தமிழரின் தொன்மையைப் போற்றும் ஆசீவகமும் கீழடியும் நூல் வெளியீடு !
ஆசீவகமும் கீழடியும் நூல் வெளியீடு – திருச்சி புனித பவுல் இறையியல் நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய ஆசீவகமும் கீழடியும் கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆசீவகம் கீழடி என்பது ஒரு சமயத்தின் பெயரோ, ஊரின் பெயரோ மட்டுமல்ல. தமிழர்க்கு, தமிழுலோகோருக்கு எழுச்சி உண்டாக்கும் மந்திர சொற்கள் இவை. இந்த சொற்கள் தான் தற்பொழுது தமிழை, தமிழ் மரபை, பண்பாட்டை, தமிழ் சமயத்தை, வாழ்வியலை, தொன்மையை மீட்டெடுக்கும் பணியில் உந்துதலைத் தந்துகொண்டிருக்கின்றன.

ஆசீவகம் என்பது ஆழமான மனித மையம் கொண்ட சிறந்த சமயத் தத்துவம் . உயரிய, தொன்மையான தமிழ் நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாட்டுத் திரட்சியே கீழடி. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செதுக்கப்பட்ட வளமான, செழுமையான, தொன்மையான நாகரிகத்தின் பண்பாட்டுத் தோளில் அமர்ந்துக் கொண்டு உலகைப் பார்க்கும் பேறுபெற்றிருக்கின்ற தமிழர்கள் அதன் செழுமையை, தொன்மையை பறைசாற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த பேறு வேறு எந்த இனக்குழுக்களுக்கோ, மொழியினருக்கோ இல்லை என்பதே தமிழுக்கான சிறப்பு. பிரமிப்பாகவும் வியப்பூட்டுவதாகவும், ஈர்ப்பு கொண்டதாகவும் இருக்கும் என்பதே தொன்மையின் அழகு. உலகின் அனைத்து சமூகங்களும், சமயங்களும், நிறுவனங்களும் மட்டுமல்ல தனிமனிதரும் தமது தொன்மையை அறிந்து தெளிவதில் இருக்கும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது.

தொன்மையைக் கண்டறிவதற்கான அறிவியலின் பரிமாணங்கள் பல. தொல்லியல், அகழ்வாராய்ச்சி, சமூக சமய மரபுகளின் ஆய்வு, இலக்கிய ஆய்வு,நாட்டார் வழக்காற்றியல், மக்கள் நடுவில் காணப்படும் பல்வேறு மரபு வழக்குகள், மனித வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை நம்மை நம்மவர் கடந்து வந்த பாதையில் தொன்மை நோக்கிப் பயணிக்க உதவுகின்றன.
தமிழரின் தொன்மையைப் போற்றும் விதமாக வெளிவந்துள்ள இந்த நூலை மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி வெளியிட, முதல் பிரதியை செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தொகுப்பாசிரியர் அருள்தந்தை வரன் வர்தன், அருள்தந்தையர்கள் ஆன்ட்ரூ, சேவியர் டெரன்ஸ், ஆன்றணிதாஸ் ஸ்டாலின் மற்றும் அருள்சகோதரி ஜோஸ்பின் காணிக்கை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். புனித பவுல் இறையியல் கல்லூரிப் பேராசிரியர் அருள்பணியாளர் மை.வில்லியம் நூலைத் திறனாய்வு செய்தார்.
– ஆதன்