முடிவுக்கு வந்த மணல் பஞ்சாயத்து ! ஜெயிச்சது யாரு ? எஸ்.ஆர்.குரூப் – சி.கே.ராஜப்பா – பொன்னர் சங்கர்
தமிழகத்தில் ஒருவழியாக முடிவுக்கு வந்த மணல் காண்ட்ராக்ட் ! சென்னையை கைப்பற்றிய எஸ்.ஆர்.குரூப் ! களத்தில் இறங்கிய சி.கே.ராஜப்பா ! பொன்னர் சங்கர்
தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான உரிமம் யாருக்கு வழங்குவது என்பதில் நீடித்து வந்த இழுபறி, ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு முன்னர் தமிழகம் முழுவதுக்குமான மணல் அள்ளும் உரிமையை கொண்டிருந்த எஸ்.ஆர். குரூப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உள்ளானதையடுத்து மீண்டும் எஸ்.ஆர். குரூப்புக்கே அனுமதி வழங்காமல், பொருத்தமான வேறு ஒரு நபருக்கு வழங்குவது என்பதாக மேலிடம் கருதிய நிலையில், மணல் அள்ளும் உரிமையை யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கலும் இழுபறியும் நீடித்து வந்தன.
குறிப்பாக, திமுக ஆதரவில் மணல் அள்ளும் பிசினஸை நடத்தி அதில் காசு பார்த்துவிட்டு, அதிமுக ஆதரவு நிலையெடுத்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நின்ற வேட்பாளர்களுக்கு விட்டமின் “பா” சப்ளை செய்தது; அதிலும் குறிப்பாக திருச்சியில் கரிகாலனின் உடன் பிறந்த தம்பியை வேட்பாளராக நிறுத்தியது ஆகியவற்றின் காரணமாக தலைமையின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிட்டது.
மணல் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகிய மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து எஸ்.ஆர். குரூப் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிலையில், ரீச்சில் மணல் அள்ளுவது தொடங்கி, அதனை யார்டுக்கு கொண்டு செல்வது, யார்டில் வைத்து பரவலாக விற்பணை செய்வது வரையில் ஏகபோகமாக அவர்களை தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்துவிடாத அளவுக்கு தனி சாம்ராஜ்யத்தையே கட்டமைத்திருந்தனர்.
இந்த ஏகபோக நிலையும் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டு தமிழகத்தில் பரவலாக ஒன்றிரண்டு லாரியை சொந்தமாக வைத்து சரக்கு போக்குவரத்தை நடத்தி வரும் நபர்களின் அதிருப்தியையும் சேர்த்தே சம்பாதித்திருந்தனர். மற்றவர்களை சம்பாதிக்க அனுமதிக்கவிடாமல், எல்லாவற்றிலும் தான் மட்டுமே கோலோச்ச வேண்டுமென்ற ஏகபோகநிலை; அதிமுக ஆதரவு நிலைப்பாடு; அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்து ஒன்று சேர்த்து ஆளும் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியதையடுத்தே, எஸ்.ஆர்.குரூப்புக்கு மாற்றை தேட வேண்டிய நிலைக்கு ஆளும் தரப்பை தள்ளியதாக சொல்கிறார்கள்.
எஸ்.ஆர்.குரூப்புக்கு மாற்றாக தமிழகம் முழுமைக்குமான மணல் காண்டிராக்டை பொறுப்பாக மேற்கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த நபரை அடையாளம் கண்டு அழைத்து வரும் அசைன்மென்ட் எ.வ.வேலுக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த பின்னணியிலிருந்தே, எஸ்.ஆர். குரூப் அனுபவத்திலிருந்து இனி தமிழகம் முழுவதுக்கும் ஒரே நபரிடம் கான்டிராக்ட் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த மேலிடம், தமிழகத்தை மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரித்து மணல் அள்ளும் உரிமையை வழங்குவது என்பதாக முடிவெடுத்திருக்கிறது.
இதன்படி, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்தில் தொடங்கி தருமபுரியை உள்ளடக்கிய சென்னை மண்டலம்; கோவை, நீலகிரி, உதகை உள்ளடக்கிய கோவை மண்டலம்; மேட்டூர் அணை தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலம்; மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலம் என்பதாக இவை பிரிக்கப்பட்டிருக்கின்றன.
தெலுங்கானா காண்டிராக்ட் கடைசி நேரத்தில் கைவிட்டு போன நிலையில், தமிழகத்தில் எப்படியும் பழையபடி மொத்த மணல் காண்டிராக்டை பெற்றுவிட வேண்டுமென்று எஸ்.ஆர்.குரூப் நிறைய மெனக்கெட்டதாக சொல்கிறார்கள். அமைச்சர் துரைமுருகனே தனிப்பட்ட முறையில் பல விசயங்களை எடுத்து சொல்லியும் வேலைக்கு ஆகாமல் போனதாகவும் சொல்கிறார்கள். துரைமுருகன் முன்வைத்த சில விசயங்களை கருத்தில் கொண்ட, மேலிடம் சென்னை மண்டலத்தை மட்டும் எஸ்.ஆர்.குரூப்புக்கு கொடுப்பது என்றும் இந்த காண்டிராக்ட் மணல் ராமச்சந்திரனுக்கு மட்டுமே என்றும் இதில் ரத்தினம், கரிகாலன் ஆகியோரின் தலையீடு இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். எஞ்சிய, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மூன்று மண்டலங்களும் சி.கே.ராஜப்பாவுக்கே உறுதி செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ராஜப்பாவை பொறுத்தமட்டில், திருச்சி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள கரூர் மாவட்டத்துக்கான மணல் அள்ளும் பொறுப்பை மட்டும் பொன்னர் சங்கர் குழுமத்திடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்ற ஒரே நிபந்தனையோடு கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர் சங்கர் தொழிலதிபர் சகோதரர்களும் மணல் காண்டிராக்டை பெற முயற்சிக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். ஆறுமுகசாமி காலத்தில் இருந்து கே.சி.பி. காலம் வரையில் அவர்களுக்கு பக்கபலமாக ஆட்களையும் மணல் அள்ளும் இயந்திரங்களையும் சப்ளை செய்து அவர்களோடு இணைந்து தொழில் செய்த அனுபவம் உள்ளவர் பொன்னர் சங்கர் என்கிறார்கள். தற்போது, ஆந்திராவிலும் தொழில் செய்தும் வருகிறார்கள். சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜகோபுரம் கட்டி அம்மனின் அருளாசி பெற்றவர்களுக்கு மேலிடத்து அம்மாவின் ஆசியும் இருந்ததால்தான், தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்திருந்தாலும், அதில் ஒரு மண்டலத்தில் இருந்து கரூர் மாவட்டத்தை மட்டும் பிரித்து இவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
எஸ்.ஆர்.குரூப்புக்கு எதிரான மனநிலையில் மேலிடம் இருப்பதை உணர்ந்த சி.கே.ராஜப்பா, மேலிடத்தில் லாபி செய்து எப்படியும் மூன்று மண்டலங்களுக்குமான மொத்த காண்டிராக்டை பெற்றுக்கொண்டு, அதனை மாவட்ட வாரியாக பிரித்துக் கொடுத்து காசு பார்த்துவிடலாம் என்று நினைத்த ராஜாப்பாவுக்கு, தொடக்கமே சறுக்கல்தான் என்கிறார்கள். ஆர்வக்கோளாறில் செய்த சில சங்கதிகள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது என்கிறார்கள்.
இவரது பழைய குணத்தை அறிந்த நபர்கள் பலரும், மீண்டும் இவரிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று உஷாராக பின்வாங்கியதே சறுக்கலுக்கு காரணம் என்கிறார்கள். முதலில் பணத்துக்கு ஓடியாடியவர். தற்போது, தமிழகம் முழுவதும் பிசினஸை செய்வதற்கு தொழில் ரீதியான ஆதரவு தேடி, ஆறுமுகசாமியை அணுகியிருக்கிறார். அவரும் தலையை சொறிந்தவாறே, பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்கிறார்கள்.
எஸ்.ஆர்.குரூப் மணல் பிசினஸில் கால் நூற்றாண்டு அனுபவத்தில் கரை தேர்ந்தவர்கள். பொன்னர் சங்கர் குரூப்பும் ஆறுமுகசாமி, கே.சி.பி.யோடு உடன் பயணித்த அனுபவம் உடையவர்கள். ஆனால், இந்த சி.கே.ராஜப்பா, இதுபோன்ற எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர் என்கிறார்கள். அவரால், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த பிசினஸை தொடர்ந்து நடத்த முடியுமா? என்பதே சந்தேகம் என்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்ப்போமே, என்னதான் நடக்கிறதென்று? –
அங்குசம் புலனாய்வுக்குழு.