அடுத்த தலைமுறையினரை விஞ்ஞான பார்வையோடு வளர்க்க வேண்டும் ! திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர்கள் மாநாடு !
இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை தமிழ்நாடு பகுத்தறிவாளர் மன்றத்துடன் இணைந்து, 13 ஆவது தேசிய கருத்தரங்கத்தை திருச்சியில் டிச 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நிகழ்வாக நடத்துகிறார்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பெர்சி, உத்ரகாண்ட், குஜராத், உ.பி, அரியானா, மேற்கு வங்காளம், ம.பி. உள்ளிட்டு இந்தியா முழுவதிலுமுள்ள பகுத்தறிவாளர்களும் கடல்கடந்து மலேசியாயவிலிருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்களோடு அரங்கம் நிறைந்த நிகழ்வாக தொடங்கிய முதல்நாள் கருத்தரங்க நிகழ்வில், FIRA வின் தலைவர் நரேந்திர நாயக், பொதுச் செயலாளர் Dr.. சுதேஷ்கோடேராவ், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.சண்முகம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையோடு தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. இதனை தொடர்ந்து இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து தொடக்க உரை நிகழ்த்திய திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலிபூங்குன்றன், ”06.09.1970 அன்று தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தை துவங்கி வைத்தார்கள். இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 71, பெண்களின் சராசரி வயது தற்போது 74. இந்த வளர்ச்சிக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி காரணம். இந்தியாவில் படித்தவர்கள்தான் மூடநம்பிக்கையை அதிகம் வளர்க்கிறார்கள். பகுத்தறிவாளர்களாக இருப்பதால் என்ன நன்மை? பகுத்தறிவாளர்களுக்கு காலத்தையும், நேரத்தையும் சேமிக்க முடிகிறது. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி போன்றவைகளுக்காக ஒரு ஆண்டுக்கு பல நாட்கள் வீணாகின்றன. மூடநம்பிக்கைக்காக 197 நாட்கள் வீணாகின்றன. ஆகவே பகுத்தறிவு சிந்தனை மிகவும் தேவை.” என்பதாக, பதிவு செய்தார்.
”பெரியார் அவர்கள் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பியது பற்றி பேசினார். குலத்தொழிலை எதிர்த்து போராடினோம். தற்போது மீண்டும் விஸ்வகர்மா திட்டம் திணிக்கப்படுகிறது. இவைகளை எதிர்ப்பதுதான் பகுத்தறிவாளர்கள் கடமை.” என்பதாக தனது உரையில், சுட்டிக்காட்டினார் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சண்முகம்.
”இந்தியாவில் இருப்பதெல்லாம் மகாபாரதம், இராமாயண கதைகள்தான். பகவத் கீதையில் கிருஷ்ணன் – நால்வகை வருணத்தை நான்தான் படைத்தேன் என்கிறார். அரசியல் சட்டத்தில் Artical 25 நமக்கு மத சுதந்திரத்தை தருக்கின்றது. நாம் எந்த கடவுளையும் வழங்கலாம். வேண்டுமென்றால் நாம் நாத்திகவாதியாகவும் இருக்கலாம். அடுத்த தலைமுறையினரை விஞ்ஞான பார்வையோடு வளர்க்க வேண்டும்.” என்பதாக திமுகவின் முன்னாள் எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”இந்தியா மனிதாபிமானம், மதச்சார்பற்ற நிலை, ஜனநாயகம் ஆகியவற்றின் ஆதாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது மதத்தின் அடிப்படையிலான மூடநம்பிக்கை கொள்கைகளை கொண்டவர்களால் ஆட்சி செய்யப்படுகின்றது. நாம் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராட வேண்டும்.” என்பதாக வலியுறுத்தினார், இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை (FIRA) வின் தலைவர், நரேந்திர நாயக்.
இந்நிகழ்வில், சிறந்த பங்களிப்பை வழங்கிய சுப்ரியா தருண்லேகா பந்தோமாதயாயா (பெங்காலி); .ஜஸ்வந்த்ராஜ்(பஞ்சாபி) ; தோழர். லால்சலாம் (மலையாளம்) ; தானேஸ்வர் சாகு (ஒரியா) ஆகிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக, தேசிய மனித நேயத்திற்கான விருதை ஆசிரியர் கி.வீரமணிக்கு வழங்கி கௌரவித்தார்கள்.