வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !
அங்குசம் இணையத்தில் தொடங்கி, அங்குசம் மாதமிருமுறை இதழாக வெளிவந்து கொண்டிருந்த உங்கள் அங்குசம் தற்போது வியாழன்தோறும் வெளியாகிவருவதை நன்கறிவீர்கள். காலத்தின் தேவையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, நூல்களை பதிப்பிக்கும் பணியிலும் தடம் பதித்திருக்கிறது, உங்கள் அங்குசம்.
இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி. மாதமிருமுறை வெளியாகி வந்த ”அங்குசம் செய்தி” இதழை, வார இதழாக கொண்டுவரும் எங்களது துணிச்சலான முயற்சியின் தொடர்ச்சிதான் அங்குசம் வெளியீடு.
இந்த பின்னணியில்தான், எமது அங்குசம் வெளியீட்டின் முதல் நூலாக, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் பி.பாஸ்டின்ராஜ் எழுதிய, ”இசைமுரசு ஹனீபாவின் இசைப்பணிகள்” என்ற நூல் வெளியாகியிருக்கிறது. திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, யாவரும் கேளீர் மாத இதழ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு விழா – கருத்தரங்கில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்குசம் வெளியீட்டின் முதல் நூலை வெளியிட்டார்.
திமுகவின் பிரச்சார பாடகர், இசுலாமிய மார்க்க பாடகர் என்ற சட்டகங்களைத்தாண்டி, அவர் மக்கள் இசைக்கலைஞர், கொண்ட கொள்கையின்பால் இறுதிவரை உறுதியோடு நின்ற கலைஞர், அவரது இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாத தனித்துவமான கலைஞர் என்ற அவரது பன்முகத்தன்மையை வெளிக்கொணர்கிறது, இச்சிறுநூல்.
இதனை தொடர்ந்து, அங்குசம் வெளியீட்டகத்தின் இரண்டாவது வெளியீடாக, அன்பு நண்பர் முனைவர் ஜா.சலேத் எழுதியுள்ள “போதி மரத்தின் ஞான நிழல்கள்” நூல் வெளியாகியிருக்கிறது. இந்நூலில், எதிர் வீட்டில் இருப்பவர்களிடம்கூட முகம் கொடுத்து பேச முடியாத அளவுக்கு பொருளீட்டும் பயணத்தில் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில்தான், பொதுநல நோக்கில் இயங்கி வருகிற ஆளுமைகளை அடையாளம் காட்டுகிறார், முனைவர் ஜா.சலேத்.
வெறுமனே லயித்து வாசிப்பதற்கானதா எழுத்து? சமூகம் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக துளிர்விடும் எந்த ஒரு எழுத்தையும் இனம்கண்டு அவற்றையெல்லாம் பதிப்பித்து வாசிப்பை பரவலாக்க வேண்டுமென்பதே எமது ஒற்றை நோக்கம். எங்களது நோக்கமும் எங்களது முயற்சியும் உங்களுக்கு சரியென்றுபட்டால், எங்களோடு இணைந்து பயணிக்க அன்போடு அழைக்கிறோம்.
அன்புடன், ஜெ.டி.ஆர்.
இசைமுரசு ஹனீபாவின் இசைப்பணிகள் | பக்கங்கள் – 52 | விலை ரூ.50.00
போதி மரத்தின் ஞான நிழல்கள் | பக்கங்கள் – 98 | விலை ரூ. 120
நூல் தேவைப்படுவோர், என்ற 9488842025 எண்ணில் தொடர்பு கொள்ளவும். அதே எண்ணிற்கு ஜி.பே. வழியாக பணம் செலுத்திவிட்டு, நூல் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முழு அஞ்சல் முகவரியை வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.
மேலும், விவரங்களுக்கு …
அங்குசம் வெளியீடு,
எண்-16, வில்லியம்ஸ் சாலை,
கண்டோண்மெண்ட்,
திருச்சி – 621001.
கைப்பேசி எண்: 9488842025












Comments are closed, but trackbacks and pingbacks are open.