குண்டும் குழியுமான சாலை சீர்செய்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் !
குண்டும் குழியுமான சாலையை சொந்த பொறுப்பில் சீர்செய்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் !
வளைத்து வளைத்து கேஸ் போட்ட போலீசார், விரட்டிப் பிடித்த போலீசார், மடக்கிப் பிடித்த போலீசார் என்ற பொதுவான செய்திகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு போக்குவரத்து போலீசாரின் செயல் பலரின் புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.
கரூர் மாவட்டம் குளித்தலையடுத்த சுங்ககேட் நாப்பாளையம் பகுதியில் குண்டும் குழியுமாக கிடந்த அணுகுசாலையை, தனது சொந்த பொறுப்பில் சாலையை செப்பணிட்டு அப்பகுதி மக்களின் இதயங்களை கவர்ந்திருக்கிறார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம்.
சுங்ககேட் நாப்பாளையம் பகுதியிலிருந்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாக இருப்பதால் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இப்பகுதியையொட்டிய குடியிருப்பு வாசிகளின் போக்குவரத்துக்கான சாலையாக மட்டுமல்லாது; முசிறி, குளித்தலை நோக்கி செல்லும் இருசக்கர வாகனம் முதலாக பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களும் இந்த இணைப்புச் சாலையை பயன்படுத்தித்தான் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டும் குழியுமாக கிடக்கும் இந்த சாலையால் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மழைகாலங்களில் இந்த சாலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. வழக்கமாக இந்த வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சாதுர்யமாக பள்ளங்களை முன்னறிந்து அவற்றிலிருந்து தப்பி சென்றுவிட முடியும். இல்லையெனில், எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பதை அனுமானிக்க முடியாமல் தடுமாறி சேற்றில் விழுந்து வாருவதை தவிர்க்க முடியாது.
வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலான இந்த சாலையைத்தான், செப்பணிட்டிருக்கிறார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம். அதுவும், திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை புதுப்பித்தல் பணியின் பொழுது பெயர்த்து எடுக்கப்பட்ட தார்ச்சாலை கழிவுகளை டிராக்டரில் கொண்டு வந்து கொட்டி இணைப்புச் சாலையில் பரப்பி ஜே.சி.பி. எந்திரத்தின் வழியே சீர்படுத்தியிருக்கிறார்.
டூட்டி நேரத்தில் ரோட்டில் நின்றோமா, நாலு வண்டியை மடக்கிப் பிடித்து கேசு பிடித்தோமா, டார்கெட்டை முடித்தோமா என்று கடந்து போகாமல், வாகன ஒட்டிகளின் – பொதுமக்களின் நலன் சார்ந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலத்தின் செயல் பாராட்டுக்குரியது. முன்னுதாரணமானது. அங்குசம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார் !
– நௌஷாத் – கரூர்.