பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு புலவரின் திறந்தமடல்…

-புலவர் முருகேசன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புலவர் க.முருகேசன் அவர்கள் 1971ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற அரசு சார்ந்த அமைப்புகளில் தலைவராகவும் இருந்து மக்களுக்காகப் பல நல்ல செயல்களை செய்துள்ள பெருமைக்குரியவர். திராவிட மாடலின் தொடக்கம் அனைவருக்கும் கல்வி என்பதுதான் என்பதை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான கருத்துகளை இந்த திறந்த மடலில் தெரிவித்துள்ளார் – ஆசிரியர்

தாத்தா.. தாத்தா.. என என்னை அன்புடன் அழைக்கும் அன்பிற்குரிய பெயரன் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு, வணக்கம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

1971இல் திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவெறும்பூர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்த நான், 1971 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அயராது உழைத்து, திமுக வேட்பாளர்கள் முறையே கு.காமாட்சி மற்றும் கே.எஸ்.முருகேசன் இருவருக்கும் வெற்றியை ஈட்டித் தந்தேன்.

கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்த கு.காமாட்சிக்கும் அதன் பின்னர்த் திமுகவின் சார்பில் வெற்றி பெற்ற கே.என். சேகரன் ஆகியோருக்கும் அமைச்ச ரவையில் இடம் கிடைக்கவில்லை. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகு தியிலிருந்து முதல்முறையாக உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகக் கடமையாற்றி வருவது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த அன்பிலின் பெயரன், பொய்யாமொழியின் மகன் என்ற திராவிட இயக்கப் பரம்பரையில் அமைச்சர் நிலைக்கு உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பள்ளிக் கல்வித் துறையில் உங்களின் பணி சிறக்கவும், பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சில செய்திகளைத் தங்களின் பார்வைக்கு வைப்பதற்காகவே இந்தத் திறந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் கல்வி கற்போர் எண்ணிக்கை 68% தாண்டி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் பேரறிஞர் அண்ணா தொடங்கித் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பதவியில் இருந்த அனைத்து முதலமைச் சர்களும் கல்விக்காகத் தங்களின் ஆட்சியில் உரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இந்த மாடலை இந்தியாவின் எந்த மாநிலமும் பின்பற்றவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் படித்த பல மாணவர்கள் உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி, சமூகநீதி, சமத்துவம் என்பதுதான் திராவிட மாடல் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்றது. கடந்த கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பல தனியார் பள்ளிகளில் படித்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் மகிழ்ச்சியைத் தந்தது. பள்ளிக் கல்வித்துறையின் பணிகள் வெளிப்படை தன்மையோடு அமைந்து சிறக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக் கல்வித் துறை நல்ல கட்டமைப்போடு செயல்படச் சில செய்திகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

  • கலைஞர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்ற முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி அவர்கள் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. அருகாமைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, ஆதி திராவிடர் பள்ளி, தனியார் சுயநிதிப் பள்ளிகள் (ஆங்கில வழி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள்) என அனைத்தையும் ஒன்றிணைத்து மாணவர் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்குவது, ஆசிரியர்கள், மாணவர்கள் மது அருந்திப் பள்ளிக்கு வருவது, கொலைக்கான ஆயுதங்களுடன் வருவது போன்ற நாகரிகமற்ற செயல்களைக் கண்காணிக்கப் பள்ளிகளில் காவல்துறையின் கண்காணிப்புத் தேவை.
  • பள்ளி நேரத்தில் மாணவர்கள் பயணம் செய்யும் வகையில் அதிகப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வதைத் தடுக்கக் கதவுகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
  • பெண்கள் மற்றும் மாணவியர் பயணம் செய்யத் தனியாகப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும். பகுதி-நேரம், தற்காலிக நியமனங்கள் போன்றவை நிறுத்தப்பட்டு அனைத்தும் நிரந்தரத் தன்மையில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.
  • பள்ளிக்கல்வியின் உள்கட்டுமானங்கள் மேம்படுத்தவேண்டும். இடியும் நிலையில் உள்ள பள்ளிகள் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும்.
  • கழிவறை இல்லாத பள்ளிகளில் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். கழிவறை கசடுகள் நிரம்பி வழிவதும் அதை அப்புறப்படுத்துவதும் வெகுசிரமம் என்பதைக் கருத்தில் கொண்டு, அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டிய தேவையில்லாத பயோ – செப்டி டேங்க் முறையை நடைமுறைப்படுத்தலாம்.
  • தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிஙிஷிசி பள்ளிகள் தொடக்கக் காலத்தில் மத்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் பிள்ளைகள் பணியிட மாற்றத்தின்போது பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டதே. இப்போது தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் இப்பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்கலாம் என்ற முறை தடுக்கப்பட வேண்டும்.
  • தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஊதியம் என்பது மிகவும் குறைவாக வழங்கப்படுகின்றது. இதைச் சீரமைக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு குழுவை அமைத்து, ஆசிரியர் பணிக்கான முழுத் தகுதி பெற்றவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 25,000/-மாக உயர்த்தப்பட வேண்டும்.
  • 5ம் வகுப்பு வரையுள்ள தொடக்கப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி 8ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்த வேண்டும். நடுநிலை பள்ளிகளை மேம்படுத்தி உயர்நிலை பள்ளிகளாக உயர்த்த வேண்டும். உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்த வேண்டும். கல்வி கற்க மாணவர்கள் நீண்ட தூரம் செல்லவேண்டும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.
  • ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களிடம் அலைபேசி வழி தவறான எண்ணத்துடன் செய்திகளைப் பகிர்வது உண்மை என்று கண்டறியப்பட்டால், ஆசிரியர்கள் உரிய விசாரணைக்குப் பின் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு நேரமும், நூலக நேரமும் ஒதுக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களிடம் புள்ளிவிவரங்கள் சேகரிக்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி புள்ளிவிவரங்கள் கேட்டு, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தக்கூடாது.
  • ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு போன்ற நீண்ட விடுப்பில் செல்லும்போது, உள்ளூரில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் விவரங்களைச் சேகரித்து வைத்து, அவர்களை இடைக்காலமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீடு தேடி வரும் கல்வித் திட்டத்திலும் உள்ளூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு முன் அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
  • பள்ளிகளில் மாணவர் மன்றங்கள் நடைபெறவேண்டும். அதில் உள்ளூர் இலக்கிய வாதிகளை அழைத்து மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கச் செய்யலாம். மாணவர்களின் இலக்கியத் திறன்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திடும்.
  • பள்ளிகளில் மாணவர் குறைகளைத் தெரிவிக்கப் புகார் பெட்டி வைக்கலாம். அதிலிருந்து பெறப்படும் புகார்களுக்குத் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் உரிய தீர்வை வழங்கவேண்டும்.
  • 3 மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோர் கூட்டத் தைப் பள்ளியில் கூட்டவேண்டும். அதில் மாணவர்களின் கல்வித் தரம் குறித்தும், தரம் மேம்படுவதற்கான கருத்துரைகளைப் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
  • தனியார்ச் சுயநிதி பள்ளிகள் அரசு விதிக்கும் கட்டணத்தைத் தாண்டி வசூல் செய்வதைக் கண்காணிக்க வட்டாரக் கல்வி அலுவலர் களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
  • ஒன்றிய அரசிலிருந்து மாவட்டப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சுற்றறிக்கைகள் அனுப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் அனைத்துச் சுற்றறிக்கைகளும் அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  • பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்கள் மருத்துவச் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவியருக்குச் சுகாதார மேம்பாட்டின் அடிப்படையில் இலவசமாக நாப்கின் வழங்குதல் என்பதைத் தொடர்ந்து, பயன்படுத்திய நாப்கினை எரிப்பதற்கெனத் தனியாக எரிப்புலைகள் அமைக்கப்படவேண்டும்.
  • மாணவர்கள் நாகரிகமாக உடையணிவது, தலைமுடியை ஒழுங்குபடுத்தி வெட்டிக் கொள்வது போன்ற பண்பாட்டு செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் தாடி வைத்துக்கொண்டு பள்ளிகளுக்கு வருவது என்பது ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்த வேண்டும். இப்படிப் பல மேம்பாட்டு செய்திகளைக் கல்வியாளர்கள் பலரும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பார்கள் என நம்புகிறேன். அரசிற்கு எது நடைமுறை வாய்ப்போ அவற்றையெல்லாம் விரைந்து முடித்திடச் செயலாற்றிட வேண்டுமெனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

நிறைவாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஊடகச் செய்தியாளர்களிடம் பேசும்போது கல்வி தொடர்பான செய்திகள் முடிந்தவுடன், “உதயநிதி அமைச்சராவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கிறார். அவர் அமைச்சராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்” என்று அடிக்கடி சொல்லி வருவது, நாளிதழ்களில் செய்தியாகவும் வருகின்றன.  உதயநிதி அமைச்சராக வேண்டுமா? என்பது முதல் அமைச்சரின் அதிகார வரம்பிற்குட்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள தாங்கள் கல்வித்துறையின் வளர்ச்சிக்கான சிந்தனைகளோடு செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

அடுத்த மடலில் சந்திப்போம். நன்றி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.