அதிருப்தியில் தவெக-வுக்கு மாறிய மறுநாளே மனம் மாறி திமுகவுக்கு திரும்பிய தருமபுரி மாணவரணி பொறுப்பாளர் !
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி, முதல் மாநாட்டை நடத்தி அவர் பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் விவாதத்தை கிளப்பியது. திமுக – திராவிடத்திற்கு எதிராக அவர் பேசிய பேச்சுக்கள் ஒரு பக்கம் திமுகவை சீண்ட, இன்னொரு பக்கம் நாதக சீமானுடன் காரசாரமான வார்த்தைப் போராகவே நீண்டது.
அடுத்தடுத்து நாதகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி, விஜய் கட்சியில் ஐக்கியமாக போகிறார்கள் என்பதாகவும் தகவல்கள் தீயாக பரவிவருகின்றன. குறிப்பாக, ”கட்சி பேதமில்லாமல் வயசு பசங்க எல்லாம் விஜய் பக்கம் போயிருவாங்க பாருங்கனு”னு அரசியல் விமர்சகர்கள் சிலர் ஆருடங்களை கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், தருமபுரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் M சந்தர் தவெகவில் ஐக்கியமாகியிருக்கிறார். தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தவெகவில் இணைந்துகொண்டார் என்பதாக தினசரி ஒன்றில் படத்துடன் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்நாள் தவெகவில் ஐக்கியமானார் என்பதாக, செய்தி வெளியான நிலையில், அதற்கடுத்த நாளே கரூரில் நடைபெற்ற மண்டல திமுக மாணவரணி பொறுப்பாளர் ஆலோசணைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றதாக புகைப்படங்கள் வெளியானது, கட்சியினரிடையே மேலும் குழப்பத்தை கூட்டியது.
சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள, “சார், இப்போது நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்?” என்ற கேள்வியை சம்பந்தபட்ட சந்தர் முன்பாகவே வைத்தோம்.
“கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டுமா” என்றவர், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் தன்னை மதிக்கவில்லை; கட்சி நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை; அதிமுக காரர்களுக்குத்தான் காண்டிராக்டுகளும் கொடுக்கிறார்கள். மற்றபடி எனக்கோ மாவட்ட செயலாளருக்கோ எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் தங்கமானவர். முழுக்க , முழுக்க , பாலக்கோடு ஒன்றிய (மத்திய) செயலாளர் தான் காரணம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த பிரச்சினை குறித்து மாவட்ட செயலாளர் பழனியப்பனிடம் சொல்ல தயங்கி வந்தேன். அப்படியே சொன்னாலும் எதுவும் நடக்க போறதில்லை என்பதால், அந்த முடிவுக்கு வந்தேன்.” என்கிறார்.
அதுவும், “நான் பேச்சுவார்த்தைக்குதான் போனேன். அப்போது துண்டை போட்டு விட்டு, படம் எடுத்து வெளியிட்டு விட்டார்கள். மற்றபடி நான் தவெகவில் இணையவில்லை.” என்கிறார், சந்தர்.
“இவர் குடும்பமே, அதிமுக பின்னணி கொண்டது. பாலக்கோடு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.எல். வெங்கடேஷன் குடும்பத்திற்கு, சந்துருவின் உடன்பிறந்த சகோதரியை திருமணம் முடித்துள்ளனர். இந்த குடும்ப ரீதியான உறவிலிருந்தே, சந்தருக்கு திமுகவில் பதவி கொடுத்திருக்கிறார்கள்.
ஒன்றிய செயலாளர் மதிக்கல, காண்டிராக்ட் கிடக்கலனு அதிருப்தியில் இருந்தவர், விஜய் கட்சிக்கு போனாரு. அதுக்கப்புறம்தான், கட்சியில அவர கூப்பிட்டு என்ன பிரச்சினைனு விசாரிச்சாங்க.
அவரு சொன்னதை கேட்டு, அத சரி பன்னிக்கலாம். இங்கேயே இருங்க. விஜய் கட்சிக்கெல்லாம் போக வேணாம்னு சீனியர் நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினாங்க. அதனாலதான், மண்டல பொறுப்பாளர் கூட்டத்திலயும் கலந்துகிட்டாரு.” என்கிறார்கள், லோக்கல் உடன்பிறப்புக்கள்.
— மணிகண்டன்.