தமிழ்நாட்டில் திடீர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் திமுக – அதிமுக வெற்றி யாருக்கு? பரபரப்பு தகவல்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கடந்த ஏப்ரல் 6ஆம் நாள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் நாள் நடந்து முடிந்தது. திமுக கூட்டணி 169 இடங்களிலும் அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதிப்பெரும்பான்மையோடு திமுக மே 7ஆம் நாள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது.
66 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக வலிமையான எதிர்க்கட்சியானது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மே.10ஆம் நாள் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் அதிகம் பேசப்பட்டவர்கள் இருவர். ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற வைத்தியலிங்கம். மற்றொருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற முனுசாமி. இருவரும் அதிமுகவைச் சார்ந்தவர்கள். மேலும், இருவரும் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.
தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பார்களாக? மாநிலங்களவை உறுப்பினர்களாக நீடிப்பார்களா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்து கொண்டிருந்தது.
வைத்தியலிங்கம், முனுசாமி இருவரும் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்துகொண்டே, சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டதற்கான காரணம், அதிமுக 3ஆவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியில் அமரும், அப்போது அமைச்சர்களாக மாறிவிடலாம் என்று எண்ணியுள்ளனர். தேர்தல் முடிவில் இருவரும் வெற்றிபெற்றனர்.
அதிமுக பெரும்பான்மைக்குத் தேவைப்படும் இடங்களை இழந்து தோல்வியைத் தழுவியது. அமைச்சர் இல்லை என்பதை உணர்ந்த இருவரும் என்ன செய்வார்கள்? ஒன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு சட்டமன்ற உறுப்பினராக மாறுவது. மற்றொன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, மாநிலங்களவை உறுப்பினராக நீடிப்பது என்பதுதான். இந்த இரண்டில் எதை செய்வார்கள் என்ற பதற்றம் கடந்த மே 2ஆம் தேதியிலிருந்து அரசியல் அரங்கில் தொடர்ந்து கொண்டிருந்தது.
வைத்தியலிங்கம், முனுசாமி இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டால் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
வைத்தியலிங்கத்தின் பதவி காலம் ஜூன் 2022ஆம் ஆண்டு. அதாவது அடுத்த ஆண்டோடு முடிவடைகிறது. ஓராண்டு மட்டுமே பதவிக் காலம் உள்ளது. முனுசாமியின் பதவிக் காலம் ஏப்ரல் 2026ஆம் ஆண்டுதான் முடிவடைகிறது. பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில், வைத்தியலிங்கம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகி சட்டமன்ற உறுப்பினராக இருப்பார் என்றும், முனுசாமி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்வார் என்று அரசியல் அரங்கில் ஆரூடங்கள் கணிக்கப்பட்டன.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு மே 10ஆம் நாள் நடந்து முடிந்த சில மணி நேரங்களில், ‘சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், முனுசாமி இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினர்’ என்ற அறிவிப்பு வெளியானது. அரசியல் அரங்கின் ஆரூடங்களை இருவரும் தகர்த்தெறிந்தனர்.
இருவரும் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்தது. இருவரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள்.
வைத்தியலிங்கம் க.பழனிச்சாமி ஆதரவாளர். முனுசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர். கட்சி எதிர்க்கட்சியாக மாறிய நிலையில், கட்சியை முறையாக வழிநடத்தி, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும். இடையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றது. 2024இல் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்தல்களில் கட்சியைத் தூக்கி நிறுத்தி, வெற்றியின் முகட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டிய பெரும்பொறுப்பு இருவரிடமும் உள்ளது என்பதால்தான் தில்லியின் பெரிய பதவிக்கு டாட்டா சொல்லிவிட்டு தமிழ்நாட்டின் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கவில்லை என்றால், இரு சட்டமன்றத் தொகுதிக்கும் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும். ஆளுங்கட்சியாக உள்ள திமுக இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் அதிமுகவின் செல்வாக்குக் கரையத் தொடங்கலாம் என்ற எண்ணத்தில்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்கள் என்ற மற்றொரு கருத்தும் உள்ளது.
வைத்தியலிங்கம், முனுசாமி இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய செய்தியை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். 2021 மார்ச்சு மாதம் இயற்கை எய்திய முகமது ஜான் மற்றும் தற்போதைய இருவரின் விலகலைத் தொடர்ந்து அதிமுகவின் எண்ணிக்கை 8இலிருந்து 5ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை விவரங்கள் மே10ஆம் நாள் மாலை நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் பட்டியலில் 3 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிப்பு உடனே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இருவரின் விலகலால் மாநிலங்களவையில் பாஜகவின் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. என்றாலும் அவையில் பாஜகவின் ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மைக்கு மேலாகவே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
தீநுண்மி என்றழைக்கப்படும் கொரோனா தொற்றின் பரவல் குறைந்தவுடன் விரைவில் தமிழ்நாட்டில் மாநிலங்களவையின் 3 இடங்களுக்குத் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்பது சிறப்பான செய்தியாகும்.
மாநிலங்களவையின் 3 இடங்களில் திமுக 2 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அதிமுக ஒரு இடத்தில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற 78 வாக்குகள் பெறவேண்டும். திமுக கூட்டணி கட்சிகளிடம் 169 எண்ணிக்கை உள்ளது. 78+78 என 156 உறுப்பினர்களைக் கொண்டு இருவரைத் திமுக வெற்றி பெற வைக்கும். எஞ்சிய எண்ணிக்கை திமுகவிடம் 13தான் இருக்கும். அதிமுக கூட்டணியிடம் 75 எண்ணிக்கை உள்ளது. அதனால் முதல் சுற்றில் 78 எண்ணிக்கையைப் பெறமுடியாமல் போனாலும் இரண்டாம் சுற்றில் 75 எண்ணிக்கையில் அதிமுக ஒருவரை வெற்றி பெறவைக்கும். இந்த எண்ணிக்கை 3 பேருக்கு மேல் போட்டியிட்டால்தான்.
திமுகவில் இருவர், அதிமுகவில் ஒருவர் என்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டால், போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
வைத்தியலிங்கத்தின் இடத்திற்குப் போட்டியிடுபவர் ஜூன் 2022ஆம் ஆண்டுவரைதான் எம்.பி.யாக இருக்கமுடியும். மறைந்த முகமது ஜான் இடத்திற்குப் போட்டியிடுபவர் ஜூலை 2025 ஆண்டு வரை எம்.பி.யாக இருக்கமுடியும். முனுசாமி இடத்திற்குப் போட்டியிடுபவர் ஏப்ரல் 2026ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவர்களின் பதவி காலம் ஒரே ஆண்டு காலத்தில் இல்லாமல் இருப்பதால் மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக இடைத்தேர்தல்களை நடத்தினால் 3 இடங்களிலும் திமுகவே வெற்றிபெறும். தனித்தனியாக தேர்தல் நடத்தினால் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற 118 எண்ணிக்கைத் தேவைப்படும். அந்த எண்ணிக்கை திமுகவிடம் உள்ளது. அதிமுகவிடம் இல்லை.
இப்படி நடந்தால் அதிமுகவுக்கு பேரிழப்பாக அமையும் என்பதோடு மாநிலங்களவையில் திமுகவின் எண்ணிக்கை 7இலிருந்து 10ஆக உயரும் நிலை ஏற்படும் என்பதுத்ன் அரசியல் அரங்கில் நிலவும் பரபரப்பான செய்தியாகும்.
–ஆசைத்தம்பி –