கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை – எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !

0

கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை – எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !

1952 வருடம், நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற பெயரைச் சூட்டினார்கள் பெற்றோர்கள். சாதாரண விவசாயி வீட்டுப்பிள்ளையாக பிறந்த அக்குழந்தை வருங்காலத்தில் தமிழ்நாட்டினை ஆளும் முதலமைச்சராக ஆகப்போகிறார் என்றோ,  ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறார் என்றோ யாரும் எதிர்ப்பாத்திருக்கக்கூட மாட்டார்கள். அவ்வளவு ஆச்சரியமும், உழைப்பும்  கொண்டது எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ந்த அரசியல் சதுரங்கம் .

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

கருப்பக் கவுண்டருக்கும் தவசியம்மாளுக்கும் பிறந்த விவசாயிகளின் தலைமகனான இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் வெல்ல வியாபாரம் தான் பார்த்து வந்தார்.

தனது 18-வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1972-ம் ஆண்டு அதிமுகவில் தொண்டராக இணைந்தார். அயராது ஆற்றிய பணியால் 1973-ல் அவருக்கு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

1989-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இருந்தார்.

1989-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குச் சென்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

அதன்பின்னர், அவரது பெயருக்கு முன்பு எடப்பாடி சேர்ந்து எடப்பாடி பழனிசாமியாக பிரபலமானார்.

1991-ல் மீண்டும் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 1996, 2006-ல் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2011, 2016-ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருமுறையும் அமைச்சரானார்.

1998-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். கட்சியிலும் மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் கொள்கை பரப்புச் செயலாளர் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் - எடப்பாடி பழனிச்சாமி
ஜெயலலிதாவுடன் – எடப்பாடி பழனிச்சாமி

அந்த சமயத்தில் தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவருக்கு வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவிலும் இடம்பெற்றார்.

எடப்பாடி பழனிசாமி. 2016-ல் மீண்டும் வெற்றிபெற்று அமைச்சர் ஆனார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி கே. பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, அ.தி.மு.க. அரசு நிலைத்திருக்க செய்ய வேண்டியவைகளை செய்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா மீதான அதிருப்தியால் தனியாக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பை இணைத்துக்கொண்டதோடு, டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார்.

vம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் - எடப்பாடி பழனிச்சாமி
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுடன் – எடப்பாடி பழனிச்சாமி

2017-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சித் தலைவராக பழனிசாமி பதவியேற்றார்.

தொடர்ந்து, கட்சியின் இரட்டை தலைமையை தன்னுடைய ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி தற்போது உயர்ந்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு, எம்ஜிஆர் போல் தொப்பி, கூலிங் கிளாசை தொண்டர் ஒருவர் அணிவித்தார்.

எடப்பாடி
எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக அரசியல் களத்தில் இடைவெளியை நிரப்பி விட்டு காணாமல் போகும் சாதாரண அரசியல்வாதி அல்ல அவர் என்பதை, தனது கடந்த கால செயல்களின் மூலம் நிரூபித்திருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி.

விவசாயம், மக்கள் சேவை என பன்முகத்தன்மை கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து 48 ஆண்டுகளை கடந்துவிட்டன.

மலர் மரியாதை
மலர் மரியாதை

குடும்பத்துடன் அழகான கிராம சூழலில் தொடக்கத்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் பணிகளுக்கு ஏதுவாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது குடிமராமத்து திட்டம், எளிமையான அணுகுமுறை பலவாறு கட்சியினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு கட்சியை தயார்படுத்துவது போன்ற சவாலான பணிகளை முன்னெடுத்து செயல்படும் கூடுதல் பொறுப்பும், கடமையும் உருவாகி இருக்கிறது. மக்கள் சேவையில் முதன்மைபெற்றது போன்று கட்சிப்பணியிலும் முத்திரை பதிப்பாரா? என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அங்குசம் செய்தியாளர் குழு

Leave A Reply

Your email address will not be published.