சாதி மாறி கல்யாணம் பன்னியிருக்கியே வெட்கமா இல்லையா ? சாதி சான்று தர மறுத்த தாசில்தார் !
தூத்துக்குடி மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மகாராஜா. மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வனத்தாய். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மகாராஜா கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அவருடைய கணவர் ஜாதியில் சாதி சான்றிதழ் வழங்கும்படி விண்ணப்பம் செய்துள்ளார். அவருடைய கணவருக்கு ஜாதி சான்றிதழ் இல்லை என்பதால் , கொடி வழி உறவாக தனது கணவரின் பெரியப்பா மகன் ஜாதி சான்றிதழ் ஆதாரத்துடன், தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் , தாசில்தாரை பார்க்கும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 19ஆம் தேதி வனத்தாய் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் தனது கோரிக்கை மனு குறித்து தெரிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு சென்றவரை வெளியே இருங்கள் என்று கூறிவிட்டு மதியம் மூன்று மணிக்கு அழைத்த தாசில்தார் கலப்புத் திருமணம் செய்திருக்கிறாய் உனக்கு வெட்கமா இல்லையா ? அதுவும் தாழ்ந்த ஜாதி சேர்ந்தவனை திருமணம் செய்து இருக்கிறாய் ?. உன் கணவர் ஜாதியில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழ் தர மாட்டேன் , வேண்டுமென்றால் உன்னுடைய ஜாதிக்கு சான்றிதழ் தருகிறேன் என்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மகாராஜா அவரது மனைவி வனத்தாய் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தாரை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
இதே போன்று கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் உள்ள கண்மாய் கரையை சேதப்படுத்தி குழாய் அமைத்து நேரடியாக கழிவுநீர் கலப்பது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கை மனுவினை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
— மணிபாரதி