மெடிக்கல் காலேஜ் லேடிஸ் ஹாஸ்டலில் ராகிங்! கடிவாளம் போட்ட டீன்!
திருவாரூர் மெடிக்கல் காலேஜ் மகளிர் விடுதியில் இந்த ஆண்டு நீட் தேர்வு பாஸ் செய்து எம்பிபிஎஸ் சேர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மாணவிகளை வெளிமாநிலங்களை சேர்ந்த சீனியர் மாணவிகள் கடந்த சில நாட்களாக ராக்கிங் செய்வதாகவும், இரவு நேரத்தில் சாப்பிட விடாதபடி தொந்தரவு செய்வதால் புதிய மாணவிகள் பட்டினியுடன் படுக்கிறார்கள் என்றும் பெற்றோர் ஒருவர் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது. சீனியர் தமிழ் மாணவிகள் தடுத்தும், வெளி மாநில மாணவிகள் விளையாட்டுப் போக்காகவும் பிடிவாதமாகவும் இதை தொடர்கிறார்கள்.
எனவே அவர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி புதிய மாணவிகள் உரிய நேரத்தில் சாப்பிடவும் படிக்கவும் வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று மெடிக்கல் கல்லூரி நிர்வாகத்திற்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் தகவல் கொண்டு செல்லப்பட்டது.
இதனை அடுத்து
இரவோடு இரவாக டீன் எடுத்த உடனடி நடவடிக்கையால் சீனியர் மாணவிகள் அடங்கிப் போக, புதிய மாணவிகள் நிம்மதியாக சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலையில் டீன் இது குறித்து முழுமையான விசாரணை நடத்திய போது சீனியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று புதிய மாணவிகள் அமைதி காத்துள்ளனர்.
எனினும் மெடிக்கல் காலேஜ் நிர்வாகம் சூழலை புரிந்து கொண்டு, இனி இது தொடராமல் இருக்க அறிவுறுத்தியுள்ளது. சீனியர் மாணவிகளும் தங்கள் விளையாட்டு வினையானதை உணர்ந்து நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நடந்துள்ளனர். இந்த மெடிக்கல் கல்லூரியை போல இன்னும் சில மெடிக்கல் கல்லூரிகளிலும் ராகிங் புகார்கள் வருவதால் ஹாஸ்டல் வார்டன்கள் தங்கள் கண்காணிப்பை மேலும் அதிகப்படுத்தி எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
1996 இல் ராக்கிங் கொடுமையால் நாவரசு என்ற மாணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த கொலையை செய்த ஜான் டேவிட் என்ற சக மாணவர் சிறைவாசத்திற்கு பிறகு இப்போது தான் முன்கூட்டியான விடுதலையை சட்டப்படி பெற்றிருக்கிறார். இன்னொரு நாவரசோ நாவரசியோ தமிழ்நாட்டில் பாதிக்கப்பட வேண்டாம் என்கிற பெற்றோர்கள் திருவாரூர் மெடிக்கல் காலேஜில் உடனடியாக நடவடிக்கை எடுத்த டீனையும் மருத்துவத்துறையையும் பாராட்டுகிறார்கள்.