கொம்பன் ஜெகன் போலீசில் சிக்கியது எப்படி ? உண்மை அறியும் குழு விரிவான ரிப்போர்ட் !
இரு கைகளையும் பின்பக்கமாக மடக்கி கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு, எங்கடா போய் வருகிறீர்கள் ஜெகனுடன், என்று கேட்டுக் கொண்டவாறு அவரை......
திருச்சியில் ஜெகன் சுட்டுக்கொலை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போலி மோதல் கொலைகள் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (Joint Action Against Custodial Torture-JAACT) சார்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன்-சட்ட ஆலோசகர், தோழர் தியாகு, தோழர் மீ. த.பாண்டியன், வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கை பின்வருமாறு:-
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காட்டுப்பகுதியில் கொம்பன் எனும் ஜெகன் என்பவரை போலீசார் பிடிக்க சென்றபோது அரிவாலால் போலீசாரை தாக்கியதாக கூறி ஜெகனை என்கவுண்டர் செய்துள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஆரம்ப கட்ட கள ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் நடந்திருப்பது போலி மோதல் படுகொலை என தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் காவல்துறைக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கின்றது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமார் மகன் கொம்பன் ஜெகன் என்கிற ஜெகதீஷ்(30) பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பி.இ. படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
முதன் முதலில் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையில் முதல் ஆளாக நின்று அடிதடியில் இறங்கி இருக்கிறார். அதுவே பின்னாளில் அவர் குற்றப் பின்னணி உடையவராக மாறுவதற்கான தொடக்க புள்ளியாக மாறி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கொள்ளை அடித்த வழக்கு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு, முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, கொலை, மிரட்டல் வழக்கு என 2012 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டுக்குள் திருச்ச, கரூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி வரையில் பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கீழே ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களை செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் பல ஆண்டுகளை கழித்திருக்கிறார்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெகன் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன்பின் இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட போவதில்லை எனவும் மனைவியுடன் சேர்ந்து வாழ போகிறேன் எனவும் ஜெகன் நன்னடத்தை பத்திரம் எழுதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு காவல்துறையிடம் வழங்கி இருக்கிறார்.
கடந்த 18.11.2023 அன்று காதர் மொய்தீன், முகமது ரிஸ்வான், நிகில் பிரியன் இவர்கள் மூவரும் நண்பர்கள். வெவ்வேறு தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. மூவரும் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்கள். அதற்காக 18.11.2023 அன்று புறப்படும் நேரத்தில் இவர்களுக்கு தெரிந்த மற்றொரு நண்பரான கொம்பன் ஜெகனும் அவருக்கு நண்பரான முகமது யாசிக் ஆகிய இருவரும் திடீரென முடிவு செய்து நண்பர்களோடு கேரளாவிற்கு சென்று உள்ளனர்.
TN 81 K 8181 என்ற பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் (Maruthi Suzuki Swift Dezire) கேரளா மாநிலத்திற்கு சென்றுள்ளனர். நவம்பர் 19ஆம் தேதி கொச்சி ஒன்றெல்லா, 20ம் தேதி வர்கலா, 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிரம்பள்ளி அருவி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்ட, அன்று இரவே திருச்சி செல்வதற்காக கோயம்புத்தூர் வழியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் வரும்பொழுது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் இவர்களது காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது காரை ஓட்டி வந்த காதர் மொய்தீன் ஏதோ Drink and Drive சோதனை என நினைத்து காரை விட்டு கீழே இறங்கி போலீசாரிடம் வாயை ஊதி காட்டி உள்ளார. ஆனால் அதற்குள் போலீசார் அவரது இரு கைகளையும் பின்பக்கமாக மடக்கி கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு, எங்கடா போய் வருகிறீர்கள் ஜெகனுடன், என்று கேட்டுக் கொண்டவாறு அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா (Innova) காரில் ஏற்றி கண்களை துணி கொண்டு கட்டிவிட்டு காரை எங்கோ எடுத்துச் சென்றுள்ளார்கள். அதே நேரத்தில் மாருதி ஸ்விப்ட் காரில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகாமையில் உட்கார்ந்து இருந்த ஜெகனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரது கையில் கைவிலங்கை காரின் இருக்கையோடு சேர்த்து பூட்டி இருக்கிறார்கள்.
அந்நேரத்தில் காருக்குள் இருந்த நான்கு நபர்களையும் பார்த்து அசைந்தால் அனைவரையும் என்கவுண்டர் செய்து விடுவோம் என போலீசார் மிரட்டி உள்ளனர். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டிவிட்டு, செல் போன்களை வாங்கி அனைத்து (Switch off) வைத்துவிட்ட, காரின் டிரைவர் இருக்கையில் ஒரு போலீஸ்காரரும், ஜெகன் மடியில் ஒரு போலீஸ்காரரும், பின் இருக்கையில் இருவர் மடியில் 2 போலீஸ்காரர்களும் அமர்ந்து கொண்டு அங்கிருந்து காரை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களில் ஜெகனை மட்டும் வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றிவிட்டு, காதர் முகத்தீனை மீண்டும் மாருதி ஸ்விப்ட் காருக்கே மாற்றி விட்டு ஜெகனை மட்டும் தனியே பிரித்து எடுத்து சென்றிருக்கிறார்கள்.
காதர் முகைதீன், முகமது யாசிக், முகமது ரிஸ்வான், நிகில் பிரியன் ஆகிய நால்வரின் கண்கள் கட்டப்பட்ட நிலையிலே மூன்று போலீசார் சாதாரண உடையில் அவர்களை மாருதி ஸ்விப்ட் காரில் எங்கோ அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 22.11.2023 அன்று காலை சுமார் 8.30 மணி அளவில் காரை ஒரு குளத்தின் அருகில் நிறுத்தி, மூன்று போலீசாரும் கண் கட்டை அவிழ்த்துவிட்டு, அனைவரையும் காரில் இருந்து இறங்கச் சொல்லி, அவர்கள் காலைக் கடன்களை முடிக்க சொல்லி இருக்கிறார்கள்.
மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் காரை எடுத்துச் சென்று ஏதோ ஒரு ஹோட்டலில் இருந்து காலை உணவு வாங்கி வந்து அனைவரையும் சாப்பிடச் சொல்லி போலீஸ்சாரும் உடன் சாப்பிட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் அவர் அனைவரின் காயங்களையும் மீண்டும் கட்டிவிட்டு, காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் எங்களை விட்டு விடுங்கள் என்று கேட்ட போதெல்லாம, நீங்கள் ஏன் ஜெகனோடு சென்றீர்கள்? அதனால் தான் உங்களை அழைத்துச் செல்கிறோம். மாலையில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விடுங்கள் என்று சொல்லி வந்ததை நம்பியதாலும், பயத்தாலும், தாங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தங்களை விட்டு விடுவார்கள் என்று நம்பி அனைவரும் எந்த எதிர்ப்புமின்றி அவர்களுடன் சென்று இருக்கிறார்கள்.
அதன் பின்னர் மூன்று மூன்றரை மணி நேரம் பயணத்திற்கு பின்னர், ஒரு திருமண மண்டபம் ஒன்றினுள் அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கண்கட்டுகளை அவிழ்த்துவிட்டு அங்கேயே இருக்க சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர் சுமால் முக்கால் மணி நேரம் கழித்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் மீண்டும் மண்டபத்திற்கே அவர்களை அழைத்து வந்து மாலை சுமார் ஆறு மணி வரையில் அங்கு தங்க வைத்து இருக்கிறார்கள்.
பின்னர் ஒரு சில நாட்களில் வந்துவிடலாம்; மேலதிகாரிகளின் உத்தரவு; அதனால் உங்கள் மீது சிறு வழக்கு போடுகிறோம்; ஒரு 10 அல்லது 20 நாட்களில் ஜாமினில் வெளிவந்து விடலாம் என்று சொல்லி, நீதிபதி கேட்கும் போது நடந்தது எதையும் சொல்லக்கூடாது; நாங்கள் சொல்வது போல் சொல்ல வேண்டும் என்று சொல்லி மிரட்டி மாலை சுமார் 7.00 மணி அளவில் மணப்பாறை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் நால்வரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து காவல் நிலையம் கொண்டு செல்லாமலேயே சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
திருச்சி மத்திய சிறைக்கு வந்த மறுநாள் தான் ஜெகன் அவர்களை தங்களிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று, பிறகு போலீசார் சுட்டு கொன்றுவிட்டு என்கவுண்டர் என்று நாடகமாடி பொய் செய்திகளை பரப்பி வருவதையும், அவற்றை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பாவிகளான அவர்கள் நால்வர் மீதும் போதை பொருளான கஞ்சா விற்பனை செய்ய எடுத்து வந்ததாக போதைப்பொருள் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டிருப்பதையும் அறிந்து மிகவும் அவர்கள் பயந்து போய் சிறைக்கு வரும் அவரது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்களிடம் அழுது புலம்பி வருவதாக மிகவும் பயந்து கொண்டே தெரிவித்துள்ளார்கள்.
ஜெகனை மட்டும் தனிமைப்படுத்தி போலீசார் வாகனத்தில் ஏற்றி வந்து, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் P K அகரம் அருகாமையில் உள்ள A2B அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு பின்பக்கம் அமைந்துள்ள வனப்பகுதியில் மதியம் சுமார் 1:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் கருணாகரன், சார்பு ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஜெகன் இறந்துவிட்டார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்த, லால்குடி அரசு மருத்துவமனைக்கு ஜெகனை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து போய்விட்டார் என தெரிவித்ததால், ஜெகனின் உடலை உடற்கூறாய்வு செய்ய திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
1. காவல் மரணங்கள் நிகழ்ந்த பின்பு பின்பற்ற வேண்டிய “சந்தோஷ் -எதிர்- மதுரை மாவட்ட ஆட்சியர்” வழக்கின் உயர் நீதிமன்ற தீர்ப்பினை போலீசார் பின்பற்றவில்லை. குறிப்பாக 23.11.2023 அன்று ஜெகனின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடலை பார்த்து காயங்களை அடையாளம் கண்டு, புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் உடற்கூறாய்வுக்கு பின்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடற்கூறாய்வு அறிக்கை, உடற்கூறாய்வின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு மற்றும் புகைப்படம் எதுவும் வழங்கப்படவில்லை.
2. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமையை திட்டமிட்டு போலீசார் தடுத்துள்ளனர். ஆகவே இக்குற்றத்தில் ஈடுபட்ட போலீசார் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ லிங்:
3. போலி மோதல் சாவில் மரணம் அடைந்த ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது உண்மை. அவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குற்ற பின்னணி கொண்ட ஜெகன் மீது விரைவாக சட்டப்படி நடவடிக்கையை எடுத்து அவரை சிறையில் வைத்திருக்க வேண்டியதே, காவல்துறையின் சட்டக் கடமையாகும். சமூகத்தில் ரௌடிகள் வளர்கிறார்கள்; இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது; என்கிற கருத்தை பொதுச் சமூகத்தில் வளர்த்து, இதை நியாயப்படுத்த இதுபோன்ற போலி மோதல் கொலைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
4. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 11 போலி மோதல் சாவுகள் நடந்துள்ளன. இத்தகைய செயல்களால் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு இதுபோன்ற போலி மோதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
5. ஜெகன் ஓடு சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட, காதர் மொய்தீன் முகமது ரிஸ்வான், நிகில் பிரியன், முகமது யாசிக் ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இருந்து ஜகனை கடத்தி திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வழக்கினை சிறப்பு புலனாய்வு முகைமையின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும, நீதியும் பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் கூறுகின்றது.
ஹென்றி திபேன்- சட்ட ஆலோசகர்-JAACT, தியாகு-ஒருங்கிணைப்பாளர்- JAACT, மீ.த.பாண்டியன்- செயலாளர்-JAACT, கென்னடி -மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி – JAACT
இதையும் படிங்க :