ராகுல்காந்தி இனி 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது – பாஜகவின் திட்டம் அம்பலம்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கேரள வயநாடு எம்பி., ராகுல்காந்தி. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி “எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சனம் செய்தார்.
இந்த விமர்சனம் மோடி எனும் சாதியை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று அவதூறு வழக்கு சிவில் வழக்காக தொடுக்கப்படாமல் கிரிமினல் வழக்காக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் சூரத் தொகுதி எம்எல்ஏ., பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு விசாரணைகள் முடிந்து, மார்ச் 23ம் நாள், அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுகள் அதற்கு மேல் சிறை தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியில் நீடிக்கமுடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் மார்ச் 24ம் நாள் ராகுல்காந்தி எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பும் உடனே வெளியானது.

வழக்கு, விசாரணை, நீதிமன்றத் தீர்ப்பு, அதனைத் தொடர்ந்து தகுதி நீக்கம் என்பதில் பாஜகவுக்கு எங்கே பங்கு உள்ளது? என்ற கேள்வி இயல்பாகவே எழும். அவதூறு வழக்கு கிரிமினல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இந்த வழக்கின் உச்சபட்ச தண்டனையே 2 ஆண்டு சிறை. அதையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவதூறு வழக்கைத் தொடுப்பதற்கு பூர்னேஷ் மோடிக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. காரணம் ராகுல்காந்தி குறிப்பிட்டது நீரா மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று பெயர்களைக் குறிப்பிட்டே தேர்தல் பரப்புரையில் பேசினார்.
இதில் வழக்கைத் தொடுத்தவர் எந்த வகையில் பாதிக்கப்பட்டார் என்று வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று இந்து, டைம்ஸ் ஆ இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள் தலையங்கம் எழுதியுள்ளன. முகாந்திரம் இல்லாத வழக்கு அனுமதிக்கப்பட்டதும், அது கிரிமினல் வழக்காக நடத்தப்பட்டதும் என்பதில்தான் பாஜகவின் அரசியல் உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோலார் நீதிமன்ற அனுமதியை பெறவில்லை…
இந்த வழக்கு நடத்தப்பட்ட விதம் குறித்து பத்திரிக்கையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கருத்து தெரிவிக்கும்போது, “4 ஆண்டுகளுக்கு முன் ராகுல் பேசியதற்காக சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கோலார் மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கோலார் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது கோலார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.
எதையும் செய்யாமல் நேரடியாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு பாஜக எம்எல்ஏ., பூர்னேஷ் மோடி என்பவரால் தொடுக்கப்பட்டது. வழக்கில் இருமுறை ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு எளிமையான வழக்கு நீங்கள் இனி நீதிமன்றம் வரத் தேவையில்லை என்று நீதிபதியும் கூறியுள்ளார். இதன் பின்னர் வழக்கை தொடுத்தவரே வழக்கு நடைபெறக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெறுகிறார். வழக்கு மேற்கொண்டு நடைபெறவில்லை.

நீதிபதி மாற்றம்
அதானி நெருக்கத்திற்கு பதிலளிக்காத மோடி நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் மோடியும் அதானியும் அருகருகே அமர்ந்திருக்கும் படத்தை ராகுல்காந்தி வெளியிட்டு தலைமை அமைச்சர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி, பல கேள்விகளையும் முன்வைத்தார். இந்தக் கேள்விகளுக்கு மோடி எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் ராகுல்காந்தி வழக்குக்கு தடையாணை பெற்றவரே தடையை விலக்கிக்கொண்டு வழக்கை நடத்தினார். இந்த நேரத்தில் வழக்கை நடத்திய நீதிபதியும் மாற்றப்பட்டார்.
தடை நீக்கம் நடந்தவுடன் வழக்கு 2 வாரத்தில் அவசரஅவசரமாக முடிக்கப்பட்டு மார்ச் 23ம் தேதி “2 ஆண்டுகள் சிறை” என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றே தோன்றும். எல்லாவற்றையும் நடத்தியது பாஜகதான் என்பது இப்போது வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2 ஆண்டுகள் சிறை
2 ஆண்டுகள் சிறை வழங்கி ராகுல்காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த 30 நாட்களுக்குள் ராகுல் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்குத் தடை உத்தரவு பெற்றால், அவருக்கு வழங்கப்பட்ட தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மக்களவை உறுப்பினராகச் செயல்பட வாய்ப்புள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லட்சத்தீவு எம்பி., தேசிய வாதக் காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியைச் சார்ந்தவருக்குக் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேல்முறையீட்டில் தண்டனைக்குத் தடை வாங்கியதன் மூலம் அவர் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மக்களவை சபாநாயகர் அவர் மக்களவையின் நடவடிக்கையில் பங்கேற்க இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் பாஜக நடத்தும் அரசியல்தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மக்கள் மன்றத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?
கோலாரில் ராகுல் பேசியது தொடர்பான வழக்கு பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் இன்னும் முடிவடையாமல் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த இருவழக்கிலும் ராகுலுக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படித் தண்டனை கிடைத்தால் மொத்தம் 18 ஆண்டுகள் ராகுல் தேர்தலில் போட்டியிட முடியாது. 2044ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் ராகுல் போட்டியிட முடியும் என்ற நிலையைப் பாஜக உருவாக்கியுள்ளது. நீதிமன்றத்தைக் கையில் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் பாஜக மக்கள் மன்றத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற அரசியலை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
-ஆதவன்