ஓசி சிகரெட் கேட்டு தகராறு … எஸ்.ஐ. மீது வழக்குப் பதிய உத்தரவிட்ட நீதிமன்றம் !
சிகரெட் பிரச்சினை தொடர்பாக மளிகை கடையில் பெண் வியாபாரிடம் தகராறு செய்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஜெகதீஸ் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி கடையில் அவரது மனைவி முத்து செல்வி இருந்துள்ளார்.
அப்போது எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றக்கூடிய அந்தோணி திலீபன் என்பவர் சாதாரண உடையில் வந்து சிகரெட் வாங்கியுள்ளார். பணம் கொடுப்பதில் அவருக்கும், கடையில் இருந்த முத்துசெல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முத்துசெல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு ஏதும் செய்யப்படாமல் மனு ரசீது மட்டும் வழங்கப்பட்டது. முத்துசெல்வி மற்றும் அந்தோணி திலீபனிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜானிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முத்துசெல்வி கோவில்பட்டி 2 – வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி பீட்டர் காவல் உதவி ஆய்வாளர் , அந்தோணி திலீபன் மீது பொது இடத்தில் தொல்லை கொடுத்தல், ஆபாச வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் குடிபோதையில் தகராறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
— மணிபாரதி.