ஷாக்கை குறை.. நம்பிக்கை கொள்..
இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 29(1), 29(1), (2), 368 ஆகியவை பிறப்பால் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் எனப் பேதப்படுத்தும் வருணாசிரமத்தைப் பாதுகாத்து, அதன் மூலமாக சாதிகளைக் காப்பற்றுவதால் அந்தப் பிரிவுகளைக் கொளுத்துவோம் என்று பெரியார் அறிவித்தார். 1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டம் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகத்தினர் மேற்கொண்டனர்.
அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அப்போதைய மாநில அரசு நிறைவேற்றியது. ஆனாலும், திராவிடர் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி கைதாயினர். பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறைப்பட்டார்.
பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி, இடையாற்றுமங்கலம் நாகமுத்து ஆகிய 3 தோழர்களும் சிறையிலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடலைக் கூட யாருக்கும் தெரியாமல் சிறை வளாகத்தில் புதைத்தது காவல்துறை. பெரியார் சிறைப்பட்டிருந்ததால் இயக்கத்தை வழிநடத்திய மணியம்மையார் தலைமையில் போராட்டம் நடத்தி, அந்த உடல்களை மீட்டு, கழகத்தின் சார்பில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்.
இடையாற்றுமங்கலம் நாகமுத்துவின் வீட்டுக்கு மணியம்மையாரும் திராவிடர் கழக நிர்வாகிகளும் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அப்போது நாகமுத்துவின் மனைவி, “என் கணவர் இறந்து போனதைப் பற்றிக் கவலைப்படவில்லை. உயர்ந்த இலட்சியத்திற்காகத்தானே இறந்து போனார். தலைவரிடம் (பெரியார்) சொல்லுங்க. அடுத்த கிளர்ச்சியை நடத்தச் சொல்லுங்க. அதற்கு என் மகனை அனுப்பி வைக்கிறேன். நானும் வருவேன்” என்றார்.
எந்த விதப் பதவிக்கும் அதிகாரத்துக்கும் போகக்கூடாது என்ற கொள்கையைக் கொண்ட இயக்கத்தில், குடும்பம் குடும்பமாக, தங்கள் தலைவரின் கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்த மண் இது. விடுதலைப் போராட்டக் களத்திலும் இத்தகைய குடும்பங்கள் இருந்தன.
அதனால் தமிழ்நாடு முழுவதுமே இப்படித்தான். எப்போதுமே இப்படித்தான் என்று நினைத்துவிடவேண்டாம். அதே தமிழ்நாட்டில்தான், தியேட்டரில் தங்கள் விருப்பத்திற்குரிய கதாநாயகனின் படத்தைப் பார்ப்பதற்காக டிக்கெட் கவுண்ட்டரில் முண்டியடித்து 7 பேர் இறந்து போனார்கள் என்ற துயரச் செய்தியை, அந்த கதாநாயகனுக்குரிய பெருமிதமாகக் கட்டமைத்தார்கள்.
ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் சென்று க்யூவில் நசுங்கி, டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் சென்றபோது, குழந்தை இறந்துவிட்டதை கவனிக்கிறார். அப்படியே மடியில் கிடத்தி, படம் முழுவதையும் பார்த்து, கதாநாயகனை ரசித்துவிட்டு வெளியே வந்தார் என்பதும் அன்றைய தமிழ்நாட்டின் ‘பெருமைக்குரிய’ செய்திகளில் ஒன்றாக வெளியானது.
கதாநாயகன் படம் போட்ட போஸ்டரை விரித்து, அதன் மீது படுத்துக் கொள்கிறார்கள் என்கிற அளவுக்கு இந்த மண்ணின் ரசிக-ரசிகைத்தன்மை பற்றி எழுதிய ஜாம்பவான்களும் அப்போது உண்டு.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தும், சிறைப்படுத்தப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்த தொண்டர்களை, ‘வறுமையால் செத்துப்போயிட்டான்’ என்றும், ‘வயித்துவலி தாங்காம கொளுத்திக்கிட்டான்’ என்றும் கூசாமல் சொன்ன கூட்டமும் இங்குதான் இருந்தது.
சதிக்கோட்பாடுகளை உருவாக்கவும், அதற்கு துணை போகவும், மலிவான-துயரமான நிகழ்வுகளை பெருமிதப்படுத்தவும் எப்போதுமே ஒரு கூட்டம் உண்டு. தற்போது சமூக வலைத்தளங்களின் காலம் என்பதால் இவை பரவலாக சென்று சேர்ந்து அதிர்ச்சி தருகின்றன.
எல்லா சதிகளையும் அம்பலப்படுத்தி முறியடித்துதான், ஒரு நூற்றாண்டை கடந்து இந்த இயக்கம் நிலைத்திருக்கிறது. எதிரிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மாறிக்கொண்டே இருப்பார்கள். நாம் நிலைத்திருப்போம். அதனால், ஷாக்கை குறையுங்கள். நம்பிக்கை கொள்ளுங்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.