தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !
விருதுநகர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், அலுவலக உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்புதல், மார்ச் 31ல் கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்துதல், ஸ்டாலின் திட்ட முகாம்களை குறைக்குதல், போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 3, 4, ஆகிய தேதிகள் ஆகிய இரண்டு நாட்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தாசில்தார்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைவரும் பங்கேற்றதால் தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஒ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவுகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.