய் ஆனந்த் சந்தித்திருக்கிறார். அவரை சந்தித்த அரை மணிநேரத்தில் திவாகரனும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான், சின்னம்மாவைச் சிறையில் இருந்து மீட்பேன் என்ற ரீதியில் ஜெய் ஆனந்த் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதாவது சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்களாம். அதற்கு, தினகரன் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுத்து வர வேண்டும் என்பது தான் எடப்பாடி தரப்பில் தரப்பட்ட அசைன்மென்ட். அதற்காகத்தான் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் அப்பாவும் பிள்ளையும். யார் யாரையோ வைத்து, எம்எல்ஏக்கள் எல்லோரும் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை திவாகரனே உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். இதன் விலையாக திவாகரன் மகனுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு தருவதாக எடப்பாடி தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சொல்கிறார்கள் தினகரன் தரப்பில் உள்ளவர்கள்”.
திவாகரன் குடும்பத்துக்கும் தினகரனுக்கும் இடையில் இருக்கும் மோதல் பற்றி எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, ‘திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. வெற்றிவேல் ஏன் அப்படிப் பதிவிட்டார் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் நட்போடு பேசிக்கொண்டிருந்ததை நானே பார்த்திருக்கிறேன். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்தும் கட்சிக்காக உழைக்கட்டும். அவருக்குப் பொறுப்பு தேடி வரும். அம்மா மனம் நொந்து போய்தான் உயிரை விட்டார். தன்னைச் சுற்றித் திருடர்கள் இருப்பதாக உயிரோடு இருக்கும்போதே அவர் சொன்னார். இப்போது அம்மா சொன்ன அந்த திருடர்கள் எடப்பாடி பக்கமும் இருக்கிறார்கள். எங்கள் பக்கமும் இருக்கிறார்கள்.’ என்று ஓப்பனாகவே பேசியிருக்கிறார்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசியவர்கள், ‘வெற்றிவேல் பதிவிட்டதும், தினகரன் அவரைத் தொடர்புகொண்டு, ‘குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்னை இருக்கும் சார். அதையெல்லாம் நீங்க எதுக்கு ஃபேஸ்புக்ல போடுறிங்க? எனக்கும் திவாகரனுக்கும் சண்டைன்னு நான் உங்ககிட்ட வந்து சொன்னேனா? இப்போ பாருங்க குடும்பத்துக்குள்ள தேவையில்லாமல் குழப்பம் வந்துடுச்சு. நான்தான் உங்ககிட்ட சொல்லி இப்படி போடச் சொன்னேன்னு சொல்றாங்க. அவங்க என்னமோ பண்ணிட்டுப் போகட்டும். அதை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க கட்சி வேலைகளை மட்டும் பாருங்க. என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு வெற்றிவேல், ‘இது உங்க குடும்ப பிரச்னையாக மட்டும் இருந்தால் நான் தலையிட்டிருக்க மாட்டேங்க… நாங்க எல்லோரும் ஏதோ எடப்பாடி பக்கம் போறதா அவங்க பேச ஆரம்பிச்சாங்க. அதனால்தான் நான் பதில் சொல்ல வேண்டியதாகிடுச்சு. இதுக்கு மேல உங்க பிரச்னை பற்றி நான் பேசவே மாட்டேங்க…’ என வருத்தத்துடன் போனை வைத்துவிட்டாராம்.
பின்னர் பெங்களூருவில் இருந்த புகழேந்தியை சென்னைக்கு வரச்சொல்லி. வெற்றிவேலின் பதிவுக்கு மறுப்பு பேசச் சொன்னார்களாம். மேலும், தினகரன் பேசியதில் கடுமையான அதிருப்தியில் இருக்கும் வெற்றிவேலை, சமாதானப்படுத்தும் பொறுப்பையும் பெங்களூரு புகழேந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.