மீண்டும்… மீண்டுமா…. துரத்தி கடிக்கும் வெறிநாய்கள் ! நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி !
நாய்கள் பிடிக்கப்பட்ட சில நிமிடங்களிலயே மீண்டும் நாய்கள் கல்லூரி வளாகத்திற்கு சுற்றிதிரிந்ததை பார்த்து அச்சத்தில் ஓடிய மாணவிகள்….
நாய்கள் நடமாட்டம் தொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொறுப்பு முதல்வர் பேட்டி ….
மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் விடுதியும் அமைந்துள்ளனர்.
இதனிடையே கல்லூரி வளாகத்திற்கும் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென மாணவிகளை கடிக்க தொடங்கியுள்ளது. கல்லூரி வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவிகளை அடுத்தடுத்து வெறிநாய் கடித்ததில் 5 மாணவிகளுக்கு கை, கால்களில் நாய் கடித்து காயம் ஏற்படுத்திய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மாணவிகளை நாய் கடித்தபோது ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவிகள் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். ஆனாலும் வெறி நாய் அடுத்தடுத்து மாணவிகளை கடித்ததன் காரணமாக கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில் கல்லூரி வளாகத்திற்கு வந்த நாய்களை பிடிக்கும் வாகன மூலமாக மாணவிகளை கடித்த நாய் உள்ளிட்ட 5 நாய்களை பிடித்துச்சென்றனர். மகளிர் கல்லூரி அமைந்த பின்புறம் தான் மதுரை மாநகராட்சி சொந்தமான தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் மையம் உள்ள நிலையில் நாய்கள் பிடித்து வைக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்திற்கு இருந்த மாணவிகளை திடிரென விரட்டிய வெறி நாய் கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக கடித்ததில் வலி தாங்க முடியாமல் மாணவிகள் கதறி அழுதனர்.
கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் மாணவிகளை கடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நாய்கள் பிடிக்கப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் ஏராளமான நாய்கள் கல்லூரி வளாகத்திற்கு சுற்றி வந்த நிலையில் அதனை பார்த்த மாணவிகள் அங்கும் இங்கும் பதற்றத்தில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி பின்புறம் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் உள்ள நிலையில் அங்கு கொண்டு வரப்படக்கூடிய நாய்கள் தப்பியோடி வந்து அருகில் உள்ள மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அதிகளவிற்கு சுற்றி திரிவதால் மாணவிகள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய பொறுப்பு முதல்வர் சந்திரா….
தங்களது கல்லூரி வளாகத்தில் நாய்கள் சுற்றி திரிவது தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சிக்கு புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகளை நாய் கடித்து காயம் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அளித்த தகவலையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் வருகை தந்து நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.
மேலும் மாணவிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்