என்னதான்பா ஆச்சு, அண்ணாமலைக்கு ? அட, இதான் மேட்டரா ?
அரசியல்வாதிகளுக்கு ஒரு தனித்தகுதி வேண்டும், அது ஆளுமைத்திறன், பாதிக்கப்பட்டவர்களை நோக்கி “நானிருக்கிறேன்” என்று ஆற்றுப்படுத்தல், தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமைகள் அனைவரும் அப்படி வாழ்ந்து காட்டியவர்கள்.
நீதிக்கட்சியின் நடேச முதலியார், தியாகராஜ செட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், பி.டி.ராஜன், டி.எம்.நாயர், ஆற்காடு ராமசாமி முதலியார், அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், ராஜகோபாலாச்சாரி என்று இவர்கள் அனைவருமே பேராளுமைகள்.
இந்த வரிசையில் எம்.ஒய்.முருகேசன், மதுரை பிள்ளை, ஆர்.ஸ்ரீனிவாசன், பண்டிட் பழனிசாமி, ஐ.என்.அய்யாக்கண்ணு, ஏ.ராமசாமி முதலியார், எம்.சி.ராஜா, எல்.கே.குருசாமி, ஜி.அப்பாதுரையார், என்.சிவராஜ், எம்.கே.மாரியப்பா, ஜெனராஜு போன்றவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், மிகப்பெரிய இயக்கங்களில் இருந்து கலகக் குரல் எழுப்பியவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்காக போராடியவர்கள்.
விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம், தியாகி கோவிந்தம்மாள், சுபலக்ஷ்மி அம்மையார், சொர்ணத்தம்மாள், அஞ்சலையம்மாள், கண்ணாவரம் அம்மையார், சகுந்தலா அம்மையார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராஜர், எம்.வீரராகவாச்சாரியார், வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், ஆதிக்க ஆற்றல்களுக்கு எதிராகவும் தீரத்துடன் போராடியவர்கள்.
திராவிட அரசியலின் முன்னோடியான பெரியார் கட்டற்ற சுதந்திரத்தோடு பல்வேறு நிலைகளில் ஆளுமை மிக்க தலைவராக ஒளிர்ந்தவர், பேரறிஞர் அண்ணா, அதற்கும் ஒருபடி மேலாக இந்தியப் பாராளுமன்றத்தில் பல்வேறு ஆதிக்க மேலாண்மைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.
கலைஞர் இன்றளவும் கடுமையான காழ்ப்புணர்வோடு அணுகப்படுவது அவருடைய சமரசம் செய்து கொள்ளாத போராட்டப் பண்புக்காக மட்டும்தான்.
பார்ப்பனீய மற்றும் உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அதிகாரத்தில் இருந்தபோது அவர் காட்டிய எதிர்ப்புணர்வு மிகப்பெரிய ஆய்வுக்குரியது, எம்.ஜி.ஆர் அப்படித்தான் உருவானார்.
திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் காட்டிய “ஏழைப்பங்காளன்”, “ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பர்”, பிம்பங்கள் அவரது அரசியல் வாழ்வுக்கான அஸ்திவாரங்கள், அவரும் சூப்பர் மேனாகவே இருந்தார், தன்னையே வருத்திக் கொள்கிற அல்லது பரிதாபம் தரக்கூடிய எதையும் அவர் மேற்கொள்ளவில்லை, ஜெயாவும் அப்படி ஒரு இரும்புப் பெண்மணி என்றொரு பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டார்.
இன்றைய தமிழக அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், தற்போது இந்துத்துவ பாரதீய ஜனதாவோடு இணங்கிப் போனாலும், நீர்த்துப் போயிருந்தாலும், பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக வீரியத்துடன் களம் கண்டவர்.
டாக்டர் தொல்.திருமாவளவனைப் போல அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஒருவர் யாருமில்லை. ஆனால், ஒருபோதும் அனுதாபம் தேடவோ, பரிதாப உணர்வைத் தேடவோ முயற்சி செய்தவரில்லை.
ஓரளவு கோமாளித்தனங்கள், Stand Up Comedy போன்ற விஷயங்களில் அப்பாவி இளைஞர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சீமான் அண்ணாச்சி கூட போராட்ட முறைமைகளில் ஓரளவு தமிழக மக்களின் வரலாற்றுப் பெருமிதங்களோடு இணங்கியே இருக்கிறார்.
ஜெயலலிதா காலத்தில் சில நேரங்களில் மாடியில் இயன்ற அளவு மறைந்து கொண்டு முழக்கமிடும் போராட்டம் போன்றவற்றை அவர் செய்திருந்தாலும் கூட, பெரும்பாலான அவருடைய போராட்ட முறைகள் தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் வகை தான்.
ஐயோ, பரிதாபம் என்கிற அளவில் அண்ணாமலை இப்போது உருட்டியதை மக்கள் உறுதியாகக் கவனிப்பார்கள். ஆனால், அரசியல் நிகழ்வாகவோ, போராட்டமாகவோ பார்க்க மாட்டார்கள்.
“ஐயோ, பாவம்… யாரு பெத்த பிள்ளையோ… இப்படிப் போட்டு அடிச்சுக்குதே” என்ற அளவிலோ, “தடி மாடு மாதிரி இம்புட்டுப் பேரு சுத்தி நிக்கிறாய்ங்களே புடிக்கக்கூடாது” என்ற அளவிலோ பரிதாப உணர்வில் சுருக்கி விடுவார்கள்.
அண்ணாமலையின் இப்போதைய இலக்கு, ஊடகங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது, தமிழக அரசியல் தன்னைச் சுற்றி நடப்பதாக ஒரு பிம்பத்தை அவரே கட்டிக் கொள்வது, அண்ணாமலை ஒரு சிக்கலான மனநிலையில் இருக்கிறார்.
அமித்ஷா அதிமுகவோடு கூட்டணிக்கு முயற்சி செய்கிறார், அண்ணாமலை அதைக் கெடுத்து விடுவாரோ என்று அஞ்சுகிறார். அண்ணாமலைக்கு அதிமுகவோடு செல்வதில் விருப்பமில்லை.
தமிழக பாஜக தலைவராக அதிமுகவோடு இணக்கமாக இருக்கும் வேறொருவரை எப்படியும் சட்டமன்றத் தேர்தலுக்குள் பாஜக மேலிடம் நியமித்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த Delegate Check இல் இருந்து வெளியேறி “பாருங்கள், நான்தான் தமிழகத்தில் இப்போது சூப்பர் ஹீரோ லெவலுக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறேன்” என்று அமித் & மோடி இரட்டையர்களை நம்பவைக்க முயற்சி செய்கிறார்.
இனியும் அவர் தொடர்ந்து தார் ரோட்டில் ஜட்டியோடு உருளுதல்; இருட்டில் குடுகுடுப்பை வேடம் தரித்து நாய்களிடம் கடி வாங்குதல்; கம்புக்கூட்டுக்குள் சின்ன வெங்காயம் வைத்துக் கொண்டு காய்ச்சலில் நடுங்குதல்; செருப்பைக் கைகளில் மாட்டிக் கொண்டு நான்கு கால் விலங்கு போல் நடத்தல்; குட்டிக்கரணம் அடித்தபடி கமலாலயம் செல்லுதல்; கயிற்றில் தொங்கும் பன்னைக் தாவித்தாவி கவ்வுதல் என்று விசித்திரமான போராட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகள் ஏறக்குறைய கதாநாயகத் தோற்றம் கொண்டவர்கள், ஏதாவது ஒரு குழுவின் பக்கத்தில் அவர்கள் தளகர்த்தராக இருக்க வேண்டும். தமிழ் சமூகத்தில் தலைவர்களுக்குரிய பண்பு ஒருபோதும் தெருவில் நின்று “ஐயோ, இந்த அரசு மக்களுக்கு எதிராக இருக்கிறதே, என்னால் மக்களைக் காப்பாற்ற இயலவில்லையே? ஆகவே நான் என்னையே சாட்டையால் அடித்துக் கொள்கிறேன்” என்று கூறுவதை நகைப்புக்குரியதாகவோ, பரிதாபத்துக்குரியதாகவோ தான் பார்ப்பார்கள் தமிழக மக்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தன்னையே சாட்டையால் அடித்துக் கொள்ள தலைவன் எதற்கு? ஒருவழியுமற்ற சாதாரணமானவன் போதுமே?
பின்குறிப்பு : எது எப்படி இருந்தாலும், ஒரு தொழில்முறை ஆட்டக்காரரைப் போல ரு.அண்ணாமலை அவர்கள் சாட்டையடிப் பயிற்சி மேற்கொண்டு 8 கசையடிகளை ஓரளவு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு செய்து முடித்தது பாராட்டுக்குரியது.
கை.அறிவழகன்
ஓவியம் : ரவி பேலட் Ravi Palette