கல்லூரி மாணவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன், துணை முதல்வர் அருள் முனைவர் அருளானந்தம் என் நிகழ்வில் பங்கேற்று தொடங்கி வைத்தனர். துணை முதல்வர் முனைவர் ரவீந்திரன் இந்த நிகழ்வு நமது கல்லூரியில் ஏன் நடத்தப்படுகிறது என்கிற விளக்கத்தை கூறி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு உரை வழங்கினார். அவருடைய உரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டுவதே, ஊழலைக் கட்டுப்படுத்துவது என்கிற நோக்கில் மத்திய அரசால் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதே தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணையதளத்தின் வழியாகவும் மிகக் குறைவான கட்டணத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகளை விண்ணப்பங்களாக அனுப்பி தகவல் பெறுவதற்கு இந்த சட்டம் உதவி செய்கிறது. காஷ்மீர் தவிர்த்த அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.

இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் வினாக்கள், ராணுவ ரகசியங்கள், அயலக உறவைப் பாதிக்கக்கூடிய வினாக்கள் என சில வினாக்களை எழுப்ப இயலாது எனினும் இந்தச் சட்டம் தருகிற வழிமுறையைப் பின்பற்றி வினா எழுப்பி நம்மால் பதில்களைப் பெற முடியும்.
இப்படி ஒரு சட்டம் இருக்கிறது அதன் மூலம் சரியான வினாக்களை எழுப்பி பதிலை பெற்று நம்முடைய கிராமத்திற்கும், ஏழை எளிய மக்களுக்கும் நம்மால் உதவி செய்ய முடியும் என்பதை உணர்த்துவதற்காகவே நமது கல்லூரியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளைய சமூகத்தை தாங்குவதற்கான தூண்கள் நீங்கள்தான் என்ற அடிப்படையில் உங்களுக்கு இந்த பயிற்சியை வழங்குகிறோம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த பரந்த அறிவைப் பெற்று அதை சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக நீங்கள் மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் டாம்னிக் நன்றியுரை ஆற்றினார். பேராசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
– மாதவன்