வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் !
வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் ! திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பாக வெளியான அறிக்கையில், ”தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1,50,000 கன அடிக்கும் மேலாக நீரானது காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்தானது அதிகரித்துள்ளதால், காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராம பகுதிகளான மல்லாச்சிபுரம், கம்பரசம்பேட்டை, முருங்கபேட்டை, குணசீலம், கரியமாணிக்கம், சிறுகாம்பூர், திருவாசி, அல்லூர், சர்க்கார்பாளையம், ஒட்டக்குடி, முள்ளிக்குடி, குவளக்குடி, வேங்கூர், முருகுர், வாளவந்தான்கோட்டை, உய்யன்கொண்டான் ஆற்றுபகுதிகள்.
கூகூர், அரியூர், சடமங்கலம், இடையாற்று மங்கலம், நம்பர் 1 டோல்கேட், உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், அய்யம்பாளையம், கோடியாம்பாளையம், திருநாராயணபுரம், மணமேடு, அளகரை, உன்னியூர், சீலைப்பிள்ளையார் புதூர், காடுவெட்டி, எம்.புத்தூர், காரைக்காடு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.” என்பதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், இது தொடர்பாக ஏதேனும் அவசர உதவிக்கு மாவட்ட நிர்வாக அவசர உதவி எண் 1077 என்ற எண்ணிற்கும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அவசர உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
அங்குசம் செய்திப்பிரிவு.