இன்னும் முளைக்காத காடு – ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு
இன்னும் முளைக்காத காடு – ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு – கும்பகோணம், தாராசுரம், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மீளாத் துயில் கொண்டிருக்கும் இடம் அருகினில், ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு சிறப்பாக 06.10.2024 ஞாயிறு அன்று நடைபெற்றது, கும்பகோணத்தில் இயங்கி வரும் சொல் வெளி என்கிற இலக்கிய அமைப்பானது அதனைச் சீரும் சிறப்புமாக நிகழ்த்தியது. அந்த அமைப்பின் மூன்றாவது நிகழ்வாகும் இது. அதன் அமைப்பாளர் கவிஞர் கோ. பாரதிமோகன்.
தனது ஹைக்கூ கவிதைகளை “இன்னும் முளைக்காத காடு” எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தவர் கவிஞர் நிழலி. கவிஞர்கள் கலியமூர்த்தி, தாய்நதி, ஆங்கரை பைரவி, சீரன் தாபா, வெயில் க. மூர்த்தி, பதியம் தமிழ்மாறன், தோழர் அகவி, வலங்கைமான் நூர்தீன், ச. மோகன், குடந்தை பிரேமி, குழலி குமார் இன்னும் பலரும் அன்புடன் இந்த நிகழ்வினில் பங்கேற்றிருந்தனர்.
இதழாசிரியர் பல்லவிக்குமார், கவிஞர் மு. முருகேஷ் ஆகியோர் “இன்னும் முளைக்காத காடு” ஹைக்கூ கவிதை நூலினை வெளியிட்டு உரையாற்றினர். கவிஞர் நிழலி, கும்பகோணத்தில் வசித்து வருகின்ற இனிய இல்லத்தரசி. அவருக்குக் கவிதைகளும் சிறுகதைகளும் கை வரப்பெற்ற படைப்புகள் ஆகும். “சவுக்காரம்” (இன்றைய தலைமுறைக்கு சவுக்காரம் என்றால் புதிதான சொல் ஆகும்), “குடம்பி” ஆகிய தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் இரண்டு, “ஒப்பந்தமிட்ட இரவு” மற்றும் “பரிதியாழ்” என்கிற தலைப்புகளில் கவிதைத் தொகுப்பு நூல்கள் இரண்டு, எழுதத் தொடங்கிய நான்கு ஆண்டுகளில், “இன்னும் முளைக்காத காடு” ஹைக்கூ கவிதைத் தொகுப்பானது, கவிஞர் நிழலியின் ஐந்தாவது தொகுப்பு ஆகும்.
இருநூற்று எண்பது ஹைக்கூ கவிதைகளைத் தன்னகத்தே மலர வைத்துள்ளது, “இன்னும் முளைக்காத காடு” கவிதைத் தொகுப்பு. இன்னும் முளைக்காத காட்டுக்கு “வெயில்” மிகவும் அவசியம் தானே. அதனால் தானோ என்னவோ வெயிலை விளாசித் தள்ளியிருக்கிறார்.
“பறவை திரும்பும் வரை // கூட்டில் உறங்கியது // வெயில்.”
“இலையுதிர்காலம் // உதிர்ந்து கிடக்கிறது // மரத்தைச் சுற்றி வெயில்.”
“யாருமற்ற வீடு // ஒய்யாரமாய்ப் படுத்திருக்கிறது // வெயில்.”
“கிளையை அசைக்கும் குரங்கு // உதிர்ந்து கொண்டே இருந்தது // உச்சி வெயில்.”
“மரத்திற்கு மரம் தாவுகையில் // வெயிலை அசைக்கின்றன // குரங்குகள்.”
வெயிலைப் படுத்துறங்க வைப்பதிலும், அதே வெயிலை எழுப்பி அசைத்துப் பார்ப்பதிலும், விளையாட்டாக அதனை உதிர்த்து விடுவதிலும் கைவரப் பெற்றுள்ளார் கவிஞர் நிழலி.
“ஹைக்கூ கவிதை வடிவம் என்பது அழுத்தமாகவும் அதே நேரத்தில் சமூகப் பார்வை கொண்டதாகவும் எழுதப்பட்டு வருகிறது. இதன் பிறப்பிடம் ஜப்பான் ஆகும். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் முதிரா பட்சி என்பவர், ஒரு ஹைக்கூவில் “உலகம் நகரும் // தூறலின் கூரையாக // பார்த்துக் கொண்டு.” என்று புதிய பார்வையை நமக்குத் திறப்புச் செய்கிறார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் சோபன், “வட்ட நிலாவை எடு // குச்சியொன்றைக் கைப்பிடியாக்கு // ஓ… நிலாவும் அழகான விசிறி.” என்று வட்ட நிலாவினை நமக்குக் கைவிசிறியாக்கி கற்பனையைக் கூட்டுகிறார் அந்த ஜப்பானியக் கவிஞர். அதுபோல “இன்னும் முளைக்காத காடு” ஹைக்கூ கவிதைகளில் நமது கற்பனைச் சிறகுகளை விரித்து வைக்கிறார் கவிஞர் நிழலி.” எனக் குறிப்பிட்டார் விருத்தாச்சலத்தில் இருந்து வெளியாகும் தமிழ்ப் பல்லவி எனும் காலாண்டு இதழின் ஆசிரியரும் கவிஞருமான பல்லவிக்குமார்.
“ஹைக்கூ கவிதை வடிவம் என்பது ஜப்பானியக் கவிதை வடிவம். அங்கு பாஷோ என்பவரின் காலத்தில் பிறந்தது ஹைக்கூ. அப்போது அதற்கு “ஹொக்கு” என்று பெயர். பின்னர் ஜப்பானியக் கவிஞர்களான இஷா மற்றும் பூஷன் ஆகியோர் காலத்தில் “ஹைக்கூ” எனப் பெயர் மாற்றம் ஏற்பட்டது. தமிழில் முதல் ஹைக்கூ கவிதை எழுதியவர் நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான். தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிதை வடிவத்தைப் பரவலாக்கியவர் அவர் தான். அதன் பின்னர் தான் தமிழில் ஹைக்கூ கவிதைத் தொகுப்புகள் வலம் வரத் தொடங்கின.
அந்த வகையில் அந்த இனிய ஊர்வலத்தில் தற்போது தன்னையும் இணைத்துக் கொண்டு, ஹைக்கூ கவிதைத் தளத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் கவிஞர் நிழலி. அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.” என்று பெருமை பொங்க உரைத்தார் ஹைக்கூ கவிதைகளுக்கு தமிழின் “தாய் மாமன்” ஆக இயங்கி வருகின்ற கவிஞர் மு. முருகேஷ்.
@ ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு