S.I.R. இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள், தங்களைத் தேடுகிறார்கள்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வுக்குப் பிறகு 97 இலட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587 என்பதிலிருந்து 5,43,76,755 என்று குறைந்துள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை குறையும்போது, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் குறைய வேண்டும். அல்லது அதே அளவிலாவது இருக்க வேண்டும். 68ஆயிரம்+ வாக்குச்சாவடிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 75ஆயிரம்+ வாக்குச்சாவடிகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஏற்கனவே தொடர்ச்சியாக வாக்களித்து வந்த வாக்குச்சாவடிக்கு பதிலாக புதிய வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் வாக்காளர்கள், புதிய வாக்குச்சாவடி தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறதா, தொலைவில் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே வாக்களிக்கும் முடிவை எடுப்பார்கள். பலர் தேர்தல் நாளன்று பழைய வாக்குச்சாவடிக்கு வந்து பார்த்துவிட்டு, வேறு வாக்குச்சாவடி என்பதை அறிந்ததும், வாக்களிக்காமல் திரும்பிப் போவதும் உண்டு.
நீக்கப்பட்டிருக்கும் வாக்காளர்களில் வீடு மாறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். அடுத்ததாக, இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளது. கண்டறியப்பட முடியாதவர்கள் என்ற பெயரிலும் பலரை நீக்கியுள்ளார்கள். இவையெல்லாம் சரியாக நடந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.
கிடைக்கும் பதிலோ, ஏகப்பட்ட குழப்பங்கள், தவறுகள், அக்கறையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்கு மாறியவர்களில், கணவனுக்கு வாக்கு உள்ளது. மனைவிக்கு வாக்கு இல்லை. பிள்ளைகள் இருவரில் இளையவருக்கு வாக்கு உள்ளது. மூத்தவருக்கு வாக்கு இல்லை.
இரண்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு நீக்கவில்லை. இரண்டு இடங்களிலும் அவர்களுக்கு வாக்கு அப்படியே இருக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் கவிஞராகவும், எம்.ஜி.ஆர். கலைத்த சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தவர் பிரபல பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன். மயிலாப்பூர் தொகுதி தேவடி தெருவில் அவர் வசித்த வீட்டில்தான் வாக்குரிமை இருந்தது. அவர் இறந்துபோய் 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிச்சயமாக அவர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்பித் தந்திருக்க மாட்டார். ஆனாலும், சீராய்வுக்குப் பிறகான வாக்காளர் பட்டியலிலும் அவர் பெயர் உள்ளது.
இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள் தங்களைத் தேடுகிறார்கள். இதுதான் எஸ்.ஐ.ஆர். லட்சணம்.
பா.ஜ.க. எதிர்பார்ப்பது, தனக்கு செல்வாக்கு இல்லாத மாநிலத்தில் இத்தகைய வாக்காளர் பட்டியல் குழப்பத்தைத்தான். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த எஸ்.ஐ.ஆரை ஆதரித்துதான் வழக்கு போட்டிருக்கிறார். பா.ஜ.க.வின் பி டீம், சி டீம் கட்சிகளுக்கு இது பற்றி எந்த இழவும் தெரியாது. வாக்குரிமையை நிலைநாட்ட விரும்பும் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உதவுவதற்காக உள்ள ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். தி.மு.க.வின் ‘மக்களுடன் ஸ்டாலின்‘ செயலியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் முழு விவரமும் உள்ளது.

வாக்காளர் ஒவ்வொருவரும் தங்கள் வாக்கு, தங்கள் குடும்பத்தினர்-தெரிந்தவர்கள் வாக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜனவரி 18ந் தேதிக்குள் படிவம் 6, படிவம் 8 ஆகியவற்றின் மூலம் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கும், பெயர்-முகவரி திருத்தங்களை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அதற்குரிய ஆவணங்களை அளிக்க வேண்டும்.
வருகின்ற சனி, ஞாயிறுகளில் தேர்தல் ஆணையத்தின் மூலம் அவரவர் வாக்குச்சாவடியில் நடத்தப்படும் முகாம்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தி.மு.க. கூட்டணியின் பாக முகவர்கள் இருப்பார்கள். யார் யாருக்கு வாக்குரிமை உள்ளது. யார் யார் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி மூலம் கண்டறிந்து உங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் மூலம் உங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ளுங்கள்.
திருவள்ளுவர் ஆண்டு 2056 மார்கழி 7
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.