50 காசு இழப்புக்கு திரும்பக் கிடைத்ததோ ரூ.15000 !
சென்னை கெருகம்பாக்சுத்தைச் சேர்ந்தவர், மனஷா இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி. பொழிச்சலூர் அஞ்சலகத்துக்கு ஒரு பதிவுத்தபால் அனுப்ப சென்றிருந்தார். இதற்கான கட்டணம் ரூ. 20.50.
ஆனால் அஞ்சலக ஊழியா், மனஷாவிடம் ரூ.30 செலுத்துமாறு கூறினார் அவரும் ரூ.30 செலுத்தி விட்டு மீதி 50 காசு திருப்பிக்கேட்டார். ஆனால் கணினி, ரூ.29.50 என்பதை ரூ.30 ஆக ரவுண்ட் ஆப் செய்து விடும் என ஊழியர் கூறினார்.
அதற்கு அவர், “அப்படியென்றால் நான் ரூ.29.50ஐ, யுபிஐ மூலம் (ஆன்லைன் பண பரி மாற்றம்) செய்கிறேன் என பதிலளித்தார். ஆனால் அஞ்சலக ஊழியரோ தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாகக்கூறி, ஆன்லைன் பண பரிமாற்றத்தை நிராகரித்தார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான மனஷா, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
வழக்கில் அவர். “இந்திய அஞ்சல் துறை, தினசரி மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை ரவுண்ட் ஆப் செய்யும் தபால் அலுவலக நடைமுறை யானது, கணிசமான தொகை பறிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். கறுப்புப் பணம் மற்றும் ஜிஎஸ்டி வருவாய் இழப்பும் அரசுக்கு ஏற்படலாம்” குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதற்கு பதிலளித்த அஞ்சல் துறை, 50 காசுக்கு குறைவான தொகை கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டும். ஆனால் 50 காசுக்கு அதிகமான தொகை என்கிறபோது, கூடுதலாக ஒரு ரூபாய்க்கு ரவுண்ட் ஆப் செய்யப்படுகிறது. இதற்கு கணினி மென்பொருள் வழிவகுத்துள்ளது” என்று கூறியது.
வாடிக்கையாளர் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்ய மறுக்கப்பட்டது குறித்து அஞ்சல் துறை விளக்கம் அளிக்கையில், யூ மற்றும் கியூஆர் கோடு பணபரிமாற்ற முறை கடந்த ஆண்டு நவம்பர் முதல் செயல்படவில்லை. அந்த ஆண்டு மே மாதம் முதல் அது நிறுத்தப்பட்டு விட்டது’ என கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நுகர்வோர் கோர்ட் மென்பொருள் பிரச்னை காரணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை அஞ்சல்துறை ஒப்புக்கொண்டு விட்டதாக கண்டது. இது, 2019ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 உட்பிரிவு 47- ன்படி நியாயமற்ற வர்த்தக் நடைமுறை எனவும் முடிவு செய்தது.
இதன்காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மனஷாவுக்கு இந்திய அஞ்சல் துறை ரூ.10 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும். வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கூடுதலாக பெற்ற 50 காசுவை திரும்ப தர வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.