புதுக்கோட்டை- ”சோலார் விளக்கு திட்டம்” போலி ஆவணங்கள் தயாரித்த வட்டார வளா்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை சோலார் விளக்கு அமைத்ததில் அரசுக்கு ரூ.3.72 கோடி இழப்பு ஏற் படுத்தியதாக 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சோலார் மின் விளக்குடன் கூடிய தெருவிளக்குகளை அமைத்துக் கொள்ள 2019-ல் அதிமுக ஆட்சியின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, திருமயம், திருவரங்குளம், கந்தர்வக்கோட்டை, மணமேல்குடி மற்றும் குன்றாண்டார்கோவில் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் விதிகளைப் பின்பற்றாமல் சோலார் மின் விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது.
வெளிச்சந்தை விலையைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதலாகவும், முறைப்படி ஒப்பந்த அறிவிக்கை வெளியிடாமல், ஒப்பந்தப்புள்ளி கோரி கொள்முதல் செய்ததுபோல போலியான ஆவணங்களைத் தயாரித்தும் ஏமாற்றி, அரசுக்கு ரூ.3.72 கோடி இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறந்தாங்கி பி.எல்.சிவகாமி, அரிமளம் ஏ.ஆயிஷா ராணி, கறம்பக்குடி எஸ்.ரவி, திருமயம் என்.சங்கர், திருவரங்குளம் எஸ். அசோகன், கந்தர்வக்கோட்டை என்.அரசமணி, மணமேல்குடி ஆர்.ரவிச்சந்திரன், குன்றாண் ஆர்.ரவிச்சந்திரன், மற்றும் தனியார் ஏஜென்சி மூலம் சோலார் மின் விளக்குகள் விற்பனை செய்த கடுக்காக்காடு அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் வி.பழனிவேல், பாஜக மாவட்டப் பொருளாளர் முருகானந்தத்தின் மனைவி காந்திமதி மற்றும் புதுக்கோட்டை பிரிட்டோ நகரைச் சேர்ந்த ஹெச்.ஷேக் அப்துல்லா ஆகிய 11 பேர் மீது கடந்த 2-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும், தற்போது அதே துறையில் பிற அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். சோலார் ஏஜென்சி நடத்தி வந்த பழனிவேல், காந்திமதி மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோரது வீடுகளில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீஸாரும், அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.