இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ! திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பரிதாப நிலை !
இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ! திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பரிதாப நிலை !
திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு விசயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற தகவலை கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே விசாரணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றதன் காரணமாகத்தான், கடுமையான கெடுபிடிகளை ஏற்படுத்தினார்கள். நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்குகளில் ஆஜராகும் போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரையில், அன்றைய தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள்ளாக அனுமதிக்கப்படுகிறார்கள். கடுமையான கெடுபிடிகள் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியை பொருத்தவரையில், பிரதான நுழைவாயில் அருகே நீதிமன்ற பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, சந்தேகத்திற்கிடமானவர்களை விசாரித்து அனுப்புவது என்ற நடைமுறை தொடர்கிறது. ஆனாலும், பிரதான நுழைவாயில் தவிர்த்து பின்பக்க வழியாக எவர் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குள் நுழைந்துவிட முடியும் என்ற நிலைதான் கவலை கொள்ள வைக்கிறது.

ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் வளாகமாக மட்டுமின்றி, இதே வளாகத்திற்குள்ளாக சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. மிக முக்கியமாக, நீதிபதிகளின் குடியிருப்பும் இதே வளாகத்திற்குள்தான் அமைந்திருக்கின்றன.

சமீபத்தில், வழக்கு ஒன்றிற்காக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்த சமயத்தில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஒன்றுகூடவிட அக்கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் மிகவும் சிரமப்பட நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பதிவாளர் அலுவலகம், நீதிபதிகளின் குடியிருப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்படும் பகுதியையொட்டி குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்பு பகுதியையொட்டி தடுப்புச்சுவர் எழுப்பட்டிருக்கிறது. இந்த தடுப்புச்சுவரில்தான் இரண்டு இடங்களில் உடைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தானாக விழுந்ததா? தேவைக்காக சிதைத்துவிட்டார்களா? என்பதற்கு விடையில்லை.

சென்சிட்டிவான, முக்கியமான வழக்குகளின் விசாரணையின் பொழுதோ, முக்கிய பிரமுகர்கள் வருகை புரியும்பொழுதோ கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஆனாலும், தடுப்புச்சுவர் ஓட்டை வழியாக, எவர் ஒருவரும் போலீசாரின் கெடுபிடிகளிலிருந்து எளிதில் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துவிட முடியும் என்பதுதான் முக்கியமானது. இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவெனில், நீதிபதிகளின் குடியிருப்புகளுக்கு எதிரில்தான் இந்த தடுப்புச் சுவர் சேதமாகியிருக்கிறது. இது, நீதிபதிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த நீதிமன்ற வளாகத்தை பராமரிக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறையின் கட்டிடப் பாதுகாப்புத்துறைதான் மேற்கொண்டு வருவதாக சொல்கிறார்கள். போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததன் காரணமாகத்தான் இந்தப் பணியை கிடப்பில் போட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். நீதிமன்ற வளாகத்திற்குள்ளே நுழைவது மட்டுமல்ல; நீதிமன்ற வளாகத்திற்குள்ளாக விரும்பத்தகாத குற்றங்களை நிகழ்த்திவிட்டு குற்றவாளிகள் எளிதில் தப்பிச்செல்வதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது என்பதுதான் கொடுமையான விசயம்.
அவர் பொறுப்பு, இவர் பொறுப்பு என துறைசார்ந்த அதிகாரிகளை கைகாட்டிவிட்டு கடந்து செல்லாமல், உரியமுறையில் உடனடியாக இக்குறைபாடு சரிசெய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு! சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
– அங்குசம் புலனாய்வுக் குழு.