அண்ணா பல்கலை விவகாரம் : நடவடிக்கை எடுத்தப் பிறகும் எதற்காக போராட்டம் ? – கேள்வி எழுப்பும் கனிமொழி எம்.பி. !
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்தபிறகும், எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகிறார்கள் என்றும்; அதற்குப்பதிலாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் எதிர்காலம் குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என்பதாகவும் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, முதியோர் மனநல காப்பகம் திறப்புவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, “ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றது எல்லோருக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை பயன்படுத்திக் கொண்டு அரசியலாக்காமல், அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றி ஒரு அக்கறை இருக்க வேண்டும்.
சில பேர் அரசியலுக்காக முதல் தகவல் அறிக்கையை (FIR) வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய குற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதைத் தாண்டி முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் . இதை நோக்கி செல்ல வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நடவடிக்கை எடுத்த பிறகு போராட்டம் நடத்தி என்ன பயன்?” என்றார்.
— மணிபாரதி.