மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்! ஏன்? எதுக்கு ? எங்கே?
தனி ஒரு ஹீரோயினாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் ’கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ நாளை [ நவ.28] உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘பேசன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி தயாரித்துள்ள இப்படத்தை ஜே.கே.சந்துரு டைரக்ட் பண்ணியுள்ளார். கீர்த்தி சுரேஷுடன் முக்கிய கேரக்டர்களில் ராதிகா சரத்குமார், சுனில், சூப்பர் சுப்பராயன், அஜய்கோஷ் பிளேடு சங்கர், அகஸ்டின், செண்ட்ராயன் சஞ்சீவ், அக்ஷிதா அஜித், கதிரவன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : தினேஷ், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : பிரவீன், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்].
பொதுவாகவே பெரிய ஹீரோ—ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாகவே படத்திற்கான புரமோ வேலைகள் தொடங்கும். ஆனால் இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியது. இதுகூட கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட முயற்சியில் தான் நடந்திருக்கும் போல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர், மியூசிக் டைரக்டர், எடிட்டர், என யாருமே இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதே போல் ராதிகா சரத்குமார் உட்பட படத்தில் நடித்த முக்கிய நடிகர்களும் வரவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.
டைரக்டர் சந்துரு, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், அக்ஷிதா அஜித் உட்பட ஆறுபேர் மட்டுமே வந்திருந்தனர். புரமோ நிகழ்ச்சி 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் பி.ஆர்.ஓ. சதீஷ். பொதுவாகவே இந்த மாதிரி சினிமா நிகழ்ச்சிகள் எல்லாமே அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாகத் தான் தொடங்கும். இதான் சினிமா உலக வழக்கம்.
ஆனால் ‘ரிவால்வர் ரீட்ட்டா’ நிகழ்ச்சியோ 6 மணிக்கு என அறிவிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்குத் தான் ஆரம்பமாகியது.
செண்ட்ராயன், பிளேடு சங்கர், அக்ஷிதா அஜித், சஞ்சீவ் என அனைவருமே கீர்த்திசுரேஷின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பைப் பற்றி பெருமிதமாக பேசினார்கள்.
ராதிகா சரத்குமார் உட்பட பலருக்கும் தனக்கு இணையான கேரக்டர்கள் இருந்தாலும் இதில் நடிக்க ஒத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகச் சொன்னார் டைரக்டர் சந்துரு.
கடைசியாக மைக் பிடித்த கீர்த்தி சுரேஷ், “வேறொரு படத்தின் ஷூட்டிங்கிலிருந்து கிளம்பி வருவதற்கு தாமதமாகிவிட்டது. அதற்காக மீடியா நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதே போல் படத்தின் தயாரிப்பாளர்கள், நடித்த நடிகர்கள் சிலரும் வரமுடியவில்லை. அவர்கள் சார்ப்பாக நான் வந்திருக்கேன். ‘சென்னை-28’, ‘மாநாடு’, ‘பார்ட்டி’ படங்களில் வெங்கட் பிரபு சாரிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர் சந்துரு. அதனால் அவரின் கதை மீது நம்பிக்கை வைத்து இதில் நடித்துள்ளேன். என்னுடன் நடித்த சக நடிகர்கள், பணிபுரிந்த டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் எனது நன்றி” என சுருக்கமாக பேசினார் கீர்த்தி சுரேஷ்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.