கல் குவாரிகளில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் ! முதல்வருக்கு முன்னாள் எம்பி அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு !
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு அனுமதி பெறாமல் இயங்கும், 174 கல் குவாரிகளில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளன. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லகுமார் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18-ந்தேதி அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் ஆக.4, கொரோனா காலக்கட்டத்தில், 18 கிரானைட் குவாரிகளுக்கு அப்போதைய கிருஷ்ணகிரி கலெக்டர் டெண்டர் கோரினார். அதை எதிர்த்து, தொகுதி எம்.பி., என்ற முறையில் வழக்கு தொடர்ந்தேன். அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டதாக, அன்றைய கலெக்டர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அன்றைய இரவே, கலெக்டர் மாறுதல் செய்யப்பட்டு புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சியரும் அதே 18 குவாரிகளுக்கு டெண்டர் கோரினார். அதை எதிர்த்து நான், உயர் நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தேன்.
அந்த வழக்கு தற்போது தங்களது ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் (வழக்கு எண். 16060/2020) விசாரணைக்கு வந்துள்ளது. நானே நீதிமன்றத்தில் வாதாட அனுமதி பெற்றுள்ளேன். அரசு தலைமை வழக்கறிஞர், நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவாக இருப்பார் என நம்பு கிறேன்.
நண்பர் ராதாகிருஷ்ணன் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதியரசர் சுப்ரமணியம் அவர்கள் அமர்வில் மாவட்ட நிர்வாகம் 2 கல் குவாரிகளில் மட்டும் 198 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக கனிம வளம் திருடப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் வாக்குமூலம் அளித்துள்ளதற்கு , நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து , மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, அரசியல்வாதிகள் என அனைவரையும் கண்டித்ததோடு அனைத்து குவாரிகளையும் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போது, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்தில், நான் பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், சில குவாரிகளை ஆய்வு செய்து, 300 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால், அபராதத் தொகையை முறையாக வசூலிக்கவில்லை.
தவணை முறையில் செலுத்த அரசு அனுமதி அளித்ததை எண்ணி வேதனை அடைந்தேன். இந்த 300 கோடி ரூபாய் அபராதம் என்பதே, ‘ரெக்கவரி ரேட்டி”ங்கில் பார்த்தால், வெறும் 20%, 30% சதவீதம் தான். ஆனால், 90 % என்றால், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் வந்திருக்கும். ஓரளவு அரசின் கடன் சுமையை குறைத்திருக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 300-க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவே மதுரையில் கனிமவள முறைகேடு செய்த வழக்கில் 90% Recovery Rate என்று தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி 90% என்றால் இது 300 கோடி அல்ல, 1000 கோடிகளுக்கும் மேல் அரசுக்கு வருவாய் வந்திருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 300- க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட அந்த குவாரிகளில், ‘ட்ரோன்’ மூலம் சர்வே செய்தால், நிச்சயம் 30,000 கோடி ரூபாய்க்கு மேலான மக்களின் சொத்துகள், ஒரு சில தனி நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வரும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு கூறப்பட்ட தகவல்படி, அனுமதியின்றி , 174 குவாரிகள் இம்மாவட்டத்தில் இயங்குவதாகவும் அவற்றில் முழுமையாக ஆய்வு செய்தால், 25,000 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியும். அதற்கு அபராதம் விதித்து, முழுமையாக வசூலித்தாலே, அரசின் தற்போதைய கடன் சுமையில்,2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைத்துவிட முடியும்.
இது ஒரு புறம் இருக்க M-சான்ட் கொள்ளை என்பது கல்குவாரிகளின் கொள்ளையை விட பன்மடங்காகும். எனவே தாங்கள், அரசு தலைமை வழக்கறிஞர் அவர்களுக்கு தகுந்த ஆணை பிறப்பித்து தமிழக அரசின் வெளிப்படை தன்மையை தெளிவுபடுத்தி இந்த ஏலத்தினை ரத்து செய்வதோடு , முழுமையான ஆய்விற்கு உத்தரவிட்ட செய்தியை நீதிமன்றத்தில் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் எம்.பி. செல்வக்குமார்.
இந்த கடிதம் குறித்து மேலும் விவரம் அறிய முன்னாள் எம்பி செல்லக்குமாரை தொடர்பு கொண்டோம். “அந்த கடிதம் என்னுடையது தான். அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதான். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் எப்படி வெளியானது என்பது ஆச்சரியமாக உள்ளது. நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்த பிறகுதான், சமீபத்தில் ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட, குவாரிகளில் மட்டுமே, ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்திருக்கின்றனர். முறையாக ஆய்வு செய்தால் நிச்சயம், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கலாம். அந்த அளவுக்கு அத்துமீறல்கள் நடக்கின்றன. இதை தடுக்கதான் முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பினேன்” என்றார்.
அதிமுக ஆட்சி காலத்தில் இந்த முறைக்கேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றச்சாட்டு குறித்து அதிமுக துனை பொதுச்செயலாளர் கேபி முனிசாமியிடம் பேச முயன்றோம்.
விவரத்தை கேட்ட அவரது உதவியாளர் ஒருவர் சிறிது நேரம் கழித்து அழைத்தவர் கட்சியில் கள ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது அவர் பங்கேற்று வருவதால், தற்போது பதில் அளிக்க இயலாத சூழல் இருப்பதாக கூறினார்.
புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் கேட்டதற்கு, “சட்டவிரோதமாகச் செயல்படும் இ.சி (என்விரோன்மென்டல் கிளியரன்ஸ்) சான்றிதழ் பெறாமல் குவாரிகளைத் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட கனிம வளத்துதுறை இனை இயக்குனருக்கு உத்தரவிட்டிருக்கிறோம். மேலும் அத்து மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.
அ.தி.மு.க., தி.மு.க என, எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கைகளில், குவாரிகளின் டெண்டர் எடுப்பதால் அத்துமீறல்களைத் தடுக்க முடியாமல் அரசியல் கட்சியினர் ஆட்டுவிக்கும் அடிமைகளாக அரசு அதிகாரிகள் இருப்பதும், அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த குவாரிகள் மூலமாக 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவுக்குக் கடத்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் கனிமக் கொள்ளையின் பின்னணியில், வேப்பனஹள்ளி எம்எல்ஏவும் அதிமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவருமான கேபி முனிசாமி, மற்றும், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ஒய்.பிரகாஷின் உறவினர்கள் இருக்கிறார்கள் எனவும், ஆளும் மத்திய , மாநில அரசியல் முக்கிய புள்ளிகளின் பலரும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பல இடங்களில் சட்டவிரோத கல்குவாரியை இயக்கி வருகிறார்கள். “எம்.சாண்ட்’ தயாரிப்பு மற்றும் கையாள்வதற்கான தற்காலிக உரிமத்தை மட்டும் பெற்றுவிட்டு, பல ஆண்டுகளாகக் கனிமங்களைக் சுரண்டி விற்று வருகின்றனர் எனவும்; அரசியல் புள்ளிகளின் ஆசீர்வாதத்தோடுதான் எல்லா காலமும் கனிம வளம் கடத்தப்பட்டு வருகிறது எனவும் பகீர் கிளப்புகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
இதனிடையே, கிரானைட் குவாரி டெண்டர் தொடர்பாக, செல்லகுமார் தாக்கல் செய்திருந்த மனு, நவம்பர் 22 விசாரணைக்கு வந்தது. செல்லகுமார் ஆஜராகி வாதத்தை துவக்கினார். குவாரியால் அந்தப் பகுதியில் யானைகள், மனிதர்கள் உயிரிழப்பு குறித்து தெரிவித்தார்.
அதற்கு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் குவாரி நடக்காது என்றும், வனப்பகுதிக்கு அப்பால் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உத்தர வாதம் பெறுவதாகவும், அதை அரசு தரப்பில் சரிபார்ப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.
டெண்டர் எடுத்தவர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாத விபரங்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வாதங்கள் குறித்து, செல்லகுமாரிடம், முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. பதில் திருப்தி அளிக்கவில்லை எனவும்; உங்களை குறைத்து மதிப்பிடவில்லை எனவும் சட்ட ரீதியாக பதில் அளிக்க வழக்கறிஞரை வைத்து வாதாடுங்கள்’ என்று முதல் பெஞ்ச் தெரிவித்தது. இதுகுறித்து, உங்கள் வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுங்கள்’ எனவும் அறிவுறுத்தி விசாரணையை, வரும் 28-க்கு, தள்ளி வைத்தனர்.
சட்டவிரோதமாக, கனிம வளங்கள் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் கடத்தப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் பரபரக்கும் சூழலில் முதல்வருக்கு முன்னாள் எம்பி அனுப்பிய கடிதமும் நீதிமன்ற வழக்கு விசாரணையும் அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.
– மணிகண்டன்.