அங்குசம் பார்வையில் ‘ ரிவால்வர் ரீட்டா’
தயாரிப்பு: பேஸன் ஸ்டுடியோஸ் & தி ரூட் ‘ சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி, டைரக்டர்: ஜே.கே.சந்துரு, ஆர்டிஸ்ட்: கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, அக் ஷிதா அஜித், குஹானி, கதிரவன், சென்ராயன், பிளேடு சங்கர், ராமச்சந்திரன், சஞ்சீவ் ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன், இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங்: கே.எல்.பிரவீன், ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், பி.ஆர்.ஓ.: சதீஷ் ( எய்ம்).
அம்மா [ ராதிகா சரத்குமார்] மற்றும் இரண்டு தங்கச்சிகளுடன் புதுச்சேரியில் வசிக்கிறார் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ரீட்டா [ கீர்த்தி சுரேஷ் தான்.. வேற யாரு] வரதட்சணை கேட்டு துரத்தப்பட்ட தனது மூத்த தங்கச்சி குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடப் போகும் உற்சாகத்தில் இருக்கிறது ரீட்டா குடும்பம்.
புதுச்சேரியில் ஆகப்பெரிய தாதா டிராகுலா பாண்டியன்[ சூப்பர் ராயன்] அவரது மகன் பாபி[ சுனில்]. பிம்ப் லல்லு [ சுரேஷ் சக்கரவர்த்தி] ஏற்பாட்டில் ஒரு ஐட்டம் வீட்டுக்குப் போக ப்ளான் போட்டு, போகும் வழியிலேயே ஃபுல் மப்பாகி, வீடு மாறி ரீட்டா வீட்டுக்குள் போய்விடுகிறார். அங்கே நடக்கும் களேபரத்தில் டிராகுலாவை போட்டுத் தள்ளிவிடுகிறார் ராதிகா சரத்குமார். அந்த டிராகுலாவின் பிணத்தை டிஸ்போஸ் பண்ண பிளான் போடுகிறது ரீட்டா குடும்பம்.
இதற்கிடையே தன்னை அவமானப்படுத்திய டிராகுலாவின் தலையைக் கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கிறார் ரெட்டி [ அஜய்கோஷ்]. ரீட்டா வீட்டில் டிராகுலா பிணம் இருப்பதைத் தெரிந்து அதை அபேஸ் பண்ண இன்னொரு ரவுடி கும்பல் களம் இறங்குகிறது.
டிராகுலா தலை யாருக்கு கிடைத்தது? அந்த அஞ்சு கோடி ரூபாய் யாருக்கு கிடைத்தது? இதான் இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ வின் கதைச் சுருக்கம்.
டைட்டிலைப் பார்த்ததும் அடடா… நம்ம கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன் அவதாரம் எடுத்துருக்கும் போல. படமும் அதிரடி சரவெடியா இருக்கும்னு நம்பி தியேட்டருக்குள் போனோம். ஆனால் அதற்கு நேர்மாறா சூப்பர் சுப்பராயன் செத்த பிறகு ப்ளான் போடுகிறோம் என்ற பெயரில் இடைவேளை வரை கீர்த்தியும் அவரது குடும்பமும் பேசிக்கிட்டே இருக்கு. இடையிடையே அப்பாவைத் தேடி சுனிலும் அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சுக்கிட்டிருக்காரு. டிராகுலா தலையைத் தேடி ஒரு ரவுடி குரூப் சுத்திக்கிட்டிருக்கு. ஓட்டலில் ஓசி சிக்கன் கேட்டு சலம்பல் பண்ணியதை கீர்த்தி சுரேஷ் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டதால் மூன்று மாசம் சஸ்பெண்டாகி அதன் பின் வேலையில் சேர்கிறார் இன்ஸ்பெக்டர் ஜான்விஜய். க்ளைமாக்ஸ் வரை இவரும் ‘செமி’த்தனமாக பேசியே கழுத்தறுக்கிறார்.
தனது அப்பா சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் சாதாரண கதை தான். அதை ரொம்பவும் சாதாரணமாக்கி, பார்வையாளர்களை டயர்டாக்கிவிட்டார் டைரக்டர் சந்துரு. ரிவால்வர் ரீட்டான்னு டைட்டில் வேற வச்சுட்டோமே… ஏன் வச்சோம்? எதுக்கு வச்சோம்னு க்ளைமாக்ஸ்ல தான் டைரக்டருக்கு மண்டையில உறைச்சுருக்கும் போல. கீர்த்தி சுரேஷ் கையில ஒரு ரிவால்வரைக் கொடுத்துட்டாரு. டைட்டில் எப்படி மேட்ச் ஆகிருச்சு பார்த்தீகளா?
படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், அவரது மற்ற இருமகள்கள், ரெடின் கிங்ஸ்லி… இந்த அஞ்சு பேரைத் தவிர மத்த எல்லாருமே செத்துமடிகிறார்கள்.
புல்லட் இல்லாத ரிவால்வர்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.